அ
ம்மாவின் பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்துல பஸ் ஸ்டாண்டு. ஒரு நாளைக்கு நாலு பஸ் வரும். பள்ளிக்கூட நேரத்துல ரெண்டு வரும். பஸ் வந்தா எட்டிப் பார்ப்பாங்க. அம்மா மட்டுமில்ல எல்லாரும்தான். யார் வர்றாங்கன்னு பாக்குறதுல அவ்வளவு ஆவல். “முனியாண்டி உங்கப்பா இறங்குறாரு. மாட்டு டாக்டரு வர்றாரு. டீச்சரு இறங்குறாங்க டோய்” இப்படித்தான் பேசிக்குவாங்களாம்.
சில நேரம் பஸ்ஸுல விருந்தாளி வருவாங்க. அப்ப எல்லாரும் சேர்ந்து கத்துவாங்க. “ஏய் கழைக்கூத்தாடி வந்துருக்காங்க டோய், ஈயம் பூசுறவுங்க வந்துருக்காங்க”ன்னு கத்துவாங்களாம். இவுங்கல்லாம்தான் பள்ளிக்கூட புள்ளைங்களின் உலகமாம். அவுங்க வந்து போறவரைக்கும் அங்கதான் இருப்பாங்களாம். சில நேரம் வகுப்புக்கே போக மாட்டாங்களாம். போகாததுக்கு ரெண்டு அடிதான் விழுமாம். அது ஒண்ணும் அம்மாவுக்குப் பெரிய விஷயமில்லை.
நாடோடியா வர்றவுங்க ஒவ்வொருத்தரும் வேற மாதிரி இருப்பாங்களாம். வேற வேற வேலை செய்வாங்களாம். ஈயம்பூசுறவுங்க “ஈஈஈஈ…..யம் பூசலை….ய்யோ. பா…த்திரம் அடைக்கலை…யோ…”ன்னு பாடிக்கிட்டே போவாங்க. நரிக்குறவர்கள் “சாமி பாசி, சாமி ஊசி, ஊக்கு சாமி, முள்ளு வாங்கி…” அப்டின்னு உட்டு உட்டு கேப்பாங்க.
இந்த மாதிரி வர்ற எல்லாருக்குமே தமிழ் தெரியும். ஆனா நம்மள மாதிரி பேசமாட்டாங்க. வேற மாதிரி பேசுவாங்க. அதோட அவுங்களுக்கு வேற மொழியும் தெரியும். புள்ளைங்ககிட்ட எதாவது உதவி கேக்கனும்னா, “சாமி, கடை எங்கருக்கு? சாமி தண்ணி கொஞ்சம் தருவியா?” அப்டின்னுதான் கேப்பாங்களாம். சாமின்னு கூப்புட்றது அம்மாவுக்கு குஷியா இருக்குமாம். எதாவது உதவி கேக்க மாட்டாங்களான்னு இருக்குமாம்.
அவுங்க பேசிக்கிறதைக் கேக்குறதுதான் அம்மாவுக்கு ஜாலியா இருக்குமாம். “பஹா அப் பாஹி பாக்ஹு. பிஸ்ஸித அபுஜிக்கு, குஸ்ஸுதாகு. தக் பக்கிக்கி. ப்னஜ் மப் மா. தி…தி…தி” அத அப்டியே வந்து அம்மா பேசி காமிப்பாங்களாம். அதோட அதுக்கு விளக்கம் வேற தருவாங்களாம். “அங்க இருக்கு பாரு. அந்த வழியில போகணும். அந்தக் காட்டுக்குள்ளதான் எல்லா குருவியும் நிக்குது. இங்க ஒரு அய்யா வந்தாரு. புடிச்சிக்கிட்டு வீட்டுக்கு வரச் சொன்னாரு.” அம்மாவோட இந்தப் பேச்சு ரொம்ப பிரபல்யமா ஆகிடுச்சி. அதனால அம்மாவுக்கும் இட்டுக்கட்டி பேசுற பழக்கம் கூடிடுச்சி. கேக்குறவுங்களும் இன்னொரு தடவ சொல்லுன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. அச்சு அசலா நாடோடி மாதிரியே பேசுறாளேன்னு பாராட்டுறது, திரும்ப சொல்லச் சொல்லி கேக்குறதுன்னு தொடங்குச்சி.
