திருமணங்கள், பிறந்த நாள் விழாக்கள், காது குத்து என எல்லா விசேஷங்களிலும் தவிர்க்க முடியாததாகிவிட்டது ஐஸ்கிரீம். பல்வேறு சுவைகளில் கிடைப்பதால் ஐஸ் கிரீமைச் சாப்பிடுவதற்காகவே குழந்தைகள் பலரும் விருந்து, விசேஷங்களைத் தவறவிடுவதில்லை.
விருந்தில் சாப்பிடுகிறார்களோ இல்லையோ, ஐஸ்கிரீம்தான் குழந்தைகளின் முதல் இலக்கு. உண்மைதானே குழந்தைகளே! ஸ்பூனால் ஐஸ் கிரீமை சிந்தாமல் சாப்பிடுவது தனிசுகம். ஐஸ் கிரீமை உருகிய மெழுகுப் பதத்தில் இருக்கும்போதே உடனே சாப்பிட்டுவிட வேண்டும். வெளிப்புற வெயிலுக்கு வந்தால் அந்த ஐஸ்கிரீம் உருகிவிடும். அப்புறம், பாயசம் மாதிரிக் குடிச்சு வேண்டியதாகிவிடும், அப்படித்தானே!
அதாவது, ‘ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குக் கீழே நீர் பனிக்கட்டியாக மாறிவிடும். லேசாக வெயில் பட்டு, ஐஸ் கட்டியின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸுக்கு வந்தாலே அது கொஞ்சம் கொஞ்சமாக உருகத் தொடங்கிவிடுகிறது. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க முழுவதும் நீராக மாறிவிடும்’. இப்படித்தான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
உண்மையில் அதுதான் இல்லை.
பனிக்கட்டியை ஜீரோ டிகிரி செல்சியஸுக்கு மேல், அதிகமான வெப்பநிலையில்கூடத் திட நிலையில் (பனிக்கட்டியாகவே) வைத்திருக்க முடியும். அப்படியா, என ஆச்சரியப்படாதீர்கள். இன்னொரு ஆச்சரியமும் இருக்கிறது.
நீரின் கொதிநிலை உங்களுக்குத் தெரியும் அல்லவா? 100 டிகிரி செல்சியஸ். ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பனிக்கட்டியாக (திடப்பொருளாக) இருக்கும் நீர், ஒரு டிகிரி செல்சியஸ் முதல் நூறு டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் திரவப்பொருளாக மாறுகிறது. 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் மேலும் சூடுபடுத்தும்போது, அது நீராவியாக (வாயு நிலைக்கு) மாறிவிடுகிறது.
100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீர் கொதிக்கிறது என்றால், சுமாராக 50 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைகளில் கொதிநிலை நோக்கி நகரத் தொடங்கிவிடும். பயங்கரமாகச் சுடும். இந்த வெப்பநிலையில் உள்ள நீர் நம் மேல் கொட்டிவிட்டால் பயங்கரமாகச் சுட்டுவிடும். தோல் வெந்துகூடப் போய்விடும்.ஆனால் இதே 70 டிகிரி வெப்பநிலையில்கூட நீரை உறையச் செய்து, பனிக்கட்டியாக வைக்கலாம்.
உண்மையாகவா?
ஆமாம்!
நீரை உயர் வெப்பநிலையில்கூடப் பனிக்கட்டியாக வைத்திருக்க முடியும் என்ற அறிவியல் முடிவின் ஒரேயொரு அடிப்படைக் காரணம் ‘அழுத்தம்’தான். பூமியின் அடி ஆழத்தில் அதிக வெப்பம் நிலவுகிறது என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? அதே சமயம் அதிக அழுத்தப் பிரதேசங்களில் சூடான நீர் பனிக்கட்டியாகவே இருக்கிறது.
மூன்றாவதாக இன்னொரு ஆச்சரியத்தையும் கூறலாம். பனிக்கட்டியில் ஒரே ஒருவகை இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஐஸ்கிரீமில் பல வகை இருப்பது போல ஐஸ்கட்டியிலும் பல வகைகள் உள்ளன. சில குறிப்பிட்ட வகை தனிமக் கரைசலை தன்னுள் அடக்கிய நீர் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட வளி மண்டல அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படும்போது அது பனிக்கட்டியாக மாறுகிறது. இந்த வகை பனிக்கட்டிகள் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில்கூட உருகாமல் இருப்பதுதான் ஆச்சரியத்தின் உச்சம். பனிக்கட்டிதானே என்று நீங்கள் இதைத் தொட்டுவிட முடியாது. 70 டிகிரி வெப்பநிலையில் தகிக்கும் நெருப்புக்கட்டி அது.
எப்படித் தயாரிக்க முடியும்?
மிகமிக வலிமையான (பெரு முயற்சிகளில்கூட உடைந்துவிடாத) பாத்திரங்களில் உள்ள நீரில் மிக அதிக அழுத்தத்தைச் செலுத்தி உருவாக்கலாம். அசாத்தியமான ஆய்வுக்கூடங்களில் மட்டுமே இது சாத்தியம். மனிதனுக்குப் பெரும் சவாலாக உள்ள இது போன்ற அதிசயங்களை இயற்கை மிக எளிதாகப் போகிற போக்கில் நடத்திக் காட்டிவிடுகிறது. இந்தச் சூடான ஜஸ் கட்டி பற்றி இன்னொரு சுவையான தகவல். சாதாரணப் பனிக்கட்டிகள் நீரில் மிதப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்தச் சூடான பனிக்கட்டிக்கு அழுத்தம் அதிகம். எடையும் அதிகம். எனவே இந்தச் சூடான பனிக்கட்டியைத் தூக்கித், தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும்.
சரி, சூடான ஐஸ்கிரீம் கிடைக்குமா, கிடைக்காதா என்றுதானே கேட்கிறீர்கள். நாம் எல்லோரும் சேர்ந்து உயர் ரக இரும்புக்கலனை உருவாக்கி, அதில் நீரை நிரப்பி, வெனிலா ப்ளேவர் சேர்த்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான வளிமண்டல அழுத்தத்தைச் செலுத்திச் சூடான ஐஸ்கிரீம் தயாரிப்போம் வாருங்கள் !
கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago