சித்திரக்கதை: அம்மாவுக்கு மகள் சொன்ன கதை

By மு.முருகேஷ்

இரவு பத்து மணி. இன்னமும் தூங்காமல் கதை சொல்லச் சொல்லி அம்மாவை நச்சரித்தாள் கவின் குட்டி. இரண்டாம் வகுப்பு படிக்கும் சுட்டி.

சாப்பிட வேண்டும், தூங்க வேண்டுமென்றால் அவளுக்குக் கதை சொல்லியாக வேண்டும். கதை கேட்காமல் அவளுக்குப் பொழுதே விடியாது. கதை சொல்ல ஆரம்பித்துவிட்டால், தலையாட்டிக்கொண்டே எது சொன்னாலும் கேட்பாள். கதை சொல்லாவிட்டால் பிடிவாதம்தான். அம்மாவும் சலிக்காமல் ஏதாவது ஒரு கதையைக் கவினுக்குத் தினமும் சொல்லிவந்தாள்.

அன்றைக்குக் கவினுக்குச் சொல்வதற்கு அம்மாவிடம் கதையே இல்லை.

படுக்கப் போனதும், “கதை சொல்லுமா..?” என்றாள் கவின்.

“இன்னிக்கு ஒருநாள் மட்டும் பொறுத்துக்கடா. நாளைக்குப் புதுசா கதை சொல்றேன்!” என்றாள் அம்மா. கவின் கேட்பதாயில்லை.

“நாளைக்கு நீ கதை சொன்ன பிறகு, நான் தூங்குறேன்” எனச் சொல்லிக்கொண்டே, படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்துவிட்டாள்.

கவினை வழிக்குக் கொண்டு வருவதற்காக, “செல்லம், அம்மாவுக்கு இம்புட்டுத்தான்டா கதை தெரியும். நீதான் பள்ளிக்கூடம் போறியே. நீ வேணா அம்மாவுக்கு ஒரு கதை சொல்லேன்?” என்று கேட்டாள் அம்மா.

“எப்பவுமே அம்மாதான் குழந்தைக்குக் கதை சொல்லணும். குழந்தை போய் அம்மாவுக்குக் கதை சொல்லுமா?” என்று எதிர்கேள்வி கேட்டாள் கவின்.

“உனக்காக அம்மா எம்புட்டு கதை சொல்லியிருப்பேன். அம்மாவுக்காக ஒரேயொரு கதை சொல்லக் கூடாதா?” என்று அம்மா கேட்டாள்.

அம்மா இவ்வளவு தூரம் சொன்னதும், கவினும் அம்மாவுக்குக் கதை சொல்லத் தொடங்கினாள்.

அது ஒரு அழகான கிராமம்.

அந்தக் கிராமத்து ஓரமா ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றோரமா ஒரு முயலும் ஆமையும் வாழ்ந்தன.

ஒருநாள்

விவசாயி ஒருவர் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைச் சந்தையில் விற்பதற்காகக் கொண்டுபோனார். போற வழியில், ஆற்றோரமாய்ப் பசியோடு இருந்த முயல், ஆமை இரண்டையும் பார்த்தார்.

தனது கூடையிலிருந்த முட்டைக்கோஸ் ஒன்றை எடுத்து, “இருவரும் இதைப் பகிர்ந்து சாப்பிடுங்கள்..!” என்று சொல்லிவிட்டுப் போனார்.

முயலுக்கு நல்ல பசி. ஆமைக்குத் தராமல் தான் மட்டுமே முழுசா சாப்பிட ஆசைப்பட்டது முயல்.

“ஆமையாரே! இந்த முட்டைக்கோஸை முழுவதுமாகச் சாப்பிட்டால்தான் சக்தி கிடைக்கும். ஒரு போட்டி வைப்போம். அதில், யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களே முழு முட்டைக்கோஸையும் சாப்பிடலாம்!” என்றது.

“மறுபடியும் போட்டி வைக்கிற உன் பழக்கத்தை ஆரம்பிச்சிட்டீயா?” என்று மனசுக்குள் நினைத்தபடியே, “ம்… சொல்லு. என்ன போட்டி?” என்று கேட்டது ஆமை.

“நான் ஏதாவது போட்டி சொன்னா, உன்னை ஏமாத்துறேன்னு சொல்லுவே. நீயே சொல்லு!” என்று முயல் அப்பாவியாய்ச் சொல்ல, முயலின் எண்ணத்தைப் புரிந்துகொண்டது ஆமை.

சற்று யோசித்த ஆமை, “முதலில் யார் அவர்கள் இருக்கும் வீட்டைத் தொட்டுவிட்டு வருகிறார்களோ, அவர்களுக்கே முழு முட்டைக்கோஸ்!” என்றது ஆமை.

இதைக் கேட்டதும் முயலுக்கு ஏக குஷி.

“ஓ… என் வீட்டைத்தானே, இதோ ஒரு நொடியில் தொட்டுவிட்டு வருகிறேன்!” என்றபடி குதித்தோடியது முயல்.

வேகமாகப் போய் வீட்டைத் தொட்டுவிட்டு, மூச்சு வாங்கியபடி முயல் திரும்பியது. வந்து பார்த்தால் முயலுக்கு ஒரே அதிர்ச்சி.

முட்டைக்கோஸை ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது ஆமை.

“நீ உன் வீட்டுக்கே போகாம இப்படிச் செய்யிறீயே… இது நியாயமா..?” என்று கோபமாகக் கேட்டது முயல்.

ஆமை முயலைப் பார்த்துச் சொன்னது;

“என்னோட வீட்டை நான் முதல்ல தொட்டேன். முட்டைகோஸை நானே எடுத்துக்கிட்டேன்!” என்று அமைதியாகச் சொன்னது ஆமை.

இதைக் கேட்ட முயலுக்குக் கோபம் வந்தது.

“நீ பொய் சொல்றே, நீ போகவேயில்லை?” என்று முயல் சொன்னது.

“எனக்குன்னு தனியே வீடு ஏது? என் ஓடுதானே எனக்கு வீடு. இதோ, இப்படித்தான் என் வீட்டைத் தொட்டேன்!” என்றபடி, தன் தலையால் முதுகிலுள்ள ஓட்டை தொட்டுக் காட்டியது ஆமை.

‘பேராசைப்பட்டு உள்ளதையும் இழந்தோமே!’ என்று தலை கவிழ்ந்தபடி முயல் நின்றது.

கவின் சொன்ன இந்தக் கதையைக் கேட்டதும் அம்மா சந்தோஷப்பட்டார். ஓட்டப் பந்தயம் வைத்து, ஆமையை வெற்றி கொண்ட முயலின் கதையைத்தான் அம்மா கவினுக்குச் சொல்லியிருக்கிறாள். ஆமை முயலை ஜெயித்த கதையை இப்போதுதான் அம்மாவே கேட்கிறாள்.

“ராசாத்தி… யாரு உனக்கு இந்தக் கதையைச் சொன்னது?” என்று கேட்டாள் அம்மா.

“யாரும் சொல்லலை, நானாதான் சொல்றேன்!” என்றாள் கவின்குட்டி.

உடனே, அம்மா, “என் குட்டியம்மாவுக்கு எம்புட்டு அறிவு!” என்று கொஞ்ச, “பொறும்மா, இன்னும் கதை முடியலே” என்றபடி தொடர்ந்தாள் கவின்குட்டி.

வருத்ததுடன் போன முயலைக் கூப்பிட்டது ஆமை.

“இந்தா, நீயும் இதைச் சாப்பிடு!” என்று பாதி முட்டைக்கோஸை முயலிடம் கொடுத்தது ஆமை. முயலும் வாங்கிச் சாப்பிட்டது. பிறகு முயலிடம் ஆமை சொன்னது;

“அவரவர் சக்திக்கு அவரவர் செயலே பலமானதுதான். உன்னால் மிக வேகமாக ஓட முடியும். என்னால் நீரில் வேகமாக நீந்த முடியும். வீணாக யாரையும் முடியாத போட்டிக்குக் கூப்பிடுவது தவறு!”

முயல் தன் தவறை உணர்ந்து, ஆமையை நட்போடு அணைத்துக்கொண்டது.

“எப்படி நம்ம முயல் ஆமை கதை..?” என்று கவின் அம்மாவிடம் கேட்டாள்.

“உலகத்திலேயே அம்மாவுக்கு மகள் சொன்ன முதல் கதை இதுதான் எஞ்செல்லமே!” என்றபடி கவினைக் கட்டியணைத்து முத்தமிட்டாள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்