அம்மாவின் சேட்டைகள் 07: அருங்காட்சியகமான பாறை!

By சாலை செல்வம்

பாட்டி ஊருக்குப் போகும்போதெல்லாம் அம்மாவுடன் சேர்ந்து காடு மேடல்லாம் சுற்றுவேன். “இன்னும் வளரவே இல்லை, என் மகள்” என்பார் பாட்டி. “என் பிள்ளைக்கு எல்லாத்தையும் காட்ட வேண்டாமா?” என்பதே அம்மாவின் பதிலாக இருக்கும். அதில் முக்கியமானது பாறை ஏறுவதும் மலைப்பாறை ஏறுவதும்தான். பாட்டியின் ஊரிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் நார்த்தா மலை, ஊரல் மலை, சித்தன்னவாசல் மலை, குடுமியான் மலைகளெல்லாம் இருக்கும். 10 நிமிடம் நடந்தால் கூத்தினி மலையும் குட்டிப்பாறைகளும் இருக்கும். ஒரே மூச்சில் உச்சிக்கு ஓடும் அளவுக்கு அது எனக்குப் புடிக்கும்.

அம்மா என்னை அழைத்துக்கொண்டு போய் அருங்காட்சியகம் காட்டுவது போல் காட்டுவார். அதில் குளம் இருக்கும். ஊருணி இருக்கும். கோயில் இருக்கும். ஆட்டுப்பட்டியும் மாடு கட்ட இடமும் இருக்கும். சிட்டுக்குருவி முட்டையிடும் இடங்கள் ஒளிந்திருக்கும். பாறை இடுக்கில் வளர்ந்த ஒற்றை மரம். மழைத் தண்ணீர் ஓடி குழியான வாய்க்கால்கள். நெல்லும் பயிரும் காயவைக்கப் பாறை, பாய் விரித்தது போன்றிருக்கும். நெல், கம்பு குத்த உரல் உண்டு. அம்மா சறுக்கி விளையாடிய உயரமான, பயங்கரமான சறுக்குப் பாறை, போவோர் வருவோர் உட்கார்ந்து பேச, படுத்துப் பேசுவதற்கான பாறைகள் என்று எண்ணற்ற விஷயங்களை அம்மா அங்கே காட்டுவார்.

மாலை நேரத்தில் அங்கிருக்கும்போது, பரவியிருக்கும் பாம்பின் வாசனை பற்றி அம்மா சொல்வது அழகாக இருக்கும். பவுர்ணமி நேரத்தில் அம்மா தன் வயதுப் பெண்களையும் என் வயதுக் குழந்தைகளையும் ஆறு மணிக்கு மேல் அழைத்துச் செல்வார். சாப்பாடு எடுத்துக்கொள்வோம். நிலாச்சோறா மலைச்சோறா என்று குழம்பும். அம்மாக்கள் கூட்டம் தனியாகக் கதை பேசும். பாறை இடுக்குகளில், புதரையொட்டிய பாறைகளில், தண்ணீரில்… நாங்கள் பத்திரமாக இருப்பதற்காக அவர்கள் கண்கள் எப்போதும் எங்கள் மேல் இருக்கும். பாடி, ஓடி, ஆடி, பேசி 10 மணிக்கு மேல் திரும்புவோம்.

பாறை, தண்ணீரைப் போலவே அழகானது. “மழைக் காலத்துப் பாறையும் இரவு நேரத்துப் பாறையும் குளிர்ச்சியானது. வெய்யில் பாறை வேலை செய்பவர்களுக்கானது” என்பார் அம்மா. பாறை உறுதியானது. சுடும் பாறை பற்றிக் கேட்கவே வேண்டாம்.

அம்மா சிறுபிள்ளையாக இருக்கும்போது சித்தன்னவாசலுக்கு நடந்தே போவாராம். வழியில் உள்ள குட்டி மலைகளை உடைப்பதைப் பார்த்துக்கொண்டே போவாராம். “நாங்கள் சின்னப் புள்ளைகளா நடந்து போவோம். கையில் தூக்குச்சட்டியில சோறு இருக்கும். கதை கதையா பேசுவோம். கையில் ஒரு சின்னக் கல்லை எடுத்து வைத்துக்கொண்டு, இது கொஞ்ச வருஷம் கழிச்சி சின்னப் பாறையாகும். அப்புறம் பெரிய பாறையாகும்… அது சாமி கல்லாகக்கூட மாறும். யாராவது புது வீடு கட்டுனா அந்தச் சுவரில்கூட இருக்கும். இப்படி எதையாவது பேசிக்கொண்டே நடப்போம்.

தூரத்தில் நந்தி மாதிரி தெரியும் மலை. விறுவிறுவென்று ஏறுவோம் சமணர் படுக்கைக்கு. ஆளுக்கொரு படுக்கையைப் பிடித்துப் படுப்போம். பேசிக்கொள்வோம். கண்ணை மூடித் தூங்குவோம். அப்போதுதான் முனிவர்கள் பலன் நமக்குக் கிடைக்கும். இல்லையென்றால் உட்கார்ந்து முறையாகத் தியானம் செய்வோம். எங்கள் பேச்சும் செயல்களும் ஆனந்தமாக இருக்கும். உடலைத் தடவுவதுபோல் அந்த மழமழ பாறையைத் தடவிக்கொடுப்போம். பாறை எவ்வளவு வழவழப்பானது!

அங்கிருந்து குகை வழியாகத் தரைக்கு வருவதுதான் த்ரில். தீப்பந்தம் எடுத்துச் சென்று அதைப் பற்றவைத்து, அதன் வழியில் நடக்க வேண்டும். ஒருவர் பின் ஒருவராக நடக்க வேண்டும். உடலை நுழைக்க முடியாத பாறை இடுக்கு. பகலில் ஒளிந்துகிடக்கும் அமாவாசை இருட்டு. பாம்பும் நரியும் வாழும் வீடு. மூச்சு அடைத்து மீண்டும் வெளிவரும். வவ்வாலின் வாடை துரத்தியடிக்கும். கால் பாவுவதற்கு இடமில்லாமல் தொங்கிக்கொண்டே அலையும். ஒருவருடன் ஒருவர் பேச முடியாமல் அமைதி நிலவும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ரகசியமாகப் பேசிக்கொள்வோம்.

ஆபத்தைக் கடந்தவர்கள் அமைதியைக் குலைப்பர். இருட்டுக்குள் கிடக்கும் காளானை முட்டை என்பர். அரணையைப் பாம்பு என்பர். திடீரென்று மலையடிவாரம் வந்து நிற்கும். மூச்சிரைக்க இரைக்க இரண்டு மணிநேரம் ஏறிய மலையைச் சிறு ஓட்டை இடுக்குகளில் நுழைந்து டபக்கென்று வெளிவந்த மாதிரி இருக்கும். சோறு குடல் வழியா வெளிய வருகிற மாதிரி. இப்ப அந்தக் குகை வழியை அடைச்சு ரொம்ப நாளாச்சு. ஆடு, மாடு மேய்க்கிறவங்களுக்குத் தெரியும். அதைத் தெரிஞ்சுக்க நீ மாடு மேய்க்கிறவனா ஆகலாம். அது அவ்வளவு அற்புதம்!

அங்கிருந்து நடந்து சிற்பக் குகைக்கு வருவோம். ஓவியங்களைப் பார்ப்போம். மீன், தாமரைப்பூ, வில் எறிதல் என்று காட்சிகளை ஆளுக்கொரு கதையாகச் சொல்லிப் பார்ப்போம். நான் காதைப் பிய்த்து எடுத்துவிட்டேன் பார் என்று ஓவியத்தைத் தகடுபோல் பிய்த்துப் பத்திரமாகப் பையில் வைத்துக்கொள்வோம். அப்போ காவலாளி, கதவு, டிக்கெட் எல்லாம் இல்லை.

அங்கயே சாப்பிட்டு, படுத்து, காலை ஆட்டிக்கொண்டு பேசுவோம், தேனடையைப் பார்த்தால் அதற்கு அடியில் நின்று நாக்கை நீட்டிக்கொள்வோம். வெய்யில் வீட்டுக்குத் திரும்பும்போது நாங்களும் திரும்புவோம்” என்று அம்மா சொல்லிச் சொல்லி நானும் அங்கே ஆசையாகப் போனேன் .

அம்மாவின் சித்தன்னவாசல் மலையைப்போல நான் போனபோது இருக்கவில்லை. எங்கு போனாலும் இதைச் செய்யாதே என்ற பலகை, அதை மீறும் மக்கள். அதற்கு அம்மா, “அது அந்தக் காலம், இது இந்தக் காலம்” என்று பாட்டுப் பாடி என் வாயை அடைத்துவிட்டார்.

(சேட்டைகள் தொடரும்)
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்