இயற்கை விந்தை: இப்படியும் ஒரு மரம்!

By செய்திப்பிரிவு

சந்தன மரம் என்றாலே அதன் வாசனையும் மதிப்பும்தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஆனால், சந்தன மரம் வளரும் விதத்தை அறிந்தால், அதுதான் இனிமேல் உங்களுக்கு ஞாபகம் வரும்.

வேப்பம் மரம், புங்க மரம் என விரும்பும் மரத்தை நினைத்த இடத்தில் தனியாக வளர்க்கிறோம் இல்லையா? ஆனால், சந்தன மரத்தை இப்படித் தனியாக வளர்க்க முடியாது. சந்தன மரத்தை வேறு மரங்களுக்குப் பக்கத்தில்தான் வளர்க்க முடியும். அதற்குக் காரணம் இருக்கிறது. சந்தன மரத்தின் வேர் ஒரு ஒட்டுண்ணி. அதனால், ஒரு மரத்துக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துகளையும் மண்ணிலிருந்து அவற்றால் நேரடியாகப் பெற முடியாது. நிலத்துக்கு அடியில் இதன் பக்கத்தில் உள்ள வேறு மரத்தின் வேரைத் தேடிச்சென்று ஒட்டிக்கொள்ளும்.

அப்படி ஒட்டிக்கொள்ளும்போது, இதன் வேரில் ‘பௌஸ்டோரியா’என்னும் உறுப்பு வளரும். அது பக்கத்தில் உள்ள மர வேரைத் துளைத்துச் சென்று உயிர் வாழத் தேவையான நைட்ரஜனையும் பாஸ்பரஸையும் எடுத்துக்கொள்ளும். அதோடு விட்டுவிடாது, தனக்கு ஊட்டம் தரும் அந்த மரத்தையும் பாதிப்படையச் செய்துவிடும். இதனால் சந்தன மரக்காடுகளில் உள்ள மற்ற மரங்கள் கொஞ்சம் நோஞ்சானாகவே இருக்கும்.

சந்தன மரம் மெதுவாக வளரும் தன்மைக்கொண்டது. அது ஓரளவு வளரும்வரை மற்றத் தாவரங்கள் எல்லாமே சந்தன மரத்தின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டே ஆக வேண்டும். மூக்கைத் துளைக்கும் அளவுக்கு வாசம் வீசும் சந்தன மரக்கட்டையின் இந்தச் செயல், இயற்கையின் விந்தை இல்லையா?

தகவல்திரட்டியவர்: ஆ. ஹரிணி, 6- ம் வகுப்பு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE