அம்மா பள்ளிக்கூடத்தில் படித்தபோது அவர் ஊரில் பள்ளிக்கூடம் இல்லையாம். ரெண்டு மைல் நடக்கணுமாம். ரெண்டு மைல்னா நாலு பர்லாங்கு, மூணு கிலோமீட்டர்னு பேசிக்குவாங்களாம். ஒண்ணாவதுல இருந்து எட்டாவதுவரை அப்படித்தான் பள்ளிக்கூடம் போனாங்களாம். அஞ்சாவதுவரை நாலு ஊர் பிள்ளைகளும் எட்டாவது வரை ஏழு ஊர் பிள்ளைகளும் அந்தப் பள்ளிக்கூடத்துல படித்தார்களாம். மூணு மைல் நடக்குறதுக்காக எட்டு மணிக்கே கிளம்பணுமாம்.
கோயில் காட்டைத் தாண்டிப் போறது பயமா இருக்கும். காட்டுல பாம்பு, நரி, குரங்கு, சாமி, பேயின்னு பயமுறுத்த ஏகப்பட்டது இருக்குமாம். அதனால எல்லாரும் சேர்ந்து போகணும்னு ரூல் இருக்காம். அவங்க ஊர் டீச்சர் வீட்ல எல்லாரும் போய் காத்துக்கிட்டு இருப்பாங்களாம். டீச்சர் கிளம்பியதும் அவங்ககூடச் சேர்ந்து நடப்பாங்களாம். வாத்தியாரும் அவங்க ஊர்ல இருந்தாங்களாம். ஆனா அவங்க சைக்கிள்ல போயிடுவாங்களாம். டீச்சரம்மாகூட போற செட்டு இல்லாம இன்னும் ரெண்டு செட்டு தனித்தனியா நடப்பாங்களாம். அவங்க எல்லாரும் பெரிய புள்ளைங்களாம். அந்த ரெண்டு செட்டும் ஜாலியா போவாங்களாம். காலையில ஏழு மணிக்குக் கிளம்பினா பத்து மணிவரைக்கும்கூட நடக்குற செட்டு அது. அம்மா அந்த செட்டாம். வழக்கமா பள்ளிக்கூடத்துக்கும் வீட்டுக்கும் நேர் பாதை, குறுக்குப் பாதைன்னு ரெண்டு பாதையாம். சைக்கிள், மாட்டு வண்டியெல்லாம் நேர் பாதையில போகுமாம். பள்ளிக்கூடச் சுவத்துல ‘நேர் வழி நட’ அப்படின்னு எழுதியிருக்குமாம். நேர் பாதையில நடக்குறது எவ்வளவு கஷ்டம்! யாருமே அதைச் செய்யறது இல்ல. அதைப் போய் எழுதிப் போட்டிருக்காங்கன்னு இருக்குமாம்.
குறுக்குப் பாதைதான் ஈஸியானது. கொஞ்சம் காட்டுக்குள்ள நடக்கணும். அப்புறம் ஒத்தையடி. அடுத்து வரப்புமேல… சீக்கிரமா ஊரு வந்துடும். கிட்டதட்ட ஒன்றரை கிலோ மீட்டர் நடக்குறது குறையும். ஆனா அம்மா செட்டு ஒன்பது பாதை கண்டுபிடிச்சி வச்சிருந்தாங்களாம். ஒரு நாளைக்கு ஒரு பாதைன்னு நடப்பாங்களாம். சில பாதைகள் சுத்தி வரணுமாம். ஒரு பாதை ஈச்சம் புதர் வழியா போறது. இன்னொண்ணு குளத்துக்குள்ள இறங்கி அடுத்த கரைக்குப் போயி அப்படியே போறது. கடலக்காட்டு வழி, குளத்துப்பாதை, கோயில் பாதை, பாம்புப் பாதைன்னு எல்லா வழிக்கும் பேர் வைப்பாங்களாம்.
பள்ளிக்கூட வழியில நடக்குற கதை ஒவ்வொரு நாளும் ஒண்ணொன்னாம். குரங்கு கடலச்செடிய புடுங்கி இடுப்புல கட்டிக்கிட்டு ஓடுறதைப் பார்க்குறது. ரங்கா ரங்கான்னு அது பின்னாடியே அலையிறது. இவுங்க கடலச்செடிய புடுங்கி மாட்டிக்கிட்டு பள்ளிக்கூடம் போக முடியாம நிக்கிறது. பாம்போ பச்சோந்தியோ வந்துச்சுன்னா அதுங்க பின்னாடியே நிக்கிறது. ஆணாம்பழம், அசோகாப்பழம் பழுத்துச்சின்னா அந்த இடமே கதின்னு கிடக்குறது.