சில பேரு அம்மாவைக் கூப்பிட்டு,“இந்த மாதிரி போய் அவுங்க பக்கத்துலயே நின்னின்னா மையப் போட்டுக் கூட்டிட்டுப் போயிடுவாங்க. அப்ப நீ ஊர் ஊரா அலையணும். மரத்தடியிலயும் ரோட்டுலயும் தூங்கணும். கொக்கும் காக்காவும்தான் சாப்பாடு. அதனால பத்தரமா இரு”ன்னு அறிவுரை வேற சொல்வாங்க. ஆனாலும் அம்மா பேசிக் காட்டிட்டு, ரெண்டு பாராட்டு,ரெண்டு அறிவுரைன்னு வாங்கிக்குவாங்க.
அம்மாவோட இந்தப் பேச்சு விஷயம், வீட்டுக்கு வந்துடுச்சி. குச்சிய எடுத்து காலுல சப்பு சப்புசப்புன்னு அடி. ஓடுகாலு ஓடுமா அப்படின்னு பல தடவ கேட்டாங்களாம். அம்மாவும் இல்ல… இல்ல…ன்னு ஒவ்வொரு தடவயும் சொன்னாங்களாம். ஊர்ல எல்லாருக்கும் அடி விஷயம் பரவிடுச்சி. அதனால யாரும் கேக்குறதும் இல்ல. ஆனா அம்மாவுக்கு மட்டும் பேசணுங்கிற மாதிரியே இருக்குமாம். வீட்ல யாரும் இல்லாதப்ப பேசிப் பாத்துக்குவாங்களாம்.
ஒருநாள் பள்ளிக்கூடத்து ஆண்டு விழாவுல நாடோடி டான்ஸ் போடலாமான்னு டீச்சர் கேட்டதுதான். எல்லாரும் ஓ…ன்னு கத்தி சரின்னு சொன்னாங்களாம். ரெண்டு பேர் பெண் வேஷம். ரெண்டு பேர் ஆண் வேஷம். அதுல அம்மாவும் ஆடுனாங்களாம். ஆண்டு விழா நடந்துச்சி. கழுத்துல டின்னு டப்பாவை மாட்டிகிட்டு, கொத்தா ஊசி, மணி, பாசிய கையில வச்சிகிட்டு. குதிச்சி குதிச்சி ஆடணும். ஆண் இந்தப் பக்கம் வந்தா பெண் அந்தப் பக்கம் ஓடணும். பின்னாடி இருந்து புள்ளைங்க பாடுனாங்களாம்.
நாங்க நரிக்கொம்பு வித்தாலும் விப்போமுங்க
அந்த நரியைப் போல தந்திரங்கள் செய்யமாட்டோங்க
டமுக்கு டப்பா டய்யாலோ!
டான்ஸ் முடிஞ்சி அரை மணி நேரம் கைத்தட்டு ஓயவே இல்லையாம். சிறப்பு விருந்தினரான இன்ஸ்பெக்டரும் இந்த டான்ஸ் பத்திதான் பேசுனாராம். அம்மாவோட அம்மாவான எங்க பாட்டிக்கு என்ன பண்றதுன்னே தெரியலையாம். வீட்டுக்கு வந்து ஒண்ணுமே பேசலையாம்.
ஆண்டு விழா முடிஞ்சி ரெண்டுவாரம்கூட ஆகல. நாடோடிங்க வந்துட்டாங்களாம். அம்மாவுக்கு அங்க போகவும் பயம். போகாம இருக்கவும் முடியலை. போயிட்டு டக்கு டக்குன்னு திரும்பிடுவாங்களாம். அவுங்ககிட்ட “மைய என் கண்ணுல போடுங்களேன். நானும் உங்க பின்னாடியே வர்றேன்” அப்டின்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டாங்களாம். மை டப்பாவைத் தொரப்பாங்களான்னு காத்துக் கிடந்தாங்களாம். சில நேரம் மை அம்மா மேல பட்ட மாதிரியே இருக்குமாம். கொஞ்ச நேரம் அவுங்க சாப்பாட சாப்புட்ற மாதிரி இருக்குமாம்.
இல்லன்னா பேசிக்கிட்டே பாசி கோக்குற மாதிரி இருக்குமாம். கடைசியா அவுங்க கெளம்புற நாள் வந்துடுச்சி. மூட்டைய தலையில தூக்கி வச்சாங்களாம். நல்ல வேளை அம்மா அங்க நின்னாங்க. அவுங்க பின்னாடியே அம்மா நடந்தாங்களாம். அவுங்க நடக்கறப்போ யாரோ இழுத்துகிட்டு போன மாதிரி இருந்துச்சாம். மொத பஞ்சாயத்து ஆபீசு தாண்டுனாங்களாம். அடுத்து கிணறு. அடுத்து மகமாயி கோயிலு… திடீர்னு முழிச்சிப் பார்த்தா எல்லாம் கனவாம்!
(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago