இடம் பொருள் மனிதர் விலங்கு: பாயும் எலி, பதுங்கும் பூனை!

By மருதன்

எலி என்று சொன்னாலே பலர் வீல் என்று கத்திவிடுவார்கள். தப்பித்தவறி எங்காவது எப்போதாவது பார்த்துவிட்டால் அவ்வளவுதான்! சிங்கம், புலி, டைனோசரைப் பார்த்ததுபோல் அலறி ஓட ஆரம்பித்துவிடுவார்கள். எலியைப் பார்த்தாலே பலருக்குக் கிலி வந்துவிடுகிறது. அது பாவம், ஏதோ யோசித்துக்கொண்டு அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும்போது நாமும் போட்டிப் போட்டுக்கொண்டு பயந்து ஓடினால், அது என்னதான் செய்யும்?

ஆனால் பாருங்கள், நாம் எவ்வளவுதான் ஓடினாலும் எலி நம்மைவிட்டுப் போகாது. நம்மாலும் எலியை விட்டுப் பிரிய முடியாது. கோபித்துக்கொண்டு பிரிந்துவிடக்கூடிய அளவுக்கு லேசான உறவா என்ன! பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் கால்களைச் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கிறது எலி. ஆரம்பம் முதலே எலிகளுக்கும் நமக்கும் மோதல்தான். குறிப்பாக, கறுப்பு எலியைப் பார்த்தாலே எல்லோரும் தலைதெறிக்க ஓடினார்கள்.

காரணம், பிளேக் எனப்படும் தொற்றுநோய்க் கிருமிகளை, கறுப்பு எலிகள் எல்லா இடங்களிலும் பரப்பிக்கொண்டிருந்தன. எலிகள் மூலமாக மனிதர்களையும் நோய் தாக்கியது. அது மட்டுமா? நம்மீது என்ன கோபமோ தெரியவில்லை, கஷ்டப்பட்டு விதைத்து அறுவடை செய்து, மூட்டைகளில் சேர்த்து வைக்கும் தானியங்களைப் பார்த்துவிட்டால் எலிகளுக்குப் படு குஷி. ஓட்டை போட்டு உள்ளே புகுந்து ஒரு வழி பண்ணிவிடுகின்றன. பிறகு எப்படி எலியைக் கண்டால் பாசம் பொங்கும்? அதனால்தான் எலி என்றாலே எல்லோரும் பயந்து ஓட ஆரம்பித்தார்கள். அல்லது பாய்ந்து வந்து ஒரு போடு போட்டார்கள். ஆனால் இதற்கெல்லாம் எலி பயந்துவிடும் என்றா நினைக்கிறீர்கள்?

எலித் தொல்லையைச் சமாளிக்க 5000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர்கள் ஒரு மாபெரும் வழியைக் கண்டுபிடித்தார்கள். சரக்குகள், துணிமணிகள், தானியங்கள் என்று முக்கியமான பொருள்களைச் சேமித்த இடங்களில் சில பூனைகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

அந்தப் பூனைகளுக்குக் கொஞ்ச நஞ்ச மரியாதையா கொடுத்தார்கள்? பால், இறைச்சி தொடங்கி என்னென்ன விருப்பமோ அனைத்தையும் கொண்டுவந்து கொட்டினார்கள். கண்ணே, மணியே என்று ஒரு நாளைக்கு நூறு முறை கொஞ்சினார்கள். ஒரே ஓர் எலியை வேட்டையாடினாலும் அன்றைய தினம் அந்தப் பூனைக்கு ராஜ மரியாதைதான். ஆனால் பெருகிக்கொண்டே போகும் எலிகளைச் சமாளிக்க பூனைகளால்கூட முடியவில்லை. நாள் முழுக்க எலியைச் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தால் அவற்றுக்கும் சலிப்பு வராதா? கால் வலிக்காதா?