கோயில்ல யாராவது பூசைக்கு வந்துட்டா திங்க ஏதாவது தரமாட்டாங்களான்னு காத்துகிட்டு இருக்குறது. எல்லா மரத்தையும் உத்து உத்துப் பார்த்து எதையாவது பத்திப் பேசுறது. மரங்கொத்தி, ஓணான் முட்ட இடுறதையும் குஞ்சு பொரிக்கிறதையும் பாத்துக்கிட்டே நிக்கிறது. பைத்தங்காய், மாங்காய் பறிப்பது. கல்யாணம் காதுகுத்துன்னு தாங்களாகவே விசேஷம் நடத்துறது, சாமி சிலைய இடம் மாத்தி பூஜை செய்யறது, கதை பேசுறதுன்னு அம்மாவின் பள்ளிக்கூடப் பாதை முக்கியத்துவம் வாய்ந்ததாம்.
“காலைல குளிச்சி, தலை சீவி, நல்லா யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு, கைல சாப்பாடு மூட்டை, தோள்ல புத்தகப்பை அது பெரும்பாலும் மஞ்சப்பை, சில பேருக்குச் செருப்பு இருக்கும், பல பேருக்கு இருக்காது. ஆனா அந்த வேறுபாடே இருக்காது. வேலி தாண்டணும்னா செருப்பு போட்டிருக்கவுங்க மொத போகணும். அங்கிருந்து செருப்பைத் தூக்கிப் போடணும். அடுத்து அடுத்த ஆள். எல்லாம் எல்லாருடையதுமா இருக்கும். ராஜா மாதிரி கிளம்பிப் போவோம். மழை நாளா இருந்தா புத்தகம் நனையாம இருக்க ப்ளாஸ்டிக் கவர்… ஜோரா கிளம்புவோம். அது ஒரு தனியுலகம்.
பள்ளிக்கூடம் பக்கத்துல வந்ததும் குடுகுடுன்னு ஓடுவோம். மூச்சிரைக்க இரைக்க ஓடிப்போயி பாவமா நிப்போம். அதே மாதிரி பள்ளிக்கூடம் முடிஞ்சதும் பைக்கட்ட தூக்கிப் போட்டுக்கிட்டே ஓடுவோம். ஊரைத் தாண்டியதும் பிரேக் போடுவோம். ரொம்ப மகிழ்ச்சியா இருந்தோம்னா, ஒருத்தர் தோள்மேல ஒருத்தர் கை போட்டுக்கிட்டு நடப்போம்.
சில நேரம் மாட்டுவண்டி வரும். அவ்வளவு பேரும் சக்கரத்துல கால் வச்சி ஏறுவோம். முப்பதுபேர் ஒரு வண்டிக்குள்ள. ஓரத்துல இருக்குற குச்சியில் பைகளைத் தொங்கவிட்டுக்கிட்டுப் போவோம். சில வண்டிக்காரங்க ஏத்த மாட்டாங்க. பையை உள்ள தூக்கிப் போட்டுட்டு வண்டிய புடிச்சி தொங்கிக்கிட்டே வருவோம். தொங்க முடியாட்டி தொட்டுக்கிட்டே வருவோம். வழி நெடுகக் கத்துவோம். முக்கியமான இடங்கள் சிலது இருக்கு. அங்க உக்காந்துதான் பஞ்சாயத்து பண்ணுவோம். பங்கு போடுவோம். திட்டம் போடுவோம்.
அப்ப நான் ஆறாப்பு, கனகா எட்டாப்பு. கனகா அவங்க அத்தை அந்தமான்ல இருந்து கப்பல்ல வந்த கதையைச் சொல்லிக்கிட்டு இருந்தா. நம்ம வழி மாதிரியில்லையாம் அது. மரமெல்லாம் பஸ்ஸுல போகும்போது போகுமுல்ல அப்டியிருக்காதாம். நம்ம பாதைகள்லாம் கோடு மாதிரி, பாம்பு மாதிரி, ஆறு மாதிரியெல்லாம் இருக்குமுல்ல. அப்டியிருக்காதாம். தட்டையா இருக்குமாம். எங்க இருக்கோம்னே தெரியாதாம். நாங்க ‘ம்’ கொட்டிக் கேப்போம். பேசிக்கிட்டிருக்கும்போதே கனகா அடுத்த வருஷத்துக்குப் போயிடுவா. எட்டாப்பு வரைக்கும்தான் பள்ளிக்கூடம். அதுக்கப்புறம் இந்த வழி எனக்கில்லை என்பாள். நாங்களும் கவலையா இருக்குற மாதிரி இருப்போம். எறும்பு எந்த வழியில் போகுதுன்னு பார்ப்போம்னு அடுத்த வேலை செய்ய ஆரம்பிச்சிடுவோம்.”
‘என் வழி தனிவழி’ன்னு நான் சொல்லும்போதெல்லாம் அம்மாவுக்கு அவுங்களோட பள்ளிக்கூடப் பாதைதான் ஞாபகம் வரும். ‘நான் எங்க வழியப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சிடுவேன்… பாதையையே பார்க்காமல் பள்ளிக்குச் செல்வது’ என்று தொடர்வார்.
(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago