“ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது;
அதில்,ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது...”. புகழ்பெற்ற பழைய பாடல் இது. வேலை செய்யும் இடத்தில் மட்டுமல்ல; விளையாடும் இடத்திலும்கூட ஆண், பெண் என்ற பேதமில்லாமல், எல்லாக் குழந்தைகளும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும்போது எவ்வளவு சந்தோஷம் இருக்கும்.
சில ஊர்களில் பெண் குழந்தைகள் மட்டும் விளையாடும் இந்த விளையாட்டை, எங்கள் ஊரில் எல்லாரும் சேர்ந்தே விளையாடுவோம். அது என்ன விளையாட்டு? தெரிந்துகொள்ள ஆசையா? இந்த வாரம் நாம் எல்லாருமே அந்த விளையாட்டைத்தான் விளையாடப் போகிறோம். அந்த விளையாட்டின் பெயர் என்ன தெரியுமா?
‘ஒரு குடம் தண்ணி ஊத்தி..!’
இந்த விளையாட்டை விளையாடும் முன்பாக, சம பலமுள்ள இருவரை முதலில் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அப்படித் தேர்வு செய்யப்பட்ட இருவரும், ஒருவர் கையை ஒருவர் பின்னிக்கொண்டு, கைகளை முக்கோணம் போல் உயர்த்தியபடி நிற்பார்கள்.
விளையாடும் மற்ற எல்லாக் குழந்தைகளும் ஒருவர் பின் ஒருவராக, முன்னிருப்பவரின் சட்டையைப் பிடித்தபடி, ஒரே சங்கிலி போல் வரிசையாக நின்றுகொள்ள வேண்டும். இந்த விளையாட்டு ஒரு பாடலுடன் தொடங்கும். எல்லாரும் சேர்ந்து பாடுவார்கள்.
“ஒரு குடம் தண்ணி ஊத்தி, ஒரு பூ பூத்துச்சாம்…
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி, ரெண்டு பூ பூத்துச்சாம்…
மூணு குடம் தண்ணி ஊத்தி, மூணு பூ பூத்துச்சாம்…
நாலு குடம் தண்ணி ஊத்தி, நாலு பூ பூத்துச்சாம்…”
- இப்படி எல்லாரும் பாடிக்கொண்டே, கைகளை உயர்த்தி நிற்கும் இருவருக்கும் இடையில் புகுந்து வருவார்கள். பாட்டு தொடரத் தொடர, சுற்றிச் சுற்றி வந்துகொண்டே இருக்க வேண்டும்.
“பத்துக் குடம் தண்ணி ஊத்தி, பத்துப் பூ பூத்துச்சாம்…” என்று பாடி முடித்ததும், “மொட்ட மொட்ட பூக்காரி, யாருமில்லே ஊருக்குள்ளே. கடைசியா வர்ற புள்ளைய பூப்போட்டு அழைச்சிக்க!” என்று,கைகளைக் கோர்த்தபடி நின்றிருக்கும் இருவரும் சொல்வார்கள். பிறகு, சட்டெனக் கைகளைக் கீழே இறக்கிச் சங்கிலிபோல் வரும் குழந்தைகளுள் யார் அவர்களின் கைக்குள் வருகிறார்களோ, அவரை அப்படியே இரு கைகளுக்குள்ளும் இறுக்கி அணைத்துக்கொள்வார்கள்.
அப்படி மாட்டிக்கொண்ட சிறுமியை விடுவிக்க, எல்லாக் குழந்தைகளும் போய்க் கேட்பார்கள்.
குழந்தைகள்: என் ஆட்டை ஏன் பிடிச்சே?
மற்ற இரு குழந்தைகள்: எங்க பயிரில மேஞ்சது. அதனால பிடிச்சோம்!
குழந்தைகள்: இம்புட்டுப் பணம் தர்றோம். விடுடா
ம.இ.குழந்தைகள்: விட மாட்டோம் போடா.
குழந்தைகள்: வானத்தையே வில்லா வளைச்சு தர்றேன். என் ஆட்டை விடு! ம.இ.குழந்தைகள்: நீ எது தந்தாலும்விட மாட்டோம் போ! - என்று மறுப்பார்கள்.
இருவரும் விட முடியாது என்றதும், கைகளுக்குள் சிக்கியிருக்கும் குழந்தை, திமிறிக்கொண்டு வெளியே வர முயற்சிக்க வேண்டும். சில குழந்தைகள் வெளியே வந்துவிடுவார்கள். வர முடியாமல் உள்ளேயே மாட்டிக்கொண்ட குழந்தை, மற்ற இருவரும் தரும் ‘செல்லமான தண்டனை’யை நிறைவேற்ற வேண்டும்.
அது என்ன தண்டனை என்று கேட்கிறீர்களா? வேறொன்றுமில்லை, அவர்கள் பாடச் சொல்கிற பாட்டைப் பாட வேண்டும். இல்லையென்றால், அவர்கள் பாடும் ஏதாவதொரு பாடலுக்கு, அந்தக் குழந்தை ஆட வேண்டும்.
என்ன குழந்தைகளே! இந்த விளையாட்டு பிடித்திருக்கிறதா? விளையாடுவோமா?
‘ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூத்துச்சாம்…!”
(இன்னும் விளையாடலாம்)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago