அமெரிக்காவை என்னத்தான் ‘ஆதிக்கச் சக்தி’, ‘பெரியண்ணன்’ என்று வார்த்தைகளால் திட்டினாலும், எல்லாத் துறைகளிலும் வளர்ந்த வல்லரசு நாடு அது. வெளிநாடுகளில் கை நிறைய சம்பாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு அமெரிக்காதான் புகலிடம். ஜனநாயக நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகிற நாடும்கூட. தன் நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி, தனது மண்ணில் உள்ள எல்லோருக்கும் முழு சுதந்திரம் கிடைப்பதை உறுதி செய்கிற, வலுவான ஜனநாயகக் குடியரசு நாடு.
அமெரிக்காவின் கொடியைப் பார்த்திருக்கிறீர்களா? நட்சத்திரங்களும் கோடுகளும் கொண்டதாகக் கொடி இருக்கும். தேசியக் கொடியைப் புகழ்ந்து பாடுவதால், அமெரிக்கத் தேசிய கீதம் ‘நட்சத்திர, கோடுகள் பதாகை' (the Star-Spangled Banner) என்றே அழைக்கப்படுகிறது.
கோட்டையில் கொடி
1812-ம் ஆண்டு அது. 'மெக்ஹென்ரி கோட்டை'யைப் பிரிட்டிஷ் கப்பற்படை தாக்கியதைப் பார்த்தார் ஓர் இளம் வழக்கறிஞர். போரின் முடிவில் வெற்றி பெற்று, கோட்டையின் மீது அமெரிக்காவின் மிகப் பெரிய தேசியக் கொடி பறப்பதைப் பார்த்துப் பரவசப்பட்டார். ஓரிரு ஆண்டுகள் கழித்துக் கொடியைப் புகழ்ந்து கவிதை எழுதினார்.
1814-ம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று 'பிரான்சிஸ் ஸ்காட் கீ' என்ற அந்த இளம் வழக்கறிஞர் இயற்றிய 'மெக்ஹென்ரி கோட்டை பாதுகாவல்' என்கிற கவிதையின் ஒரு பகுதிதான் 'நட்சத்திர, கோடுகள் பதாகை' பாடல்.
ஆங்கில இசை
பிரான்சிஸ் இப்பாடலை இயற்றச் சுமார் 40 அண்டுகளுக்கு முன்பே, ஜான் ஸ்டஃபர்ட் ஸ்மித் என்ற ஆங்கிலேயர், ஒரு பாடலுக்கு இசை அமைத்திருந்தார். அந்தப் பாடல் மிகவும் விரும்பி கேட்கப்படும் பாடலாகப் பிரபலமானது. அப்பாடலின் இசை அப்படியே, பிரான்சிஸ் பாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆக, பிரான்சிஸ் - ஸ்மித் கூட்டணியில் உதயமானதுதான் அமெரிக்காவின் தேசிய கீதம்.
அங்கீகாரம்
1889-ம் ஆண்டு, அமெரிக்கக் கடற்படை இதனைப் பயன்படுத்தியது. 1916-ம் ஆண்டு அப்போதைய அதிபர் வுட்ரோ வில்சன், இதற்கு அங்கீகாரம் தந்தார். (அப்படிப் பார்த்தால், 2016 - இப்பாடலின் நூற்றாண்டு). 1931 மார்ச் 3 அன்று அதிகாரபூர்வமாக இப்பாடல் அமெரிக்காவின் தேசிய கீதம் ஆனது.
மிக நீளம்
உலகின் மிக நீளமான தேசிய கீதம் இதுவாகத்தான் இருக்கும். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் கீதங்கள், சுமார் ஒரு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். ஆனால், அமெரிக்காவின் பாடலை முழுவதும் பாடி முடிக்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. ஆங்கில மொழியில் இப்பாடல், நமக்கு நன்கு பழக்கப்பட்ட பல சொற்களைக் கொண்டுள்ளது. உச்சரிப்பிலும் பெரிய வேறுபாடு இல்லை. ஆகவே, இப்பாடல் எவ்வாறு ‘ஒலிக்கும்' என்பதற்கான அவசியம் எழவில்லை. என்னதான் சொல்கிறது இப்பாடல்?
அமெரிக்கக் கீதத்தின் உத்தேசத் தமிழாக்கம்
ஓ..
விடியலின் முதல் வெளிச்சத்தில்
மாலையின் மங்கிய ஒளிக் கீற்றில்
எதனை நாம் பெருமையுடன் புகழ்கிறோமோ
(அதனை) உன்னால் காண முடிகிறதா?
தீவிரச் சண்டையின் ஊடே
கோட்டைக் கொத்தளத்தின் உச்சியில்
அகன்ற கோடுகள், ஒளிரும் நட்சத்திரங்கள்
தீரத்துடன் படபடப்பதைப் பார்த்தோமே
'ராக்கெட்'கள் உமிழ்ந்த சிவப்பு வண்ணம்
வானில் வெடித்த குண்டுகளின் வெளிச்சம்
நமது கொடி அதோ அங்கே இன்னமும் பறப்பதற்கு
இரவிலும் சாட்சியம் அளித்தபடி இருக்கின்றன
சுதந்திரமான பூமியின் மீது
தீரமிக்க நிலத்தின் மீது
அந்த நட்சத்திரக் கோடுகள்
கொடி பறக்கிறதா? சொல்.
ஆழ்ந்த பனித் துளிகளின் ஊடே
கடற்கரை ஓரம் மங்கலாய்த் தெரியும்
எதிரிகளின் ஆணவமிக்க ஏவலாட்கள்
அச்சமூட்டும் நிசப்தத்தில் கரைந்து போகிறார்கள்.
உயர எழும் அலைகளின் மீது
பிறந்து வரும் மென் காற்று
பாதி அறிவித்து, பாதியை ஒளிக்கிறதே
அது என்ன?
காலை முதல் கதிர் கீற்றின்
மங்கல் ஒளியை அது பீடிக்கிறது.
முழு மகிமையைப் பிரதிபலித்து
ஓடைகளில் அது பிரகாசிக்கிறது.
சுதந்திரத்தின் புன்னகையுடன்
நமது நாடு ஒளி வீசுகிற போது
நம்முள் இருக்கும் எதிரி
நமது மகிமையைத் தாக்கினால்
நமது நட்சத்திரக் கொடியை
இறக்கத் துணியும்
சரித்திரத்துப் பக்கங்களை மாற்ற முற்படும்
துரோகிகள் வீழ்க! வீழ்க!
தங்களின் பிறப்புரிமையாக
லட்சக்கணக்கானோர் (பெற்ற) விடுதலையை
களங்கப்படாமல், அதன் பிரகாசத்துடன்
நாம் பராமரிப்போம்.
நட்சத்திரக் கோடுகள் பதாகை
வெற்றியில் பறக்கும்.
தீரம் மிக்கவர்களின் தேசம் -
சுதந்திரமானவர்களின் நாடு,
இது இப்படியேதான் எப்போதும் இருக்கும் -
நேசமிக்க தமது குடும்பத்துக்கும்
கோரப் போரின் தனிமைக்கும் இடையே
சுதந்திரமானவர்கள் உறுதியாய் நிற்பார்கள்.
வெற்றியும் சமாதானமும் ஆசிர்வதிக்கப்பட்ட
சொர்க்கத்தின் மீட்சியான பூமி
(ஒரே) தேசமாகத் தக்க வைக்கப்பட்டுள்ளமைக்கு
இதனை உருவாக்கிய சக்தியைப் போற்றுகிறோம்.
நம்முடைய நோக்கம் நியாமாக இருக்கும் போது,
நாம் (கட்டாயம்) வென்றே தீர வேண்டும்.
இதுவே நமது கோட்பாடு.
இறைவனே நமது விசுவாசம்.
நட்சத்திரக் கோடுகள் பதாகை
வெற்றியில் பறக்கும்.
தீரம் மிக்கவர்களின் தேசம் -
சுதந்திரமானவர்களின் நாடு.
(நிறைந்தது) | தொடர்புக்கு: baskaranpro@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago