நண்பகல் நேரம். சுட்டெரிக்கும் வெயில். மார்ச் மாதம்தான் பிறந்திருக்கிறது. இப்போதே வெயிலின் சூடு கடுமையாக இருப்பது பற்றி நடு வீட்டில் அமர்ந்து ரஞ்சனியும், அவள் அம்மா நிலா டீச்சரும் பேசிக் கொண்டிருந்தார்கள். நண்பர்களுடன் விளையாடச் சென்றிருந்த கவின், வேகமாக வீட்டினுள் நுழைந்தான்.
வெளியிலிருந்து வந்தபோது வேகமாக ஓடி வந்தவன், வீட்டினுள் நுழைந்தவுடன் அப்படியே நின்று விட்டான். சில வினாடிகள் அவனது கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை. ரஞ்சனியும், அம்மாவும் கவினைப் பார்த்து சிரித்தனர். அவன் கண்களுக்கு எதுவும் தெரியாமல் தடுமாறி நிற்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள்.
அடுத்த சில விநாடிகளில் மெதுவாக வீட்டினுள் இருப்பவை கவினின் கண்களுக்குத் தெரியத் தொடங்கின. அதே நேரத்தில், “என்னடா கண்ணு தெரியலயா? டாக்டரைப் பார்க்கப் போலாமா” என சிரித்துக்கொண்டே கேட்டாள் ரஞ்சனி.
சமாளித்த கவின்
உடனே சுதாரித்துக்கொண்டான் கவின். “எனக்குக் கண்ணு நல்லாதான் இருக்கு. நேத்து மதியம் சினிமாவுக்குப் போனப்ப சீட் எங்கே இருக்குன்னு தெரியாம நீதான் தடவிக்கிட்டே நின்ன. அதனால உன்னதான் டாக்டர்கிட்டே அழைச்சிட்டுப் போகணும்” என்று அக்காவுக்குப் பதில் சொன்னான் கவின்.
“அப்படின்னா இந்த மாசம் நம்ம வீட்டிலே டாக்டர் செலவு அதிகம் இருக்கும் போல” என்ற குரல் கேட்டது. கடைத் தெருவுக்குச் சென்றிருந்த அப்பாவின் குரல் அது.
அப்பா கொண்டு வந்த பையை ரஞ்சனியும், கவினும் ஓடிப் போய் வாங்கிப் பிரித்தார்கள். வீட்டுக்கான பொருட்களுடன், பசுமையான வெள்ளரிப் பிஞ்சுகளும் இருந்தன. ஆளுக்கொரு பிஞ்சாகக் கடிக்கத் தொடங்கினார்கள். வெயில் நேரத்தில் அதன் ருசியே தனி ருசிதான்.
வெள்ளரிப் பிஞ்சைத் தின்று கொண்டிருந்த கவினுக்கு இப்போது பார்வை தெளிவாகிவிட்டது. வீட்டினுள் நுழைந்த நேரத்தில் திடீரென கண்ணுக்கு எதுவும் தெரியாமல் போனது ஏன் என்ற கேள்வி அவனது மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது.
அப்போது, குடும்பத்தினருடன் அடுத்த வாரம் ஊட்டிக்குச் செல்லலாமா என தனது அலுவலக நண்பர்கள் சிலர் கேட்டது பற்றி அப்பா கூறிக்கொண்டிருந்தார்.
“ஹையா… ஊட்டியா” என மகிழ்ச்சியுடன் கத்தினாள் ரஞ்சனி. எனினும், இதையெல்லாம் காதில் வாங்காமல் கவின் அமைதியாகச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
கவின் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை அறிந்து அனைவரது கவனமும் அவன் பக்கம் திரும்பியது. “என்னடா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கண்ணு தெரியாம நின்னே. இப்போ வாய் பேசமாக உட்கார்ந்திருக்கே. என்னடா ஆச்சு உனக்கு” என்று தம்பியை வம்புக்கு இழுத்தாள் ரஞ்சனி.
நிலா டீச்சர் கவினின் சிந்தனை ஓட்டத்தைப் புரிந்துகொண்டார்.
“கவின் திடீர்னு ஏன் கண் இருட்டாகிடுச்சுன்னுதானே நீ இப்போ யோசிக்கிறே? இதுக்கெல்லாம் உங்க பாடப் புத்தகங்களிலேயே விடை இருக்கு. நம் கண்ணின் தகவமைப்புதான் இதுக்குக் காரணம்” எனத் தொடங்கினார் நிலா டீச்சர்.
டீச்சரின் விளக்கம்
“நம் கண்ணில் உள்ள கருவிழியின் மையத்தில் கண்மணி என்றும் பாவை (Pupil) என்றும் அழைக்கக் கூடிய சிறிய பகுதி உள்ளது. இந்தப் பாவையின் அளவைப் பொருத்தே நம் கண்ணின் உள்ளே சென்று விழித்திரையை அடையும் ஒளியின் அளவு தீர்மானிக்கப்படுகிறது. பாவை அகலமாக விரிந்தால் அதிக வெளிச்சம் கண்ணுக்குள் செல்லும். பாவை சுருங்கினால் குறைந்த வெளிச்சமே உள்ளே செல்ல முடியும். பாவையைச் சுற்றியுள்ள சுருக்குத் தசைகள் மூலம் பாவையை விரியச் செய்தோ அல்லது சுருங்கச் செய்தோ பாவையின் செயல்பாடுகளை கருவிழி ஒழுங்குபடுத்துகிறது.
நாம் வெயிலிலோ, அதிக வெளிச்சம் உள்ள பகுதிகளிலோ இருக்கும்போது நம் கண்ணின் பாவை சுருங்கி போதுமான வெளிச்சத்தை மட்டுமே கண்ணின் உள்ளே அனுப்பும். வீட்டின் உள்ளே வந்துவிட்டால் இங்கு வெளிச்சம் குறைவு. வெயில் உள்ள பகுதியில் இருந்தபோது சுருங்கியிருந்த பாவை, இப்போது விரிவடைவதற்கு சற்று நேரம் எடுத்துக்கொள்ளும். அதுவரை நம் கண்ணின் விழித்திரைப் பகுதிக்குப் போதிய வெளிச்சம் போய்ச் சேராது. அந்த நேரத்தில்தான் நம் எதிரே உள்ளவை நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை” என்று நிலா டீச்சர் விளக்கினார்.
“அம்மா நல்லா தூங்கி கண் விழிக்கும் நேரத்துல திடீர்னு லைட்டைப் பார்த்தா கண் கூசுதே… அது ஏன்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான் கவின்.
“வெரிகுட். நல்ல கேள்வி. கண்களை மூடிக்கொண்டு நன்றாகத் தூங்கும் நேரத்தில் கண்களுக்கு எதிரே குறைந்த வெளிச்சமே இருக்கும். அதனால் பாவை நன்றாக விரிந்திருக்கும். கண் விழிக்கும் நேரத்தில் பிரகாசமான விளக்கு எரிந்தால், கண்களுக்கு முன்னாள் அதிக வெளிச்சம் இருக்கும். பாவை அகல விரிந்திருப்பதால் அதிக வெளிச்சம் கண்ணின் விழித்திரைப் பகுதிக்குச் செல்லும். அவ்வளவு வெளிச்சத்தையும் தாங்க முடியாமல் நம் கண்கள் கூசும், உடனே மூடிக் கொள்வோம். அதேநேரத்தில் உள்ளே செல்லும் வெளிச்சத்தின் அளவைக் குறைப்பதற்காக கண்ணின் பாவை உடனடியாக சுருங்கத் தொடங்கும். அவ்வாறு தேவைான அளவுக்குப் பாவை சுருங்கிய பிறகு, கண் கூசுவது நின்றுவிடும்” என்று அம்மா விவரித்துக் கொண்டிருந்தார்.
“வெல்டிங் பட்டறைகளில் வேலை செய்பவர்கள் வெல்டிங் செய்யும்போது பெரிய கருப்புக் கண்ணாடியை கையில் வைத்திருப்பதுகூட அதிக வெளிச்சத்திலிருந்து நம் கண்களைப் பாதுகாக்கத்தானே” என்று கேட்டாள் ரஞ்சனி.
“ஆமாம், ரஞ்சனி. உன் சிந்தனையும் இப்போது விரிவடைகிறது. வெரிகுட்” என்று அம்மா பாராட்டினார்.
“சரி, வெயில்தான் அதிகமாக இருக்கே. அடுத்த வாரம் ஊட்டிக்குப் போகலாமா” என்று மீண்டும் பழைய விஷயத்துக்கே வந்தார் அப்பா.
ஆனால், முன்பு சிந்தனையில் ஆழ்ந்திருந்த கவினுக்கு அது புதிய விஷயம்தானே. அதனால் “ஊட்டியா.. ஜாலி” என்று கத்தினான் கவின். உடனே மற்றவர்கள் சிரித்துவிட்டனர். அவர்கள் சிரிப்பதன் காரணம் புரியாமல் விழித்தான் கவின்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago