பட்டின் ரகசிய கதை!

By எஸ். சுஜாதா

பட்டு உடைகள் என்றாலே எப்போதும் தனி மதிப்புதான். எல்லா விசேஷங்களுக்கும் பட்டுத் துணி அணிவது வழக்கமாகிவிட்டது. இன்று பட்டு விலை குறைவாகக் கிடைக்கிறது. ஆனால், பழங்காலத்தில் சீனாவில் பட்டுவுக்குப் பெரும் மதிப்பு இருந்தது. அரச குடும்பத்தினர், பணக்காரர்களின் அடையாளமாகப் பட்டு கருதப்பட்டது. ஏழைகள் பட்டு அணிய அனுமதிக்கப்படவில்லை. ஒருசில சீன அரசர்களோ பட்டை, பணமாகவும் பயன்படுத்தினார்கள்.

கண்டுபிடித்தது யார்?

கி.மு. 2696-ம் ஆண்டில் ஹுவாங்டி மன்னரின் மனைவி லெய்ஸு, அரண்மனை தோட்டத்தில் உட்கார்ந்து தேநீர் குடித்துக்கொண்டிருந்தார். அப்போது மல்பெரி மரத்திலிருந்து ஒரு கூடு தேநீர் குவளைக்குள் விழுந்தது. அதை எடுத்துப் பார்த்த அரசிக்கு ஆச்சரியம். கூட்டிலிருந்து நீளமான, மென்மையான, உறுதியான நூல் ஒன்று வந்துகொண்டே இருந்தது. பட்டுப் பூச்சியில் இருந்துதான் பட்டு நூல் வருகிறது என்பதை அவர் அறிந்துகொண்டார்.

இதுபோல இன்னொரு கதையும் உண்டு. ஒருமுறை மல்பெரி இலைகளைப் பூச்சிகள் அரித்துவருவதைக் கண்டார் ஹுவாங்டி மன்னர். அதைக் கண்காணிக்கும்படி சொன்னார். அரசி மரத்திலிருந்த ஒரு கூட்டை எடுத்து, தவறுதலாகச் சுடு தண்ணீருக்குள் போட்டுவிட்டார். அதை எடுக்கும்போது நூல் இருப்பதைப் பார்த்தார் என்று சொல்கிறார்கள்.

லெய்ஸு அரசிதான் உலகத்துக்குப் பட்டை அறிமுகம் செய்தவர். பட்டு இழைகளை நூலாக மாற்றும் வித்தையையும் இவரே கண்டுபிடித்தார். பிறகு பட்டுப் புழுக்களை வளர்ப்பதற்காக மல்பெரி மரங்கள் ஏராளம் நடப்பட்டன. பட்டுப் புழுக்கள் வளர்க்கப்பட்டன. பட்டுத் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.

பட்டு நூல் எப்படிக் கிடைக்கிறது?

தரமான பட்டு நூலைப் பெறுவதற்காகச் சீனர்கள் பல வழிமுறைகளைக் கையாண்டார்கள். ஒரு பட்டுப் பூச்சி 500 முட்டைகள் வரை இட்ட பிறகு, செத்துவிடும். முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள், ஒரு மாதம் வரை மல்பெரி இலைகளைத் தின்று, நன்றாக வளரும். பிறகு தன்னைச் சுற்றி 3 நாட்களில் ஒரு கூட்டை உருவாக்கும். கூட்டுப்புழுக்களைக் கொதிக்கும் நீரில் போட்டால் பூச்சி செத்துவிடும். கூட்டை எடுத்துச் சுத்தம் செய்தால், மென்மையான நூல் கிடைக்கும். நூலை நூற்றால், பட்டுத் துணி கிடைத்துவிடும்.

ரகசியம்

பட்டுப்புழு வளர்ப்பையும் பட்டு நூல் தயாரிப்பையும் ரொம்ப ரகசியமாக வைத்திருந்தார் லெய்ஸு அரசி. பெண்களுக்கு மட்டுமே இந்த வேலை கொடுக்கப்பட்டது. சீனப் பட்டுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அதிக விலைக்கு விற்கப்பட்டன. பட்டின் ரகசியத்தை யாராவது வெளியில் சொன்னால் மரண தண்டனை அளிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

சுமார் 2,500 ஆண்டுகள் பட்டு உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வந்தது. அப்போது ரோமானிய மன்னர் ஒருவர் சீன இளவரசியைத் திருமணம் செய்துகொண்டார். அவர் மூலம் பட்டுப் புழுவையும் பட்டுக் கூட்டையும் எடுத்துச் சென்றார். ஆனால், அவர்களுக்குப் பட்டுப் புழுவை வளர்க்கத் தெரியவில்லை. அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ளப் பாதிரியார் ஒருவரை அனுப்பிவைத்தார்கள். அவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பட்டுப் பூச்சியை வளர்க்கத் தெரிந்த 4 சீனப் பெண்களைக் கடத்திச் சென்று, ஜப்பானியர்கள் திருமணம் செய்துகொண்டனர். பிறகு அவர்கள் மூலமாகப் பட்டு வளர்ப்பைத் தெரிந்துகொண்டார்கள். கி.பி.550-ம் ஆண்டு பைசாண்டைன் இரண்டாம் மன்னர் துறவிகளைச் சீனாவுக்கு அனுப்பினார். அவர்கள், பட்டுப் பூச்சி முட்டைகளை மூங்கில் கம்புகளுக்குள் வைத்து, கடத்தி வந்தனர். இப்படிப் பல விதங்களிலும் பட்டுப் புழு வளர்ப்பு உலகத்துக்குத் தெரியவந்தது.

பட்டு உற்பத்தி

இன்றோ பட்டுப் புழு வளர்ப்பு மிகப் பெரிய தொழிலாகிவிட்டது.

பண்ணைகளில் பெரிய அளவில் பட்டுப் புழுக்கள் வளர்க்கப்படுகின்றன. இதற்காக நவீன சாதனங்கள்கூட வந்துவிட்டன. இன்றும்கூட சீனாவே பட்டு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா, உஸ்பெகிஸ்தான், பிரேசில், ஜப்பான், இத்தாலி, ஈரான், தாய்லாந்து, வியட்நாம், ருமேனியா போன்ற நாடுகளும் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் பட்டை கண்டுபிடித்த லெய்ஸு அரசி, ‘பட்டுப் புழுக்களின் தாய்’ என்று சீனாவில் போற்றப்படுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்