அம்மாவின் சேட்டைகள் 09: வேஷம் கட்டிப் பாடுவார்கள்!

By சாலை செல்வம்

அலங்காரம் செய்வது அம்மாவுக்குப் பிடிக்குமாம். தன்னை அழகுபடுத்திக்கொள்வது, கண்ணாடி முன்னால் நின்று முகத்தில் எதாவது பூசிக்கொள்வது, மற்றவர்கள் பார்க்கும்படியாக எதையாவது அணிந்துகொள்வது என்று நேரம் கழியுமாம். “சீவி முடிச்சி சிங்காரிச்சி சிவந்த நெத்தியில் பொட்டு வச்சி…” என்று அம்மவைப் பார்த்துப் பாடுவார்களாம். ஆனாலும் அம்மா தன்னை ஜோடிச்சிக்கொள்ள வீட்டில் எதுவும் இருக்காதாம். தீபாவளிக்கு வாங்கிக் கொடுக்கிற ரப்பர் வளையல் பிஞ்சிப் போட்டால்கூட பிய்யாமல் கையில கெடக்குமாம். அதுக்கப்புறம் பொங்கலுக்குதானாம். கழுத்துக்கு ஒரு பாசி. கைக்கு மூன்று மூன்று வளையல்கள். ஆறு கலர் பொட்டு. அதை அழுது அழுது வாங்குவாங்களாம். அம்மா ஆடுற ஆட்டத்துக்குப் பாசி மூணாவது நாளே அறுந்துடுமாம். சிலநேரம் மண்ணில் கொட்டிடுமாம். தரையில அறுந்து விழுந்தா பாசி குதிச்சி குதிச்சி நாலாபுறமும் ஓடிடுமாம். குத்துக்கால் போட்டு நடந்து ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுக்கணும். எடுத்துக் கோத்துப் போட்டா பாசி சின்னதாக ஆயிடுமாம்.

கலர் பொட்டுதான் முகத்தை அலங்கரிக்க பேருதவியா இருக்குமாம். புருவத்துக்கு மேல புள்ளி புள்ளியா வச்சிக்கலாமாம். நெற்றி நடுவுல ஒரு வட்டப் பொட்டு வச்சு, சுற்றி வேற கலர்ல வட்டம் போடணுமாம். பாட்டி இல்லாத நேரம் பார்த்து புடவையை எடுத்து கட்டிக்குவாங்களாம். கிணற்றுல தண்ணீர் இறைக்கிற தாம்புக்கயிறைவிட அது நீளமா இருக்குமாம்.

அம்மாவின் அலங்காரப் பைத்தியத்துக்குக் காடுதான் சரியான இடமா இருந்ததாம். காட்டாமணக்குப் பூவுல மூக்குத்தி, தோடு, ஜிமிக்கி செஞ்சிப் போட்டுக்குவாங்களாம். இலையில நெற்றிச்சுட்டி செய்யலாமாம். தும்பைப்பூவுல செய்ற முறுக்கைக் காதுல வளையம் மாதிரி போட்டுக்கலாமாம். மாடல் மாடலா தோடு போடணும்னா சின்ன சூரியகாந்தி, நீலக்கல்லுக்கு விஷ்ணுகிரந்திப்பூ, மஞ்சள் கல்லுக்கு நெருஞ்சிமுள்ளுப்பூ என்று வகை வகையாகக் கிடைக்குமாம். ஒட்டுப்புல் சீசன்தான் அலங்காரத்துக்கு ஏற்றதாம். விதவிதமா வில்லை செய்து, அதில் கலர் கலர் பூவை ஒட்டித் தலையில ஒட்டிக்கலாமாம். சட்டையிலும் ஒட்டிக்கலாமாம்.

“காடுகொள்ளாமல் பூ இருக்கும். எல்லாத்தையும் தலையில வச்சிட முடியாது. மழைபேஞ்சி அடுத்த நாளே பூக்கும் மரமல்லி. அடைமழைன்னா அதுக்கு இன்னும் ஜோர். மரத்தடியே வெள்ளை வெளேர்னு கெடக்கும். வாசனை வீட்டுக்குள்ள வந்து எழுப்பும். மல்லிப்பூ கட்ற மாதிரி கட்டாம பின்னணும். பின்னி முடிச்ச பூவை முடிச்சி போடுறதுதான் கஷ்டம்.

தலையில அழகா வச்சிக்கலாம். மகிழம்பூ ஊருக்கே ஒரு மரம். அது எல்லாருக்கும் புடிச்ச பூ. காலங்காட்டியும் போய் பொறுக்கணும். மகிழம்பூ கோக்க சீவு குச்சிதான் ஊசி. பூவைக் கோத்து எடுத்தா மூணு நாள் தலையில வச்சிக்கலாம். மகிழம்பூ காயக் காயத்தான் வாசனை. காட்டுக் கனகாம்பரத்தையும் காட்டு மல்லியையும் கால்கட்டுல கட்டிடலாம். மூணு முழம் நீளத்துக்குப் பூக்கட்டி அதை இன்னொரு ஜடை மாதிரி தொங்கவுட்டுத் தலையை ஆட்டிக்கிட்டு நடப்பேன். இதைவிடத் தாழம்பூ பறிக்கப் போவோம். தாழம்பூ புதரைப் பற்றி பாம்புக் கதை நிறைய இருக்கும்.

பார்த்துப் பார்த்து, பயந்து பயந்து பறிப்போம். தாழம்பூ ஜடைக்கு அதை அழகா கத்திரிக்கோலால வெட்டணும். எல்லாருக்கும் வராது. சவுரி முடி வச்சிப் பின்னி அடியில குஞ்சம் வச்சிக் கட்டி, தாழம்பூவைத் தைக்கணும். தாழம்பூக்கு நடுவுல கலர் கலர் நூலை ஸ்டார் மாதிரி வைப்பாங்க. தலை முடியை யாரோ இழுக்குற மாதிரி இருக்கும். இந்த மாதிரி ஜடை தச்சிக்கிற அன்னைக்குப் பட்டுப் பாவாடை கட்டி, கொலுசு போட்டுக்கிட்டு கோயிலுக்குப் போவோம். மாமா வீடு, சித்தப்பா வீடுன்னு போய் போய் காமிச்சிட்டு வருவோம். மொத்தத்துல ஊருக்கே ஜடை தச்சது தெரியணும்.

சில நேரம் போட்டோ வேற. இந்த மாதிரி நேரத்துல பக்கத்து வீட்டுக்காரவுங்க வேற, இரு இரு பாவடைக்கு மேட்சா பச்சக்கல்லு மாலை போட்டுவுடுறேன்னு போட்டு வுடுவாங்க…” இப்படியிருந்த அம்மாவோட அலங்காரப் பழக்கம், வேற மாதிரி மாறிடுச்சாம். நாடகத்துல நடிக்கிறது, அதுக்கான வேஷம் போடுறது என்று மாறிட்டாங்களாம். நாடகத்துல ராஜா வேஷம், ராணி வேஷம் போடுறது பத்தாது என்று மாறுவேடப் போட்டியில கலந்துக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். ஊர் கோயில்ல நடக்குற நிறைய நாடகங்களில் கலந்துக்குவாங்களாம். தலப்பா கட்டி, வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கிட்டு, முறுக்கு மீசைய வரைஞ்சி உடுவாங்களாம். கோலைத் தூக்கி தோள்ல வச்சிக்கிட்டு, மீசைய முறுக்கிக்கிட்டு வசனம் பேசணுமாம், பாடணுமாம்.

வண்டிமாடு அத்துக் கொண்டு

வாலெடுத்தோடுவதை

கண்டுவிட்ட கட்டுக்காளை – சண்டை

போட ஓடுதடா

பாடிக்கிட்டே ஓடுற மாதிரி நடிக்கணும். குதிக்கிற மாதிரி, பால் கறக்குற மாதிரியெல்லாம் நடிக்கணும். அம்மாவுக்குப் பூ பறிக்கிறது, பவுடர் அடிக்கிறதெல்லாம் மறந்துபோய் வேஷங்கட்டுறதில் ஆசை வந்துவிட்டதாம்.

“அதை ஏன் கேக்குற. எனக்கு பவுடர் அடிக்கிறது , பூ கட்றதெல்லாம் மறந்து போச்சி. வேஷங்கட்டுறதுன்னு ஆயிடுச்சி. ஒருமுறை பக்கத்து ஊர்ல போயி விடிய விடிய வள்ளித் திருமணம் பார்த்துட்டு வந்த கையோட யாரு வள்ளி, யாரு முருகன்னு பேசி முடிச்சிடுவோம். பேசும்போது முருகன் வேஷம்கட்ட என்னென்ன பொருள் வேணும், என்னென்ன வசனம் சொல்லணும்னு முடிவு பண்ணிக்குவோம். பேசிக்கிட்டிருக்கும்போதே வேஷங்கட்டுற மாதிரி இருக்கும். பவுடரைத் தண்ணிப் போட்டு கொழச்சி வச்சிக்கணும். மை டப்பா, மை போட குச்சி இன்னும் என்னல்லாம் வேணுமோ அவ்வளவையும் சுத்தி வச்சிக்கணும்.

வேஷங்கட்ட உட்கார்ந்துட்டா அதுக்கப்புறம் நான் நானில்லை. கதாபாத்திரம்தான். மூணு மணி நேரம் கலைக்காம பத்திரமா வச்சிருக்கணும். அது சந்தோஷமா இருக்கும். வாங்க வாங்க நான் நடிக்கிறதைப் பார்க்க வந்திருக்கீங்களான்னு மனசு சொல்லும். அச்சச்சோ மாமால்ல வந்திருக்காங்க, தப்பு விடாம பேசணும்னு தோணும்.

ஒருதடவ குடுகுடுப்பக்காரன் வேஷம் கட்டுனேன். உடுக்கையச் செய்றதுக்கு நாங்க பட்ட பாடும், அதை அடிக்கிறதும் அதுக்கு ஏத்த மாதிரி ’குடு குடு குடு… நல்ல காலம் பொறக்குது’ன்னு சொல்றதும் சாதாரணம் இல்லை” அப்படின்னு சொல்லுவாங்க அம்மா.

இப்பக்கூட அம்மாவின் சாதாரண உடையிலும் பேச்சிலும் அலங்காரமும் வேஷங்கட்டுறதும் ஒளிஞ்சிகிட்டு இருக்கிற மாதிரியே இருக்கும்.

(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்