அம்மாவின் சேட்டைகள் 05: அம்மாவின் விழுப்புண்கள்!

By சாலை செல்வம்

அம்மாவின் நெத்தியில மூணு தழும்புகள் இருக்கும். மூணுக்கும் மூணு கதைகள் உண்டு. அவை அழிக்க முடியாத கல்வெட்டுகள் மாதிரி. அதனால அம்மா முகத்தை உத்துப் பார்ப்பவர்கள் தவறாமல் கேட்கும்கேள்வி, “எங்க போயி இப்படி உழுந்து வச்ச?” என்பதாக இருக்கும். அம்மாவின் பதில்,கேட்பவர்களைப் பொறுத்து மாறும். ஆனா, பொதுவா இப்படி இருக்கும். “மூணுக்கும் மூணு வரலாறு இருக்கு. பட்ட கால்லயே படுங்கற மாதிரி எனக்குப் பட்ட நெத்தியிலயே பட்டுடுச்சி.

சுருக்கமா சொல்லணும்னா நடுவுல இருக்கிறது விளையாடும்போது புள்ளைங்க தள்ளிவுட்டது. சோத்துக்கை பக்கம் இருக்குல்ல இது அம்மா கோவத்துல கையில இருந்த டம்ளரைத் தூக்கியெறிஞ்சி வெட்டுப்பட்டது. பீச்சக்கை பக்கம் இருக்கிறது கீழ விழுந்தது”. இப்படித்தான் சொல்லுவாங்க. அம்மா கையில, காலுல, விரல்ல, முட்டி , முட்டியைச் சுத்தின்னு தழும்புகளா இருக்கும். அம்மைத் தழும்பும் அடிபட்ட தழும்புகளும் வட்டமா, நீட்டமா, பிறை மாதிரி, ‘ட’ மாதிரி, அமீபா மாதிரியெல்லாம் இருக்கும்.

“அம்மா உங்க தழும்பையெல்லாம் நான் இன்னைக்கு எண்ணியாகணும், காட்டுங்க” என்றேன். புடவையைச் சுருட்டி, காலை நீட்டி உக்காந்தாங்க. ஒண்ணு, படிக்கட்டுல விழுந்து, தாவாங்கட்டையில வெட்டுப்பட்டது. ரெண்டு, தையல் போட்டது... ஏழு, மரமேறி விழுந்தது. பதிமூணு, கபடி ஆடும்போது தரதரன்னு இழுபட்டதுல வந்தது. பதினேழு… இப்படி எண்ணி முடிச்சேன்.

ஆனா, அம்மா முற்றுப்புள்ளி வைக்க விடாம அப்படியே உட்கார்ந்துக்கிட்டு இருந்தாங்க. அப்படின்னா இன்னும் தழும்புங்க இருக்குன்னுதான் அர்த்தம். கால் முட்டிக்குப் பின்னால தொடைப் பக்கமா ஏழு தையல் போட்ட தழும்பு இருந்துச்சு. அதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை. அந்த வியப்புல அப்டியே இருந்த எனக்கு, அம்மா அடுத்த தழும்பைக் காட்டினாங்க. தலை முடியைப் பிரிச்சி அங்க ஒண்ணு. பாவம் அம்மாவுக்கு எவ்வளவு ரத்தம் போயிருக்கும்!

“தழும்பு இல்லாத காயங்களைப் பத்திச் சொல்லவா”ன்னு அம்மா ஆரம்பிச்சாங்க. “ரெண்டாவது படிச்சப்போ காதுக்குள்ள என்ன இருக்கு, மூக்குக்குள்ள என்ன இருக்குன்னு பார்க்குறது எங்களுக்குப் புடிக்கும். நான் என் ஃப்ரெண்டு வாயைப் பார்ப்பேன். அவ என்னோட வாயைப் பார்ப்பாள். பாத்துக்கிட்டே அதைப் பத்தி சொல்வோம். வாய்க்குள்ள மேலருந்து குட்டியா ஒண்ணு தொங்குது. பல்லு 14 தான் இருக்கு. நாக்குக்குப் பக்கத்துல செவேல்னு இருக்கு, சுரங்கப்பாதை மாதிரி உள்ளே போகுது, குடல் தெரியலை, இருட்டா இருக்கு அப்படின்னு பேசிக்கிட்டே பார்ப்போம்.

இதே மாதிரி கண்ணு, காது எல்லாத்தையும் பார்ப்போம். என் ஃப்ரெண்டு காதைப் பார்த்துக்கிட்டே இருந்தவ, “காதுல எவ்வளவு ஆழம் இருக்குன்னு பார்க்குறேன்னு சிலேட்டுக் குச்சியை எடுத்துக் காதுக்குள்ளே விட்டுட்டா. உள்ளே போயி அது உடைஞ்சி போச்சி. எடுக்குறதுக்கு என்னென்னமோ செய்யறோம், முடியல. வீட்டுக்கு விஷயம் போயிடுச்சி. எனக்கு வலிக்கலைன்னு சொன்னாலும் யாரும் கேக்கல. வீட்டுல திட்டிக்கிட்டே அழுவாங்க.

அடுத்த நாள் ஆஸ்பத்திரி. டாக்டர் கதை கேட்டாரு. ஒரு ரூம்ல படுக்க வச்சி காதுல டார்ச் அடிச்சிப் பார்த்தாரு. எக்ஸ்ரே எடுக்கச் சொன்னாரு. மூணு டாக்டருங்க சேர்ந்து நின்னு பேசுனாங்க. காதுக்குள்ள மெதுவா கூசுற மாதிரி எதையோ விட்டாங்க. கருப்பு போட்டாவைக் கையில வச்சி வச்சிப் பேசுனாங்க. அப்பாவும் நானும் தினம் ஆஸ்பத்திரிக்குப் போனோம். ஜாலியா இருந்துச்சி. அதுக்குதான் தழும்பே இல்லை” அப்டின்னு முடிச்சாங்க அம்மா.

சில நேரம் அம்மா சொல்லும்போது அம்மாவுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்னு தோணும். இப்பவும் ரத்தம் ஒழுகிக்கிட்டு இருக்கிற மாதிரியே இருக்கும். ஆனா நமக்கு இதுமாதிரியெல்லாம் அடிபடலையேன்னும் இருக்கும்.

காடு சுத்துறதுல அடிக்கடி நடக்குறது முள்ளு குத்துறதுதான். கருவ முள்ளு, காக்கா முள்ளு ரெண்டும் குத்துச்சுன்னா வலி தாங்க முடியாது. காலுக்குள்ள முள்ளே இல்லாம குத்துன பகுதியச் சுத்தி வீங்கும். துணியில் உப்பு மூட்டை கட்டி, வேப்பெண்ணெயில நனைச்சி, சூட்டுல காட்டி ஒத்தடம் குடுக்கணும். உள்ளே முள்ளிருந்தா வலிக்காம எடுக்குறவுங்களைத் தேடிப் போகணும். பாதி முள் வெளிய வந்து பாதி முள் வரலைன்னா எருக்கம்பாலைப் போடணும்.

பெரிய புள்ளைங்கல்லாம் மரத்துல ஏறி அதுலருந்து குதிச்சி ‘கொரங்குக் கோல்’ விளையாட்டு விளையாடுவாங்க. சின்னப் புள்ளைங்களும் மரம் ஏறத் தெரியாதவுங்களும் நின்னு வேடிக்கை பார்க்கணும். அது கோணி, கோணி வளர்ந்துருக்குற உசில மரம். யாருமில்லாத உசில மரத்துல அம்மா கவனமா ஏறுனாங்க. ஏறக்குறைய உச்சிக்குப் போயிட்டாங்க. ரெண்டு கிளை பிரியிற எடத்துல உக்காந்துட்டாங்க.

இறங்கத் தெரியலை. ஓணானும் பச்சோந்தியும் கவுந்து படுத்துருக்குற மாதிரி படுத்துக்கிட்டாங்களாம். காலை இறக்கி, ஏத்தின்னு ஒரு கால் மட்டும் வழி தேடுமாம். இப்படி அடுத்த கிளையில வந்து உக்காந்தப்ப கையில சதை தொங்குச்சாம். எலும்பு தெரியுதாம். வெள்ளையும் சிவப்புமா உள்ளே இருக்கிற சதை உடைஞ்ச கிளையில கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருந்ததைப் பார்த்தாங்களாம்.

வீட்ல வந்து கையைக் காமிச்சா எல்லோரும் “ஆ, ஐய்யைய்யோ…” அப்டின்னு அடுத்தவுங்களைக் கூப்பிட்டுக்கிட்டு வந்து காமிச்சாங்களாம். எல்லாரும் பார்க்கிறதைப் பார்த்து அம்மாவுக்கு அழுகை தாங்கலையாம். வந்தவுங்க எல்லாரும் எப்டி உழுந்தன்னு கேப்பாங்களாம். மரம் ஏறுனதை மட்டும் சொல்லக் கூடாதுன்னு முன்னாடியே அம்மா முடிவுபண்ணிட்டாங்களாம். “நொண்டியடிச்சி நடந்து போய்க்கிட்டே இருந்தேன். திடீர்னு ஒருகல் இடிச்சி கீழ விழுந்தனா. அங்ககூரான பெரிய கல்லு நீட்டிக்கிட்டு இருந்துது. அதுல கைபட்டு இப்படி ஆயிடுச்சி”. இந்தக் கதைய அம்மா திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி ஆயிடுச்சி.

“வேற எங்கயும் அடிபடலையா, காயத்துக்குள்ள கல்லு மண்ணு போயிருக்கா, சதை இப்படியா வெளிய தொங்கும்?”னு எல்லோரும் கேட்டாங்களாம். மடியில தூக்கி உக்கார வச்சிக்கிட்டு மோட்டார் சைக்கிள்ல ஆஸ்பத்திரிக்குப் போய் தையல் போட்டுக்கிட்டு வந்தாங்களாம். ஆறு தையல்.

“முட்டியில அடிபடும். ஆறுவதற்குள்ள மீண்டும் முட்டியில அடிபடும். ஆ….ன்னு வாயைப் பொளந்து அழுதா எல்லாரும் சுத்தி வந்து நிப்பாங்க. ரத்தத்தப் பத்தி ஆளுக்கு ஒண்ணு சொல்லுவாங்க. பாவம்னு உச்சுகொட்டுவாங்க. நானும் அதைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பேன். முட்டியில கோடா ரத்தம் இறங்கிவந்து சொட்டாம நிக்கும். எங்கம்மாவோட ஒத்தடமும் திட்டும் புண்ணைச் சீக்கிரமா ஆத்திடும்”னு அம்மா சொல்லுவாங்க.

கடைசியா ஒண்ணு, இவ்வளவு மோசமா அடிபட்ட அம்மா, எனக்கு அடிபட்டா பதறுவதைப் பார்க்கணுமே! தாங்கவே மாட்டாங்க.

(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்