சித்திரக்கதை: பூங்காவில் ஒரு பாடம்

By ஏ.ஆர்.முருகேசன்



n n

பூங்காவுக்குள் நுழையும்போதே ஜனனிக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. அப்பாவின் கையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சறுக்கு விளையாட ஓடினாள்.

“பார்த்துப் போம்மா… கீழே விழுந்துடப் போற…” பதற்றப்பட்டார் அம்மா.

“பயமுறுத்தாதே. விளையாடிட்டு வரட்டும். வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கறா. இன்னைக்கு ஒரு நாளாவது சுதந்திரமா ஓடி விளையாடட்டும்” அப்பா உற்சாகப்படுத்தினார்.

சின்ன சறுக்கு விளையாட்டு, பெரிய சறுக்கு விளையாட்டு, சின்ன ஊஞ்சல், பெரிய ஊஞ்சல், ராட்டினம், ஏற்றுமரம், இறக்குமரம் என அங்குமிங்கும் ஓடி விளையாடினாள் ஜனனி. அவளை வேடிக்கை பார்த்துக்கொண்டே அம்மாவும் அப்பாவும் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

விளையாடிவிட்டு மூச்சு வாங்கியபடி ஓடிவந்த ஜனனிக்கு வியர்த்திருந்தது. கொஞ்சம் நேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு அம்மாவிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடித்தாள்.

பின்னர், “வாங்கப்பா… பெரிய ஊஞ்சல்ல எல்லோரும் உட்கார்ந்து விளையாடலாம்” எனக் கூப்பிட்டாள்.

ஜனனியின் ஆசையைத் தீர்ப்பதற்கு மூவரும் சேர்ந்து உட்கார்ந்து பெரிய ஊஞ்சலில் ஆடினார்கள். அந்த ஆசையும் தீர்ந்த பிறகு ஜனனிக்கு நொறுக்குத் தீனி தின்ன வேண்டும் போல இருந்தது.

மீண்டும் சிமெண்ட் பெஞ்சுக்கு மூவரும் வந்தனர். தன் கைப்பையில் வைத்திருந்த பிளாஸ்டிக் பையை வெளியே எடுத்தார் அம்மா. அதனுள் இருந்த சிறிய பிளாஸ்டிக் பைகளை ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டார்கள். பிளாஸ்டிக் பையைப் பல்லால் கடித்துக் கிழித்துப் பிரித்துப் பூந்தியைச் சாப்பிட ஆரம்பித்த ஜனனி, எதிர் வரிசையில் கண் பார்வையற்ற கணவனும் மனைவியும் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். அவர்கள் அருகில் ஒரு சிறுவன் உட்கார்ந்திருந்தான். அவர்களும் பிளாஸ்டிக் பையில் இருந்த புளிச்சோறு பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“அப்பா! அந்தப் பையன் அவங்களோட மகனாப்பா?” சந்தேகத்துடன் கேட்டாள் ஜனனி.

“முக ஜாடையைப் பார்க்கும்போது அப்படித்தாம்மா தெரியுது” பதிலளித்தார் அப்பா.

“அப்புறம், அவனுக்கு மட்டும் கண் தெரியுது?” வியப்புடன் கேட்டாள் ஜனனி.

“கண் பார்வை இழந்தவங்களுக்கு கண் பார்வை இழந்த பிள்ளைதான் பிறக்கும்னு உனக்கு யாரும்மா சொன்னது? எந்தக் குறையுமில்லாத ஆரோக்கியமான குழந்தையும் பிறக்கும்மா!”

“ஓ… அப்படியாப்பா. பாவம்பா அவங்க!” எனக் கூறிக் கொண்டே பொட்டலத்தைப் பிரித்து முழுவதையும் சாப்பிட்டு முடித்த பிறகு பிளாஸ்டிக் பையையும் காகிதத்தையும் புல்வெளியில் தூக்கி வீசினாள் ஜனனி. அது காற்றில் பறந்து பாதையில் விழுந்தது.

“ஜனனி… குப்பையை இப்படியா பாதையில் வீசறது?” அதட்டினார் அப்பா.

“நான் மட்டுமா குப்பையைப் பாதையில் போட்டுருக்கேன். அங்கே பாருங்கப்பா எத்தனை பேரு பிளாஸ்டிக் பையைப் போட்டுருக்காங்கன்னு…” என்று சுட்டி காண்பித்தாள் ஜனனி.

“அவங்கதான் தப்பு செய்றாங்கன்னா நாமும் செய்யலாமா? ஒழுங்கா நீ வீசின குப்பையை எடுத்து அங்க இருக்கற குப்பை தொட்டியில போட்டுட்டு வா!”

“போங்கப்பா… வீட்டுலதான் இதைச் செய், அதைச் செய்னு வேலை சொல்லிக்கிட்டே இருப்பீங்க. இங்கே வந்தும் அதையே சொல்லாதீங்கப்பா” சிணுங்கினாள் ஜனனி.

அப்பா அடுத்து ஏதோ சொல்ல முயற்சிக்கையில் தற்செயலாகக் கண் பார்வையற்ற தம்பதியின் பக்கம் அவரது பார்வை சென்றது.

அவர்கள் அதற்குள் சாப்பிட்டு முடித்திருந்தார்கள். பிளாஸ்டிக் பையையும், காகிதத்தையும் சிறுவனின் அம்மா எடுத்துக் கொள்ள, சிறுவனும் காகிதத்தையும் தண்ணீர் பாட்டிலையும் கையில் எடுத்துக்கொண்டான். தன் அம்மாவின் கையைப் பிடித்துக் குப்பைத் தொட்டியை நோக்கி அழைத்துச் சென்றான்.

குப்பைத் தொட்டியைத் தன் கையால் தடவி அதன் விளிம்புப் பகுதியைப் பிடித்துக் கொண்டு அதற்குள் குப்பையைப் போட்டார் அம்மா. சிறுவனும் குப்பையைப் போட்டு விட்டுக் கை கழுவினான். அம்மாவும் கை கழுவிய பிறகு இருவரும் சிமெண்ட் பெஞ்சுக்குத் திரும்பினார்கள்.

மீண்டும் அப்பாவை அதே போல் குப்பைத் தொட்டிக்கு அழைத்துச் சென்று குப்பையை அதில் போட்டுக் கை கழுவவைத்து அழைத்து வந்தான் அந்தச் சிறுவன்.

இதையெல்லாம் ஆச்சரியமாய் கவனித்துக் கொண்டிருந்த அப்பா, ஜனனியைத் திரும்பிப் பார்த்தார். அவளும் அதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“பார்த்தாயா ஜனனி! அவங்க பார்வை இழந்தவங்களா இருந்தாலும் இந்தப் பூங்கா, குப்பைகளால் அசுத்தமாகிவிடக் கூடாதுன்னு நினைக்கிறாங்க. தன்னால பார்க்க முடியாத பூங்கா எப்படி இருந்தா நமக்கென்னன்னு அலட்சியமா இருக்காம, சுத்தமா வச்சுக்க முயற்சி பண்றாங்க. அவங்களே அப்படி நினைக்கும்போது, கண் பார்வையுள்ள நாம அதைவிட ஒரு படி மேலே முயற்சி செய்யணும் இல்லையா?”

எப்போதும் மறுப்பு கூறும் ஜனனி, இப்போது மிக அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

“இன்னொண்ணு கவனிச்சியா? அவங்கவங்க வேலைய அவங்கவங்களே செஞ்சாங்க. தங்களுக்குக் கண் தெரியாதுங்கறதால அந்தப் பையன் கிட்ட கொடுத்துக் குப்பையைப் போடச் சொல்லல!”

ஜனனியின் மனத்துக்குள் அந்தக் காட்சி ஏதோ ஒன்றை உணர்த்தியது. அவளுக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது.

வேகமாக எழுந்த ஜனனி, தான் வீசி எறிந்த குப்பைகளைத் தேடி எடுத்தாள். அவற்றோடு மற்றவர்களால் வீசி எறியப்பட்டுப் பாதையில் கிடந்த குப்பைகளையும் எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டாள்.

“வெரி குட்!” என்று கை தட்டினார் அப்பா.

இப்போதெல்லாம் வீட்டிலும் குப்பை வாளியில்தான் குப்பையைப் போடுகிறாள் ஜனனி! அதுமட்டுமல்ல, தன் வேலைகளைத் தானே செய்துகொள்கிறாள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்