இடம் பொருள் மனிதர் விலங்கு: நான் ஒரு பெண்

By மருதன்

டக்கமாக இரு. சண்டை போடாதே. விட்டுக்கொடுத்துப் போ. மெல்லப் பேசு. வீட்டு வேலைகளைப் பழகிக்கொள். நண்பர்களைக் குறைத்துக்கொள். உறவினர்களைக் கவனித்துக்கொள். குழந்தைகளைப் பார்த்துக்கொள். தூங்காதே. அழாதே. குதிக்காதே. சிரிக்காதே. ஓடாதே!

ரொம்ப நன்றி ஐயா, மூச்சாவது விடலாமா அதுவும் கூடாதா என்று கேட்க வேண்டும் போலிருந்தது மேரிக்கு. வீட்டிலுள்ளவர்கள்தான் என்றில்லை, முன்பின் தெரியாதவர்கள்கூட நின்று நிதானமாக நான்கு அறிவுரைகளை வழங்கிவிட்டுதான் நகர்ந்து சென்றார்கள். மேரிக்குக் குழப்பமாக இருந்தது. இருபது வயதைக் கடந்துவிட்டாலும் என்னை ஏன் எல்லோரும் குழந்தைபோல் நடத்துகிறார்கள்? அங்கே போ, இங்கே வா, அதைச் செய், இதைச் செய்யாதே என்று எல்லோரும் ஏன் எனக்கு வழி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்?

மேரி வசித்தது 18-ம் நூற்றாண்டு லண்டனில். அவருடைய அப்பா விவசாயி. மகா கோபக்காரர். சொல்பேச்சைக் கேட்காவிட்டால் மேரியை அடித்துவிடுவார். என்ன செய்தாலும் திட்டுவார். எவ்வளவு உதவிகள் செய்தாலும் அவருக்குப் போதவே போதாது. அப்பா, நான் படிக்க வேண்டும் என்று மேரி சொன்னால், நீ படித்தது போதும் போய் வீட்டு வேலையைப் பார் என்று விரட்டுவார். உனக்கு எதுக்குப் படிப்பு என்று கிண்டலும் அடிப்பார்.

அடியைவிட, திட்டைவிட இந்தக் கிண்டல்தான் மேரிக்கு அதிக வலியை ஏற்படுத்தியது. உனக்கு எதுக்குப் படிப்பு என்பதன் பொருள் என்ன? ஒரு பெண்ணுக்குப் படிப்பு அநாவசியம் என்பதுதான் அல்லவா? அப்பா மட்டுமல்ல, மேரி சந்தித்த பலரும்கூட இப்படித்தான் கிண்டலடித்தார்கள். நீ படித்து என்ன செய்யப் போகிறாய் மேரி? படிப்பதால் உண்மையிலேயே ஏதாவது பலன் இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா? எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்?

படிக்க முடியாமலேயே போய்விட்டது. வேலைக்குப் போகலாம் என்று முடிவெடுத்துச் சிலரிடம் பேசியபோது எல்லோரும் ஒரே மாதிரியாக சிபாரிசு செய்தார்கள்.

மேரி, நீ ஏன் குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் எடுக்கக் கூடாது? மேரி, நீ ஏன் ஒரு பணக்கார வீடாகப் பார்த்து அவர்களுடைய வேலைக்காரியாக மாறக் கூடாது? மேரி, எனக்குத் தெரிந்த ஒரு வயதான சீமாட்டி இருக்கிறார், உடல்நிலை சரியில்லை. அவரை அருகிலிருந்து கவனித்துக்கொள்ள முடியுமா? நிச்சயம் உனக்கு இந்த வேலை பிடிக்கும் பாரேன்.

ஏன் பிடிக்கும்? ஏனென்றால் நான் ஒரு பெண். எனக்கு வீட்டு வேலை செய்வது பிடிக்கும். வயதானவர்களைப் பார்த்துக்கொள்வது பிடிக்கும். குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பது பிடிக்கும். வீட்டோடு அடைந்துகிடப்பது பிடிக்கும். வீட்டுக்காகவே இருபத்து நான்கு மணி நேரமும் சிந்திப்பதும் வீட்டுக்காகவே உழைப்பதும் எனக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும். ஏனென்றால் நான் ஒரு பெண்! அழுகையும் கோபமும் எரிச்சலும் வந்தாலும் இந்த வேலைகள் எல்லாவற்றையும் அவர் செய்யத்தான் வேண்டியிருந்தது.

பிறகு ஒருநாள் முடிவெடுத்தார். என்னால் இந்த உலகை மாற்ற முடியாது, ஆனால், என்னை மாற்றிக்கொள்ளமுடியும். என் காதுகளை இனி மூடிக்கொள்ளப் போகிறேன். கண்களைத் திறந்துவைத்துக்கொள்ளப் போகிறேன். எனக்கான உணவை, எனக்கான ஆடையை, எனக்கான நண்பர்களை நானே தேடிக்கொள்ளப் போகிறேன். எனக்கும் ஒரு தலை இருக்கிறது. அதில் மூளை என்று ஒரு பொருள் இருக்கிறது. அது நான் பயன்படுத்துவதற்காகவே இருக்கிறது. நான் என்ன செய்யவேண்டும் என்பதை அது எனக்குச் சொல்லிக்கொடுக்கும்.

எனக்குப் பிடிக்காததைப் பிடிக்கவில்லை என்று சொல்லப் போகிறேன். பிடித்ததைப் பிடிக்கிறது என்பேன். இதில் என்ன தவறு இருக்க முடியும்? ஐயா, தவறாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே. தவறு செய்வது மனித இயல்பு என்றெல்லாம் நீங்கள்தானே சொல்லி வைத்திருக்கிறீர்கள். நானும் மனித இனம்தானே? தடுக்கிக் கீழே விழுந்தால் எழுந்து நிற்கத் தெரியாதா எனக்கு?

ஒரு பெண் வீட்டுவேலை மட்டும்தான் செய்ய வேண்டும் என்று நீங்கள் சொன்னால், முடியாது என்பேன். அது பதில்தானே தவிர, சண்டையல்ல. எனக்குப் படிக்கத்தான் பிடித்திருக்கிறது என்று சொன்னால் நான் எனக்குப் பிடித்ததைச் செய்கிறேன் என்று பொருள். அதைச் செய்ய எனக்கு உரிமை இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒன்பது அறிவுரைகள் சொல்வதைத் தயவுசெய்து நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். என்னை எப்போதும் பின்தொடர்ந்து வராதீர்கள். நான் என்ன செய்கிறேன் என்று கண்காணித்துக்கொண்டே இருக்காதீர்கள். என் மீது உங்களுக்கு அன்பு இருந்தால் என் சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுங்கள்.

மேரி, நீ சொல்வதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால், இதையெல்லாம் உலகம் புரிந்துகொள்ளுமா என்று கேட்டார்கள் தோழிகள். மேரி உல்ஸ்டன்கிராஃப்ட் தெளிவாகப் பதிலளித்தார். ‘நான் புரியவைப்பேன். இந்த உலகம் எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்துவிட்டது. என்னிடம் இருந்தும் சிலவற்றை இந்த உலகம் புதிதாகக் கற்றுக்கொள்ளட்டும். சிந்திப்பதோ படிப்பதோ உன் வேலையல்ல என்று சொன்னவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இனி நான் எழுதவும் போகிறேன். இதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. இதுதான் நான். ஆம், நான் ஒரு பெண்.’

நாவல், பயண நூல், வரலாறு என்று தொடங்கி பல துறைகளில் மேரியின் படைப்புகள் வெளிவர ஆரம்பித்தன. பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் அனைவருக்கும் மேரி இன்றுவரை ஒரு முன்னோடியாக இருக்கிறார்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்