சித்திரக்கதை: அவரவர் இடமே சொர்க்கம்

By உதய சங்கர்

புலியூருக்கு வெளியே ஒரு பெரிய புதர்க்காடு இருந்தது. பலவகை காட்டுச் செடிகளும், கொடிகளும் நிறைந்திருந்தன. அங்கே காட்டு எலிகள், முயல்கள், குள்ள நரிகள், பாம்புகள், பறவைகளும், கடுகைக்காட்டிலும் சிறியதாகவும் உள்ளங்கையளவு பெரியதாகவும் உள்ள பூச்சிகளும் வாழ்ந்தன.

காட்டுக்கு அருகிலேயே விவசாய நிலங்களும் இருந்தன. நாலைந்து பம்பு செட்டு கிணறுகளும் இருந்தன. பகலில் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். இரவில் பம்ப்செட்டு அறைக்கு வெளியில் விளக்கு எரியும். காட்டின் எல்லையிலிருந்த புதரில் ஒரு சுருட்டை விரியன் முட்டைகள் இட்டு அடைகாத்தது. முட்டைகள் ஒவ்வொன்றாய்ப் பொரிந்து குட்டிக்குட்டியாய் பாம்புகள் வந்தன. அவ்வளவு அழகாக இருந்தன. அம்மா சுருட்டை விரியனுக்குப் பெருமையாக இருந்தது. அதன் ஏழு முட்டைகளும் பொரிந்து குட்டிகள் வந்துவிட்டன.

போனதடவை பத்து முட்டைகளில் ஐந்து முட்டைகளைச் சாரைப்பாம்பு தின்றுவிட்டது. ஐந்து குட்டிகள் வெளிவந்த சிறிது நேரத்தில் எங்கிருந்தோ வந்த மயில் ஒன்று கொத்திக்கொண்டு போய்விட்டது. அதனால் இந்தமுறை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அம்மா சுருட்டை விரியன் நினைத்தது.

முட்டையிலிருந்து வெளிவந்த குட்டி சுருட்டை விரியன்கள் துருதுருவென அலைந்தன. அவற்றிற்குப் பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது. அம்மா பாம்பு லேசாக விசிலடித்த மாதிரிக் குரல் கொடுத்தது. உடனே எல்லாக் குட்டிப் பாம்புகளும் அம்மாவின் பக்கத்தில் வந்தன. அம்மா பாம்பு பேசியது.

“இந்தப் பெரிய காடுதான் நம்முடைய வீடு. இந்தக் காட்டுக்குள் உங்களுக்குத் தேவையான எல்லாம் கிடைக்கும். பூச்சிகள், முட்டைகள் ஏராளமாகக் கிடைக்கும். நமக்கு எதிரிகளும் உண்டு. அவர்களிடமிருந்து எப்படித் தப்பிக்கிறதுன்னு சொல்லித் தாரேன். நமக்கு விஷம் கிடையாது. ஆனால், பூச்சிகளைக் கடிக்கலாம். ஒரே ஒரு எச்சரிக்கை. இந்தக் காட்டின் எல்லையைத் தாண்டக் கூடாது. சரியா?” என்று சொன்னது. தலையை ஆட்டியாட்டிக் குட்டிப் பாம்புகள் கேட்டுக்கொண்டிருந்தன.

அதில் இருந்த ஒரு வாலு அம்மாவிடம், “ஏன் காட்டை விட்டுப்போனா என்ன ஆகும்?” என்று கேட்டது.

“நாம் எல்லோரும் இயற்கையன்னையின் குழந்தைகள். இயற்கை தன்னுடைய குழந்தைகளுக்குச் சில விதிமுறைகளைச் சொல்லி வைத்திருக்கிறாள்” என்று அம்மா பாம்பு சொன்னது. உடனே மற்ற குட்டிப் பாம்புகளும் சேர்ந்துகொண்டன.

“யெம்மா...யெம்மா… அந்த விதிமுறைகளைச் சொல்லும்மா” என்று கொஞ்சின. அம்மா பாம்பு எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, “ஒண்ணு, பசிக்கும்போது மட்டும்தான் இரையைக் கொல்ல வேண்டும்.ரெண்டாவது, காட்டில் யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் கிடையாது. எல்லோருக்கும் சமமான உரிமை உண்டு. மூணாவது, புலியோ எலியோ பூரானோ ஈசலோ சிலந்தியோ பறவையோ எல்லோருக்கும் ஓர் இடம் உண்டு. இதுதான் இயற்கை அன்னையின் விதிகள். புரிஞ்சுதா!” என்று அம்மா பாம்பு சொன்னது.

எல்லோரும் தலையாட்டினார்கள். ஆனால், கேள்வி கேட்ட வாலு மட்டும் தலையாட்டவில்லை. அதற்கு அம்மா சொன்னதில் நம்பிக்கையில்லை. திருட்டு முழி முழித்துக்கொண்டு அலைந்துகொண்டிருந்தது.

இரவு வந்தது. அம்மா பாம்பு குட்டிகளைக் கூட்டிக்கொண்டு எப்படிப் பூச்சிகளைப் பிடிப்பது என்று கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தது. காட்டின் எல்லையையொட்டி வெளிச்சம் தெரிந்தது. வாலு மட்டும் வெளிச்சத்தைத் திரும்பிப் பார்த்தது. அந்த வெளிச்சத்தில் பூச்சிகள் கொய்கொய்ன்னு பறந்து கொண்டிருந்தன. இங்கே இருட்டுக்குள் அலையறதைவிட அங்கே போனால் வாயைத் திறந்து வைத்தால் கொத்துக்கொத்தாய் பூச்சிகள் வந்து விழுமே என்று நினைத்தது. அப்படியே கூட்டத்திலிருந்து ஜகா வாங்கி அந்த வெளிச்சத்தை நோக்கி வேகமாக ஊர்ந்துசென்றது.

வெளிச்சம் ஒரு பம்பு செட்டு மோட்டார் அறையின் தலைமீதிருந்த விளக்கிலிருந்து வந்து கொண்டிருந்தது. மெல்ல வெளிச்சத்தில் ஊர்ந்து சென்ற வாலு பாம்புக்கு முன்னால் ஏராளமான பூச்சிகள் விழுந்து கிடந்தன. அவசர அவசரமாய் அந்தப் பூச்சிகளை விழுங்கியது. வயிறு நிறைந்தது. ஆனாலும் விடவில்லை. இன்னும் தின்றுகொண்டேயிருந்தது. நாளைக்கு அம்மாவையும் சகோதர, சகோதரிகளையும் கூட்டிக்கொண்டு வரலாம் என்று நினைத்தது.

நிறைய சாப்பிட்டதால் அதனால் அசையக்கூட முடியவில்லை. அப்போது மோட்டார் அறையிலிருந்து வெளியே ஒரு ஆள் வந்தான். அவன் காலடிச் சத்தத்தை உணர்ந்தது வாலு. ஆனால், வேகமாக ஓட முடியவில்லை. அதற்குள் அந்த ஆள் ‘பாம்பு..பாம்பு..’ என்று கத்திக்கொண்டே ஒரு பெரிய கம்பை எடுத்து அந்தக் குட்டிப் பாம்பை அடிக்க வந்தான். அவன் போட்ட சத்தம் கேட்டு இன்னொருத்தன் ஓடிவந்து, “டேய் அது நல்ல பாம்பு” என்றான். குட்டிக்கு எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று பதற்றம். உடனே தலையைத் தூக்கிச் சீறியது. அவ்வளவு தான். இரண்டு பேரும் கொஞ்ச தூரம் தள்ளிப்போய் நின்றார்கள்.

அவர்களில் ஒருத்தன்,” படம் எடுக்குது பாரேன்”.

“ நல்ல பாம்பு மாதிரித் தெரியல. சாதாரண பாம்பு மாதிரிதான் தெரியுது” என்றான் இன்னொருவன்.

“எந்தப் பாம்பா இருந்தாலும் சரி அடிச்சிக் கொன்னுடணும்” என்று மற்றவன் சொன்னான். இரண்டு பேரும் அடிப்பதற்குத் தயாரானார்கள்.

குட்டிப் பாம்பு மெல்ல மெல்ல ஊர்ந்து இருட்டைப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தது. பார்க்கும்போது காடு ரொம்ப தூரத்திலிருந்தது. போய்ச் சேர முடியுமா? குட்டிப் பாம்புக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. இயற்கையன்னையின் விதிகள் ஞாபகத்துக்கு வந்தன. இருந்தாலும் நம்மகதை அவ்ளோதான் என்று நினைத்தது குட்டி.

கம்பை வைத்திருந்தவன் குட்டிக்கு மேலே கம்பை உயர்த்தினான். நடப்பதை எல்லாம் காட்டின் தேவதை பார்த்துக் கொண்டிருந்தாள். தேவதைக்குக் குட்டிப் பாம்பின் மீது இரக்கம் வந்தது. உடனே தேவதை வாயால் காற்றை ஊதினாள். விர்ரென்று காற்று அங்கே வீசியது. மின்சாரக் கம்பிகள் காற்றில் அலைமோதின. தீப்பொறிகள் கிளம்பின. திடீரென அந்த இடமே இருள்மயமாகிவிட்டது. இருளைப் பார்த்ததும் அந்த மனிதர்கள் பயந்து போனார்கள். அதற்குள் குட்டி வேகம் வேகமாக உடலை இழுத்துக்கொண்டு எல்லையைக் கடந்து காட்டினுள்ளே நுழைந்தது.

அம்மா பாம்பு மற்ற குட்டிகளோடு வாலுவைத் தேடிக்கொண்டு எதிரே வந்தது. வாலுவைப் பார்த்ததும் கோபத்துடன், “எங்கே போன இவ்ளோ நேரம்?” என்று கேட்டது. அதற்கு அந்த வாலு என்ன சொன்னது தெரியுமா?

“ அம்மா, இனி நான் வெளிச்சத்துக்குப் போக மாட்டேம்மா”.

காட்டின் தேவதை கலகலவெனச் சிரித்தாள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்