பூமி என்னும் சொர்க்கம் 7: கடலுக்குச் சென்ற திமிங்கிலம்

By என்.ராமதுரை

நி

லத்தில் வாழும் விலங்குகளில் யானைதான் மிகப் பெரியது. ஆனால், கடலில் வாழும் நீலத் திமிங்கிலத்தைப் பிடித்து, யானைக்கு அருகில் கிடத்த முடிந்தால் திமிங்கிலம்தான் பெரியதாக இருக்கும். பூமியில் வாழும் விலங்குகளில் நீலத் திமிங்கிலம்தான் பெரியது. அதன் நீளம் 30 மீட்டர். எடை 180 டன்கள் (1,80,000 கிலோ). யானையின் எடை அதிகபட்சம் 7 டன்கள் (7000 கிலோ).

நீலத் திமிங்கிலம் கடல் வாழ் விலங்குதான். ஆனால், யானையைப் போல அது காற்றைச் சுவாசிக்கும். யானையைப் போல் குட்டி போட்டுப் பால் கொடுக்கும்.

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கடல்களில் மட்டுமே உயிரினங்கள் இருந்தன. நிலத்தில் வாழ இயலும் என்ற நிலைமை ஏற்பட்டபோது சில உயிரினங்கள் கடலிலிருந்து நிலத்துக்கு வந்தன. அவை நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவையாக இருந்தன. இப்போதும் தவளையைப் போல் சில உயிரினங்கள் உண்டு. பின்னர் நிலப் பகுதியில் முதுகெலும்புள்ள பல உயிரினங்கள் தோன்றின. அவற்றில் சில மீண்டும் கடலுக்கே திரும்பின. பரிணாம வளர்ச்சியில் அவற்றின் வழியில் வந்த ஓர் உயிரினம்தான் திமிங்கிலம். எந்த விலங்கு பின்னர் திமிங்கிலமாக மாறியிருக்கும் என்று விஞ்ஞானிகள் தடயங்களைத் தேடிவந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானை ஒட்டியுள்ள கடலுக்கு அடியில் அதற்கான தடயம் கிடைத்தது.

கடல் நீரில் வாழ்ந்தாலும் மீன்களுக்கும் திமிங்கிலத்துக்கும் எந்தவிதமான ஒற்றுமையும் கிடையாது. ஒட்டகமும் பசுவும் திமிங்கிலத்தின் தூரத்து உறவினர்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மீன்கள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனைச் செவுள்கள் மூலம் எடுத்துக்கொண்டு உயிர் வாழ்கின்றன. அவற்றுக்கு நுரையீரல் கிடையாது. ஆனால், திமிங்கிலங்களுக்கு நம்மைப் போல நுரையீரல் உண்டு. அவை நம்மைப் போல மூச்சை இழுத்து, மூச்சை வெளிவிடுகின்றன. அவ்வப்போது காற்றைச் சுவாசிப்பதற்காகவே திமிங்கிலங்கள் நீருக்குள்ளிருந்து மேலே வருகின்றன.

திமிங்கிலம் ஒரு தடவை தலையை வெளியே நீட்டி மூச்சை இழுத்துக்கொண்டால் சுமார் 90 நிமிடங்கள்வரை நீருக்குள் இருக்க முடியும். இதற்கு ஏற்ற வகையில் தன் தசைகளில் ஆக்சிஜனை நன்கு சேமித்து வைத்துக்கொள்ளும் விசேஷ வகைப் புரதம் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

திமிங்கிலங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பற்களைக் கொண்ட திமிங்கிலங்கள் ஒரு வகை. இன்னொரு வகைத் திமிங்கிலங்களுக்குப் பற்கள் கிடையாது. அதற்குப் பதிலாகச் சீப்பு போன்று வாய்க்குள் வடிகட்டிகள் உள்ளன. இவற்றுக்கு பலீன் திமிங்கிலங்கள் என்று பெயர்.

இறால்களைப் போல் இருக்கும் கிரில்கள்தான் இவற்றுக்கு முக்கியமான உணவு. கடலுக்குள் சுமார் 100 மீட்டர் ஆழத்தில் இவை கூட்டம் கூட்டமாக வாழும். பலீன் திமிங்கிலம் தனது பெரிய வாயைத் திறந்தபடி நீருக்குள் சென்றுகொண்டிருக்கும்போது அதன் வாய்க்குள் பல ஆயிரம் கிரில்கள் அகப்பட்டுக்கொள்ளும். திமிங்கிலம் வாயை மூடிக்கொண்டு தண்ணீரை வெளியேற்றி, கிரில்களைச் சாப்பிட்டுவிடும்.

அண்டார்டிகா கண்டத்தை ஒட்டிய கடல் பகுதிகளில் பலீன் திமிங்கிலங்கள் நிறைய உள்ளன. திமிங்கிலங்கள் மட்டுமன்றி டால்பின், சீல்கள், பார்பாய்ஸ் முதலிய கடல்வாழ் விலங்குகளும் நீருக்குள்ளிருந்து வெளியே வந்துதான் சுவாசிக்கின்றன.

பல நூற்றாண்டுகளாகவே திமிங்கிலங்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. ஆனால், நவீனக் கப்பல்களும் கருவிகளும் வந்த பின்னர் அதிக அளவில் திமிங்கிலங்கள் வேட்டையாடப்பட்டன. ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் திமிங்கிலங்கள் கொல்லப்பட்டன. எனவே, இதைக் கட்டுப்படுத்த உலக அளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திமிங்கிலம் என்ற இனமே அழிந்துவிடுமோ என்ற கவலை ஏற்பட்டு, 1986-ம் ஆண்டு வாக்கில் திமிங்கில வேட்டை சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டது.

ஆனால் ஜப்பான், நார்வே, ஐஸ்லாந்து ஆகியவை இந்தத் தடைச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, தொடர்ந்து திமிங்கில வேட்டையில் ஈடுபட்டுவருகின்றன. ஜப்பானில் திமிங்கில இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. திமிங்கில வேட்டையில் ஈடுபட்டுள்ள ஐஸ்லாந்து நாட்டில், மக்கள் திமிங்கில இறைச்சியை விரும்பி உண்பதில்லை அதனால், திமிங்கில இறைச்சியை அந்த நாடு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்கிறது.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: nramadurai@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்