காணாவூர் நாட்டில் திருடர்களே கிடையாது. ஏனென்றால் அந்த நாட்டு மக்களிடம் பணமே கிடையாது. பணம் இருந்தால்தானே திருடர்கள் திருட முடியும்! அந்த நாட்டு ராஜாவும், மந்திரிகளுமே அந்த வேலையைப் பார்த்துக்கொண்டார்கள். மக்களிடம் இருந்து வரி, வட்டியை வசூல் செய்து நாட்டு கஜானாவைப் பொற்காசுகளால் நிரப்பிவிட்டார்கள். ஆனாலும் பேராசை விடவில்லை. மேலும் மேலும் மக்களிடமிருந்து பிடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
வீட்டு வரி, வாசல் வரி, சன்னல் வரி, கதவு வரி, உணவு வரி, தோட்ட வரி, காய்கறி வரி, பழங்கள் வரி, உட்காரும் வரி, நிற்கும் வரி, நடை வரி, படுக்கும் வரி, தூங்கும் வரி, இரவு வரி, பகல் வரி என்று ஏராளமான வரிகளைப் போட்டார்கள். அப்புறம் இந்த வரிகள் எல்லாம் தினசரி மாறிக்கொண்டேயிருக்கும். ஒரு நாள் பத்து வெள்ளி குறையும். மக்கள் கொஞ்சம் ஆறுதல் அடைவார்கள். ஆனால், மறுநாள் முப்பது வெள்ளி கூடிவிடும். ஒவ்வொரு நாளும் டி.வி.யைப் பார்த்துவிட்டுத்தான் வேலைக்குப் போவார்கள்.
அரண்மனை கஜானாவில் நிரம்பும் தங்கத்தை ராஜா என்ன செய்வார் தெரியுமா? தங்க இழைகளால் ஆன ஆடைகளில் வைரங்களைப் பதித்துக் காலை, மாலை, இரவு, என்று விதம் விதமாக உடுத்துவார். மக்கள் ஓரிரு கைத்தறி ஆடைகளை தினமும் துவைத்து உடுத்திக்கொண்டிருந்தார்கள். ஆனால், ராஜாவோ ஒரு முறை உடுத்திய உடையைத் திரும்பவும் உடுத்த மாட்டார். மந்திரிகள் உள்ளாடைகளைக்கூடத் தங்கத்தால் போட்டார்கள். அது மட்டுமல்ல. அரண்மனையில் 24 மணிநேரமும் விழாக்கள் நடந்துகொண்டிருந்தன.
இதுக்குத்தான் விழான்னு இல்லை. ராஜா உறங்கி எழுந்ததுக்கு விழா. பல் தேய்ப்பதற்கு விழா. குளித்தால் விழா. சாப்பிட்டால் விழா, பிறந்த நாள் விழா, பள்ளி சென்ற நாள் விழா, படிப்பு முடித்த நாள் விழா, அரண்மனை விழா, அந்தப்புர விழா, என்று கேட்கவே வேண்டாம். எப்போதும் விழாக்கள்தான். இப்படிக் காரணம் இல்லாமல் அரண்மனையில் விழாக்கள் நடத்தி மக்களிடமிருந்து வசூலித்த வரிகளை ஆடம்பரமாய்ச் செலவு செய்தார்.
இவ்வளவு இருந்தும் ஒரு நாள் தோலிருக்கச் சுளைமுழுங்கி ராஜா நகர்வலம் வரும்போது ஒரு வீட்டில் திருமண விழா நடந்துகொண்டிருந்தது. அந்த விழாவுக்கு வந்தவர்கள் மணமக்களுக்குப் பரிசுப் பணம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த ராஜா இவ்வளவு வரிகளைப் போட்டும் இவ்வளவு பணம் மக்களிடம் இருக்கிறதே என்று பொறாமைப்பட்டார். உடனே மந்திரிப் பிரதானிகளைக் கூப்பிட்டார். இரண்டு பகல், இரண்டு இரவு ஆலோசனை செய்தார். ஏன் தெரியுமா? மக்களிடம் இருக்கும் அத்தனை தங்கம், வெள்ளிக் காசுகளைப் பறிக்க வேண்டும் என்பதற்காக.
கடைசியில் ஒரு மந்திரிதான் புதிய யோசனையைச் சொன்னார். “பேசாமல் அத்தனை தங்க, வெள்ளிக் காசுகளை அரசு கஜானாவில் கொடுக்கச் சொல்லிருவோம். ஒரு வாரம் கழித்து எல்லோருக்கும் தங்கம், வெள்ளிக்குப் பதிலாகப் பானை, ஓட்டுச்சில்லுகளைக் கொடுத்துருவோம். அதுதான் இனி காசுன்னு சொல்லிருவோம், எப்பூடி?” என்றார்.
இதைக் கேட்ட ராஜாவுக்கு சந்தோஷமாகிவிட்டது. உடனே அதற்கு ஒரு விழா எடுத்துக் கொண்டாடினார். “தங்கம், வெள்ளி, காசுகளைத் தெருவுக்குத் தெரு வைத்திருக்கும் அண்டாக்களில் போட்டுவிட்டு, ஒரு வாரம் கழித்து ஓட்டுச் சில்லுகளை வாங்கிக்கொண்டு போக வேண்டும்” என்று முரசு கொட்டி ஊர் முழுவதும் சொல்லப்பட்டது.
இதைக் கேட்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கால் காசு, அரைக் காசு என்று சேர்த்து வைத்திருந்த தங்கம், வெள்ளிக் காசுகளைக் கொண்டுபோய் அண்டாக்களில் போட்டார்கள். அதற்குப் பதிலாக ஒரு வாரம் கழித்து எல்லோருக்கும் ஓட்டுச்சில்லுகள் வழங்கப்பட்டன. சிறுகச்சிறுகச் சேர்த்து வைத்த காசு போகிறதே என்று மக்கள் அழுதார்கள்.
காணாவூர் அருகிலுள்ள காட்டில் குபேர மாளிகை கட்டி வாழ்ந்து வந்த குபேரனின் தேவதைகளுக்கு மக்களின் அழுகைச் சத்தம் கேட்டது. தேவதைகள் காணாவூர் நாட்டின் மீது பறந்து மக்களின் நிலைமையைப் பார்த்து வருந்தினார்கள். அவர்களுக்குத் தோலிருக்கச் சுளைமுழுங்கி ராஜாவின் மீது கோபம் வந்தது. அவருக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அரண்மனைக்குப் பறந்து சென்றார்கள். அங்கே ராஜாவும் மந்திரிகளும் தங்க நாணயக் குவியல்களின் மீது படுத்து உருண்டு புரண்டுகொண்டிருந்தார்கள்.
“எல்லாத் தங்கமும் என்னிடம் வந்து விட்டது. நான் தங்கராஜா” என்று சிரித்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த குபேரத் தேவதைகளுக்குக் கோபம் வராமல் இருக்குமா? அவர்கள் தங்களுடைய சேலையிலிருந்து ஒரு நூலை உருவிப்போட்டார்கள். அவ்வளவுதான். அத்தனை தங்கமும் மண்ணாக மாறிவிட்டது. ராஜாவும், மந்திரிகளும் மணல் குவியல்களில் புரண்டுகொண்டிருந்தார்கள்.
அதிர்ச்சி அடைந்த ராஜா எழுந்து அரண்மனைக்குள் ஓடினார்.
அவருடைய சேர்த்து வைத்திருந்த ஆபரணங்களைத் தொட்டார். அவை மண்ணாகிவிட்டது. வயிறு பசிக்கிறது என்று சாப்பாட்டு மேசைக்குப் போனார். உணவைத் தொட்டார். அதுவும் மண்ணாகிவிட்டது. அந்தப்புரத்துக்குப் போனார். ராணியைத் தொட்டார். ராணி மண் சிலையாகிவிட்டார். ஆசையோடு ஓடி வந்த குழந்தையைத் தூக்கினார். குழந்தையும் மண்ணாகிப் பொலபொலவென உதிர்ந்துவிட்டது.
ராஜா ஆசைப்பட்டுத் தொட்டதெல்லாம் மண்ணாகிவிட்டது. மந்திரிகள் தொட்டவை எல்லாம் மண்ணாகி உதிர்ந்தன. எல்லோரும் அழுதுகொண்டே அரண்மனைக்கு ஓடி வந்தனர். அரண்மனை கொலுமண்டபத்தில் ராஜாவும் அழுதுகொண்டே சிம்மாசனத்தில் உட்கார்ந்தார். அதுவும் மண்ணாகி உதிரத் தரையில் விழுந்தார். எல்லோரும் தரையில் உட்கார்ந்து ஆலோசித்தனர்.
மக்களிடம் வாங்கிய தங்கம், வெள்ளிக் காசுகளைத் திரும்பக் கொடுக்கச் சொல்லி உடனே ஆணையிட்டார். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குபேரத் தேவதைகளும் அரண்மனை மீது உருவிப் போட்ட அவர்களுடைய சேலை நூலைத் திரும்ப எடுத்துக்கொண்டனர். மண்ணானது எல்லாம் மீண்டும் உயிர் பெற்றன.
அதன் பிறகென்ன? காணாவூரில் ஆனந்தம் அலையடித்துக்கொண்டிருந்தது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago