“வினோத்! காலையிலேர்ந்து கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாடிட்டு இருக்கே. இன்னும் குளிக்கக்கூட இல்லை. விளையாடினது போதும். போய் ‘சீக்கிரம் குளிச்சுட்டு வா!” வினோத்தின் அம்மா வாணி சொன்னார்.
“இன்னிக்கு ஸ்கூல் லீவுதானேம்மா. இன்னிக்கும் ஏம்மா என்னை இப்படி விரட்டிட்டே இருக்கறீங்க?” சலிப்பாய் சொன்னான் வினோத்.
“லீவுன்னா குளிக்க வேண்டாமா? பொழுதன்னிக்கும் கம்ப்யூட்டர் விளையாட்டுதானா? போய் குளிச்சுட்டு வா!” - அம்மா கண்டிப்பாய் சொன்னார்.
சிணுங்கிக் கொண்ட வினோத் கம்ப்யூட்டரில் விளையாட்டை நிறுத்திவிட்டுக் குளித்துவிட்டு வந்து, சாப்பிட்டான்.
சாப்பிட்டு முடித்ததும், “அம்மா! நான் ஆனந்த் வீட்டுக்குப் போறேன்!” என்று சொல்லிவிட்டு, சைக்கிளை எடுத்தான்.
“இந்த வெயில்ல எங்கே போறே? வெயில் தணிஞ்சு சாயங்காலமா போகலாம்!” என்று அம்மா சொன்னார்.
“என்னம்மா நீங்க, கம்ப்யூட்டர்ல கேம்ஸும் விளையாட விடமாட்டேங்குறீங்க. வெளியே போய் விளையாடவும் விடமாட்டேங்குறீங்க. என்னைக் கொஞ்சமும் சுதந்திரமா இருக்கவிட மாட்டேங்கறீங்க” எனக் கோபம் கொண்ட வினோத், சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு, பெட்ரூமுக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டான்.
வினோத்தின் நடவடிக்கைகளை எல்லாம் அவனது தாத்தா ராகவன் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.
‘சரி, இந்த வெயிலில் வினோத் கொஞ்சம் ஓய்வு எடுப்பதும் சரிதான். அவன் எழுந்து வரட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்’என்று நினைத்துக்கொண்டார் தாத்தா.
மாலை நான்கு மணிக்கு வினோத், அறையிலிருந்து வெளியே வந்தான். அதற்காகவே காத்துக்கொண்டிருந்த அவனது தாத்தா ராகவன், வினோத்தை அழைத்தார்.
“வினோத்! நாம மொட்டை மாடிக்குப் போய்ப் பட்டம் விடலாமா? உனக்காக நான் நேற்றே பட்டமும் நூல் கண்டும் வாங்கி வெச்சிருக்கேன்” என்றார்.
பட்டம் விடலாம் என்று தாத்தா கேட்டதும் வினோத் வெளியே போக வேண்டும் என்ற எண்ணத்தை மறந்தே போனான்.
“அப்படியா தாத்தா! வாங்க மொட்டை மாடிக்குப் போகலாம். பட்டம் எங்கே?” என்று உற்சாகமாய் கேட்டபடி மொட்டைமாடிக்குப் போனான். அலமாரியிலிருந்து பட்டத்தையும் நூல் கண்டையும் எடுத்துக்கொண்டு தாத்தாவும் மொட்டை மாடிக்கு வந்தார்.
இருவரும் சேர்ந்து பட்டத்தை நூலுடன் கோத்தனர். பிறகு தாத்தா நூல்கண்டைப் பிடித்துக் கொள்ள, வினோத் சற்றுத் தூரத்தில் நின்றபடி காற்று வீசும் திசையில் பட்டத்தைப் பிடித்தான். பிறகு மெதுவாகப் பட்டத்திலிருந்து கையை எடுத்துக்கொள்ள, பட்டம் காற்றின் திசையில் மேலேறிப் பறந்தது. தாத்தாவும் நூல்கண்டிலிருந்த நூலைக் கொஞ்சம் கொஞ்சமாக விடப் பட்டம் உயரே எழும்பியது.
பட்டம் உயரத்துக்குச் சென்றதும், தாத்தா அதே உயரத்தில் பட்டத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். சற்று நேரம் பட்டத்தை ரசித்துக்கொண்டிருந்த வினோத், “தாத்தா! பட்டம் இன்னும் ரொம்ப உயரத்துக்குப் போகாம அங்கேயே நிக்குது. இன்னும் உயரத்தில் பறக்க விடலாம்” என்றான்.
“இல்லை வினோத். நூல் அவ்ளோதான் இருக்கு. இதற்கு மேல் நூல் இல்லை” என்றார் தாத்தா.
“அப்படின்னா நூலை அறுத்துவிட்டுவிடலாம். பிறகு பட்டம் இன்னும் அதிக உயரத்துக்குப் பறக்குமே” என்றான் வினோத்.
“வினோத்! நூலில் கட்டியிருக்கிறதுனாலதான் பட்டம் நம் கட்டுப்பாட்டுல பறந்துட்டிருக்குது. இல்லைன்னா அது எங்கோ பறந்து போய்டும்” என்ற தாத்தாவின் சொல், வினோத்தின் காதில் விழவேயில்லை.
“இல்லை தாத்தா. பட்டம்தான் ஏற்கெனவே உயரத்துக்குப் போயிடுச்சுல்ல. இனி நாம் நூலை அறுத்துவிட்டாலும் அது உயரே எழும்பித்தான் போகும். நீங்கள் நூலை அறுத்துவிடுங்கள்” என்றான் வினோத். தாத்தா தனக்குள் சிரித்துக்கொண்டார்.
“சரி வினோத், நீ சொன்னபடியே நூலை அறுத்துவிடுகிறேன். பட்டம் இன்னும் அதிக உயரத்துக்குப் பறந்து போகுதான்னு பார்” என்று சொன்னபடியே பட்டத்தில் கட்டப்பட்டிருந்த நூலை அறுத்தார்.
அவ்வளவுதான்! பட்டம் காற்றில் அங்கும் இங்கும் ஆடி, மேலிருந்து கீழே இறங்கத் தொடங்கியது. அப்போது வீசிய காற்றில் அது எங்கெங்கோ பறந்து, கடைசியாக ஒரு குப்பைத் தொட்டியில் போய் விழுந்தது.
“ஐயோ! தாத்தா, பட்டம் உயரத்துக்குப் போகாமல் குப்பைத் தொட்டியில் போய் விழுந்துடுச்சே” என்று வருத்தத்தோடு சொன்னான் வினோத்.
தாத்தா வினோத்திடம், “அது போனால் போகட்டும். உனக்குப் புதுப் பட்டம் வாங்கித் தரேன். ஆனால், இந்தப் பட்டத்திடமிருந்து நீ என்ன கற்றுக்கொண்டாய்? அதைச் சொல்” என்று கேட்டார்.
வினோத்துக்கு ஏதோ புரிவதுபோல இருந்தது. ஆனால், அதை அவனால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. அதைப் புரிந்துகொண்டது போல தாத்தாவே சொல்லத் தொடங்கினார்.
“வினோத், பெரியவங்க சொல்ற அறிவுரை பட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் நூல் மாதிரி. அம்மாவும் அப்பாவும் தினமும் உனக்கு அறிவுரை சொல்றப்ப உன் சுதந்திரத்தை அவங்க தடுக்கிறாங்கன்னு நினைக்கிறே. அதனால்தான், அவங்க ரொம்ப நேரம் கம்ப்யூட்டர்ல விளையாடாதே, பகல்ல வெயில்ல விளையாடப் போகாதேன்னு சொல்லும்போது கோபப்படுறே. அவங்க சொல்றது உன் நன்மைக்காகத்தான்னு புரிஞ்சுக்கமாட்டேங்கிறே. நூலில் கட்டப்பட்ட பட்டம் எவ்வளவு அழகா வானத்துல பறந்துச்சு. ஆனா, நூலை அறுத்தவுடன் அது குப்பைத் தொட்டியில் போய் விழுந்ததைப் பார்த்தியே. அதுபோலதான் பெற்றோரின் அறிவுரையும்” என்று சொல்லி முடித்தார் தாத்தா.
காலையில் அம்மா தனக்கு அறிவுரை சொன்னபோது, தான் அம்மா மீது கோபப்பட்டது வினோத்துக்கு நினைவுக்கு வந்தது.
“பட்டம் விட என்னைக் கூட்டிட்டு வந்தது பாடம் கத்துக்கொடுக்கத்தானா தாத்தா? இனி, அம்மா, அப்பா அறிவுரையைக் கேட்டு நடப்பேன்” - மகிழ்ச்சியுடன் சொன்ன வினோத், உற்சாகமாக மொட்டைமாடியிலிருந்து இறங்கினான்.
ஓவியம்: பிரபு ராம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago