சித்திரக்கதை: குரங்கு படித்த பாடம்

By கீர்த்தி

அந்தக் காட்டில் பொழுது விடிந்தது. சூரியனின் ஒளிக்கதிர்கள் மரங்களின் வழியே காட்டுக்குள் புகுந்தது. மெல்லக் மெல்ல காட்டுக்குள் வெளிச்சம் பரவியது. ஆனாலும், பனிக்காலம் என்பதால் குளிர்க்காற்று வீசியது. மரம் செடிகளின் மீது படிந்திருந்த பனித்துளிகள் சூரியஒளியில் வெள்ளி மணிகளாக ஜொலித்தன.

ஒரு ஆண் குரங்கு மரங்களின் மீது ஏறிப் பழங்களைப் பறித்துக்கொண்டது. பிறகு மரத்திலிருந்து இறங்கிச் சற்று தூரம் நடந்து சென்று மண்ணைத் தோண்டி மண்ணுக்குள் விளைந்திருந்த கிழங்குகளைப் பறித்தது.

போதுமான கனிகளையும் கிழங்குகளையும் பறித்துக்கொண்ட பிறகு, தான் வசிக்கும் குகைக்குத் திரும்பியது. ஆண் குரங்கின் வருகைக்காகக் குகையில் பெண் குரங்கு காத்திருந்தது.

ஆண் குரங்கு குகைக்கு வந்ததும், “மணி எங்கே? உனக்காகவும் அவனுக்காகவும் கனிகளும் கிழங்குகளும் கொண்டுவந்திருக்கிறேன்” என்று பெண் குரங்கிடம் சொன்னது.

“மணி இன்னும் எழுந்திருக்கவில்லை. அவன் தூங்கிக்கொண்டிருக்கிறான்” என்றது பெண் குரங்கு.

ஆண் குரங்கு குகைக்குள் சென்று பார்த்தது. குரங்கு மணியோ குகையின் மூலையில் பரப்பப்பட்டிருந்த சருகுகளின் மீது படுத்து நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது.

மணியைப் பார்த்ததும் அப்பா குரங்குக்குக் கோபம் வந்தது.

“மணி! தூங்கியது போதும். எழுந்திரு!” என்று சொல்லி, மணியை எழுப்பியது அப்பா குரங்கு.

“என்னைத் தூங்க விடுங்கப்பா! எனக்குக் குளிருது! இந்தக் குளிரில் ஏன் இப்பவே எழுப்பிவிடுறீங்க?” என்று கேட்டது மணி.

“என்ன, இப்பவே எழுப்பிவிடுகிறேன் என்றா கேட்கிறாய்? பொழுது விடிந்து எவ்வளவு நேரமாகிவிட்டது? நான் அதிகாலையிலேயே எழுந்து உனக்காகக் கனிகளையும் கிழங்குகளையும் பறித்துக்கொண்டு வந்திருக்கிறேன். வந்து சாப்பிடு!” என்றது அப்பா குரங்கு.

“அப்பா! எனக்குப் பசியில்லை. எப்போது பசிக்குதோ நான் அப்போது எழுந்து சாப்பிடுவேன். இப்போது என்னைத் தூங்க விடுங்க!” என்று சொன்ன மணி, ஒரு காய்ந்த வாழையிலையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தது.

கோபம் கொண்ட அப்பா குரங்கு ஒரு குச்சியை எடுத்து மணியை அடிக்கப் போனது. அப்போது அம்மா குரங்கு தடுத்தது.

“இவன் இப்படிச் சோம்பேறியாக இருந்தால் எப்படி? அதிகாலையிலேயே எழுந்தால்தானே உணவைத் தேட முடியும். எதிர்காலத்தில் அவன் நன்றாக வாழ வேண்டாமா?” என்று கேட்டது அப்பா குரங்கு.

“சரி! நான் ஒரு யோசனை சொல்கிறேன்!” என்று சொன்ன அம்மா குரங்கு, அப்பா குரங்கின் காதில் ஒரு ரகசியத்தைச் சொன்னது.

சில நொடிகள் கழிந்தன. அப்பா குரங்கு மணியின் அருகில் சென்று, “மணி! நம் குகை அருகே வேட்டை நாய்கள் வந்துவிட்டன. அவை நம்மைக் கடிக்கப் போகின்றன. வா! இங்கிருந்து ஓடிப் போகலாம்!” என்று சொன்னது. அவ்வளவுதான்! குட்டிக்குரங்கு மணி அலறி அடித்துக்கொண்டு எழுந்தது.

“மணி வா! நாம் இங்கிருந்து ஓடிப் போய்விடலாம்” என்று அழைத்த அப்பா குரங்கும் அம்மா குரங்கும் ஓட்டம் பிடித்தன. குட்டிக்குரங்கு மணியும் பெற்றோருடன் ஓடத் தொடங்கியது.

வெகுதூரம் சென்றதும் அப்பா குரங்கு, “மணி நில்! இனி நமக்கு ஆபத்து இல்லை” என்று சொல்லி, ஓரிடத்தில் மூன்று குரங்குகளும் நின்றுவிட்டன. மணிக்கு மூச்சு வாங்கியது.

மணி சற்று ஆசுவாசம் அடைந்ததும், “மணி! இப்போது உனக்குக் குளிர்கிறதா?” என்று கேட்டது அப்பா குரங்கு.

மணிக்கு அப்போதுதான் அந்த உண்மை புரிந்தது. அதற்குக் குளிரவே இல்லை.

“அப்பா! இப்போது என் குளிர் நீங்கிவிட்டது. இது எப்படி நிகழ்ந்தது?” என்று கேட்டது மணி.

“மணி! பனிக்காலங்களில் குளிர்கிறது குளிர்கிறது என்று சொல்லி படுத்திருந்தால் இன்னும் குளிர் அதிகமாகத்தான் செய்யும். அதற்கு மாறாக நாம் குளிரைப் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே எழுந்து, ஓடியாடி விளையாடினால் நம் உடலின் வெப்பம் அதிகரிக்கும். குளிர் காணாமல் போய்விடும். உனக்கு இந்த உண்மையைப் புரியவைக்கத்தான் நானும் உன் அம்மாவும் வேட்டை நாய்கள் துரத்துவதாகச் சொல்லி ஓடவைத்தோம். நாளையிலிருந்து அதிகாலையில் எழுந்து நீ ஓடியாடி விளையாடு. கூடவே எங்களோடு வந்து கனிகளையும் கிழங்குகளையும் பறிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொன்னது அப்பா குரங்கு.

குட்டிக் குரங்கு மணியும் “சரியான வழியில் என் சோம்பலை நீக்கிவிட்டீர்கள். நாளையிலிருந்து நான் அதிகாலையிலேயே எழுந்துவிடுவேன்!” என்று சொன்னது,

“சரி! இப்போது நாம் குகைக்குப் போய்ச் சாப்பிடலாம்!” என்று குட்டிக் குரங்கு மணியை அழைத்துக் கொண்டு அப்பா குரங்கும் அம்மா குரங்கும் குகைக்குத் திரும்பின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்