1800 வாக்கில் ஐரோப்பாவில் கறுப்பு எலிகள் படிப்படியாகக் குறைந்து, பழுப்பு எலிகள் தோன்ற ஆரம்பித்தன. நிறத்தில் மட்டும்தான் மாற்றம், மற்றபடி அதே தொல்லைதான். பிரிட்டன் தன் பங்குக்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தது. எலி பிடிப்பவர்களுக்குப் பணம் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. நான், நீ என்று பலர் போட்டிப்போட்டுக்கொண்டு எலி பிடிக்க ஓடினார்கள். ஒரு பை நிறைய எலிகளைப் பிடித்துவிட்டு, கை நிறையச் சம்பாதித்தார்கள்.

ஜாக் பிளாக் என்பவர் அவர்களில் ஒருவர். இவர் சாதாரணமானவர் அல்ல, விக்டோரியா ராணியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான எலி பிடிப்பாளர். பிடித்தோமா ஒப்படைத்தோமா என்று மற்றவர்களைப் போல் இல்லாமல், பிடித்துவந்த எலியை வைத்துச் சில சோதனைகளைச் செய்துபார்த்தார் இவர். நாய்க்குட்டியைப்போல் ஓர் எலிக் குஞ்சைப் பழக்க முடியுமா? உட்கார் என்றால் அது உட்காருமா? நில், படு, சாப்பிடு, தூங்கு, தாவு, பாட்டுப் பாடு போன்ற கட்டளைகளை எலியால் புரிந்துகொள்ள முடியுமா? கொஞ்சம் கொஞ்சமாக எலியைப் பழக்க ஆரம்பித்தார் ஜாக். ஆச்சரியம்! அவர் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் கப்பென்று பிடித்துக்கொண்டது எலி.

ஒரு நாள், தன்னுடைய மாணவ எலியைப் பிடித்து அதன் குட்டி கழுத்தில் ஒரு ரிப்பனைக் கட்டி, ‘பிரிட்டிஷ் நகரப் பெண்களே, இதோ உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நல்ல நண்பர் ஒருவர் கிடைத்திருக்கிறார். விலை அதிகமில்லை, மிகக் குறைவுதான். உங்கள் எலிக்கு இப்போதே முந்துங்கள்’ என்று விளம்பரம் செய்தார் ஜாக். பிறகு என்ன நடந்தது என்கிறீர்கள்? எல்லோரும் காலையிலேயே வந்து வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள்!

அப்புறமென்ன, எலியாருக்கு ஒரே மவுசுதான். கைப்பையில் ஒரு சிறிய பழுப்பு எலி அல்லது சட்டைப் பையில் ஒரு வெள்ளெலி இருந்தால் அவர் பிரிட்டனில் பெரிய மனிதர் என்று அர்த்தம். ஜாக்கைப் பார்த்து வேறு பலரும் எலியைப் பழக்கப்படுத்த ஆரம்பித்தார்கள். எனக்கு யார் உதவியும் வேண்டாம், நானே என் எலிக்குப் பாடம் எடுக்கிறேன் என்று பலர் வீட்டில் எலி வகுப்பறையை உருவாக்கினார்கள். எங்காவது வழியில் துருதுரு கண்களோடு எலி ஒன்று ஓடினால் செய்யும் வேலையை விட்டுவிட்டு நின்று நிதானமாக ரசித்தார்கள். எலியின் புகழ் மற்ற நாடுகளுக்கும் பரவ, அங்கும் எலியை ஆசையாக வளர்க்க ஆரம்பித்தார்கள்.

இதில் பூனைக்குதான் வருத்தம். இனி என்னை யாரும் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்ச மாட்டார்களா? என் கழுத்துக்கு ரிப்பன் கிடையாதா? என்னை அங்கும் இங்கும் அலைய வைக்கும் எலிக்கு இவ்வளவு மரியாதை தேவையா? நான் பாவம் இல்லையா?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்