‘தூய்மை இந்தியா' (ஸ்வச் பாரத்) என்றொரு புதுத் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நமக்கெல்லாம் தெரியும். சரி, அந்தத் திட்டத்தின் கீழ் கழிப்பறையைச் சுத்தம் செய்பவர்கள் யார்? எல்லா சமூகத்தினரும் சுத்தம் செய்கிறார்களா? இல்லை, ஒரேயொரு சமூகத்தினர் என்பதுதான் பதில். சரி, இப்படிக் காலம்காலமாகச் சுத்தம் செய்துவருபவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம், அவர்கள் கவுரவமான வாழ்க்கை நடத்த உதவுகிறதா? இல்லை.
ஆரோக்கியம் காப்பவர்கள் யார்?
நோய் வந்தால் மருத்துவரிடம் ஒரு முறை காட்டுவதற்குக் குறைந்தபட்சமாக 100 ரூபாய் செலவழிக்கிறோம். ஆனால், நமக்கு நோய் வராமல் இருப்பதற்குச் சேவை செய்யும் சுகாதாரப் பணியாளர்களுக்கு என்ன சம்பளம்? வீட்டின், ஊரின், நாட்டின், ஒட்டுமொத்த மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பணி அவர்களுடையது. அதற்குத் தரப்படும் சம்பளம் நாட்டிலேயே மிகக் குறைவானது. அது மட்டுமல்லாமல், அந்த வேலையும், அந்த வேலையைச் செய்பவர்களும் நம் சமூகத்தில் இழிவாக நடத்தப்படுகிறார்கள். இது எப்படி நியாயமாகும்?
நாகரிக-அறிவியல் வளர்ச்சியில் உச்சம் தொட்டுவிட்டதாகச் சொல்லப்படும் 21-ம் நூற்றாண்டிலேயே இந்த நிலைமை என்றால், 30 ஆண்டுகளுக்கு முன் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருந்திருக்கும்? அதை பேச்சிராசு என்ற ஆறாம் வகுப்பு மாணவனுக்கு எழும் கேள்விகள் வழியாகக் கதையாகச் சொல்லியிருக்கிறார் சிறார் எழுத்தாளர் கொ.மா.கோ. இளங்கோ. பதின்வயதினரும் குழந்தைகளும் புரிந்துகொள்ளும் வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது.
வயதைக் கடந்த நண்பர்கள்
'இந்தியக் குழந்தைகளுக்கு நேரு மாமா என்றால், பேச்சிராசு வசிக்கும் தெருவுக்கு யார் மாமா?அவர்தான் சஞ்சீவி மாமா' என்ற வாக்கியத்துடன் இந்த நாவல் தொடங்குகிறது. பேச்சிராசு என்ற சிறுவன், சஞ்சீவி மாமா எனும் சுகாதாரப் பணியாளர் ஆகிய இருவரைச் சுற்றியே கதை நகர்கிறது. இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்றாலும், நண்பர்களாக இருக்கிறார்கள்.
கிராமங்களில் காலைக்கடன் கழிப்பது மிகப் பெரிய ஆபத்தாக, இக்கட்டான வேலையாக இருந்த காலம் அது. அதைவிட மோசமான நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் அப்போது நடத்தப்பட்டனர். இந்த இரண்டு அம்சங்களையும் அடிப்படையாக வைத்தே இந்தக் கதை பின்னப்பட்டுள்ளது.
கதையின் கடைசியில் மாறுவேடப் போட்டியில் பேச்சிராசு ஜெயிப்பதற்கு சஞ்சீவி மாமா காரணமாக இருக்கிறார். அதெப்படி நடக்கிறது என்பதைக் கதையைப் படிக்கும்போது புரிந்துகொள்ளலாம்.
நெருக்கமான கதை
கதையின் ஒவ்வொரு பகுதியும் அது நடந்த காலத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது. ஒரு சிற்றூரில் அன்றைக்கு என்னவெல்லாம் நடந்திருக்குமோ, அதெல்லாமே இந்தப் புத்தகத்தில் காட்சிகளாக வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு தென் மாவட்ட கிராமமே கதை நிகழும் மையம். அந்தப் பகுதிக்கு உரிய மொழி, வட்டாரச் சொற்களுடன் இந்தக் கதை சொல்லப்பட்டிருப்பது கதையை வாசகருக்கு நெருக்கமாக மாற்றுகிறது.
சஞ்சீவி மாமாவும் வயல்களுக்காகப் பன்றி விட்டை சேகரிக்கும் சொக்கத்தாயியும் இயல்பிலேயே கரிசனம் மிகுந்தவர்களாகவும், எல்லா அவமானங்களையும் தாங்கிக்கொண்டு வாழ்பவர்களாகவும் உள்ளனர். இன்றைக்கும் அந்த எளிய மக்கள், அதே நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் எதிர்த்துக் கேட்கவும் ஆரம்பித்துள்ளனர்.
உயிரூட்டும் ஓவியம்
சாதியமைப்பு, சாதியப் பெருமிதம், ஒடுக்குமுறை பற்றியெல்லாம் குழந்தைகள் மனதில் நிறைய கேள்விகள் எழும். இந்தச் சமூகத்தைப் புரிந்துகொள்ள முயலும்போது, புதுப்புதுக் கேள்விகள் எழுவது இயல்பான ஒன்று. அது போன்று பேச்சிராசுவுக்கு எழும் கேள்விகளுக்கு, இந்த நூல் பதில்களைத் தருகிறது.
நூலுக்கு உயிரூட்டுவதுபோல ஓவியர் அரஸ் வரைந்த கோட்டோவியங்களும், மணிவண்ணன் வரைந்த முகப்பு ஓவியமும் அமைந்துள்ளன. கொ.மா.கோ. இளங்கோ எழுதிய படைப்புகளிலேயே சிறந்த படைப்பாக இது உருப்பெற்றுள்ளது.
சஞ்சீவி மாமா,
கொ.மா.கோ. இளங்கோ,
புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு,
7 இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 18, தொடர்புக்கு: 044-24332924
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago