தாலாட்டு முதல் ஒப்பாரிவரை இசையால் நிறைந்தது நம் பண்பாடு. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைகளில் எல்லோரையும் எளிதில் சென்றடையக்கூடியது, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது இசை. அதற்குக் காரணம் பெரும்பாலோரால் பாடவும், பல்வேறு வகைகளில் இசையை உருவாக்கவும் முடிவதுதான். மனிதன் வெவ்வேறு வகைகளில் உழைக்க ஆரம்பித்ததன் மூலமே இசை பல்வேறு வகைகளில் கிடைத்தது.
கோயில்களில் மங்கல இசை நிகழ்ச்சிகளில் இசைக்கப்படுபவையாகவும், ஆடல் பாடல், நாட்டுப்புற நடனம், நாடகம் போன்றவற்றின் முக்கியப் பகுதியாகவும் இசைக்கருவிகள் ஒருசேரக் கலந்திருக்கின்றன. இசையை உருவாக்குவதிலும், பாடலை இனிமையாக்குவதிலும் இசைக்கருவிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.
இசைக்கருவிகளில் தந்தி அல்லது நரம்புக் கருவிகள், காற்றுக் கருவிகள், தோல் கருவிகள், உலோகக் கருவிகள் என நான்கு வகைகள் உள்ளன.
நரம்புக் கருவிகள்
நரம்புக் கருவிகள் அல்லது தந்திக் கருவிகள் எல்லாம் மெல்லிய கம்பிகளை மீட்டுவதால் ஏற்படும் அதிர்வுகளால் உருவாகும் இசையை அடிப்படையாகக் கொண்டவை. யாழ், வீணை, சிதார், தம்பூரா, வயலின், கித்தார் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை.
நரம்புக் கருவிகளில் புகழ்பெற்றது வீணை. பண்டைய யாழ் இசைக் கருவியின் நவீன வடிவமே வீணை எனப்படுகிறது. இதுவே நம் நாட்டின் பண்டைய நரம்பு இசைக்கருவியாகக் கருதப்படுகிறது. விரல்களாலும், சில நேரம் சிறிய மரத்துண்டைக் கொண்டும் வீணை மீட்டப்படுவது உண்டு. ருத்ர வீணை, விசித்திர வீணை எனப் பல வகைகள் இதில் உண்டு. சிதார் எனும் வீணையைப் போன்ற நரம்புக் கருவி, வட இந்தியாவில் புகழ்பெற்றது. சிதார் இசைக்காகப் புகழ்பெற்றவர் பண்டிட் ரவிசங்கர். உலக நாடுகளில் சிதார் இசை பிரபலமடைவதற்கு இவரே காரணம். மிஜ்ரப் என்ற மோதிரத்தைப் போன்ற மீட்டும் கருவியை அணிந்துகொண்டே சிதார் கருவியை இசைக்க முடியும்.
காற்றுக் கருவிகள்
ஒரு கருவிக்குள் காற்றை ஊதுவதன் மூலமோ அல்லது காற்றைச் செலுத்துவதன் மூலமோ இசையைப் பிறக்கச் செய்வதே காற்றிசைக் கருவிகள். நாகஸ்வரம், புல்லாங்குழல், கொம்பு, ஷெனாய், ஹார்மோனியம் போன்றவை இந்தப் பிரிவின் கீழ் வரும். ஓரிடத்தில் நாகஸ்வர ஓசை கேட்கிறது என்றால், அங்கே ஏதோ முக்கியமான நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று அர்த்தம். இப்போதும் நம்முடைய திருமணங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் நாகஸ்வரம் இன்றி நடப்பதில்லை. திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, நாகஸ்வர இசைக்குத் தனி அந்தஸ்தை ஏற்படுத்தித் தந்தவர்.
ஷெனாய் என்பது வடஇந்தியாவில் திருமணம் உள்ளிட்ட மங்கல நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படும் கருவி. புகழ்பெற்ற இசைக்கலைஞர் பிஸ்மில்லா கான் இந்தக் கருவிக்குப் புகழ் தேடித் தந்தார். மூங்கிலில் துளைகளை ஏற்படுத்தி இசைக்கப்படும் கருவி புல்லாங்குழல். மாலி, பண்டிட் ஹரிபிரசாத் சௌராஸியா ஆகியோர் புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைக்கலைஞர்கள். சிறிய பியானோவைப் போலிருக்கும் ஹார்மோனியத்தில் உள்ள கறுப்பு, வெள்ளைக் கட்டைகளை அழுத்தும்போது, காற்று உள்ளே தள்ளப்பட்டு, வெளியேறுவதன் மூலம் இசை பிறக்கிறது. நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், பாடல் நிகழ்ச்சிகளில் இக்கருவி முக்கிய இடம்பிடித்திருப்பதைப் பார்க்கலாம்.
தோல் கருவிகள்
பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல் இழுத்துக் கட்டப்பட்டு, அதன் மேல் அடிப்பதன் மூலம் இசையை உருவாக்கும் கருவிகள் தோலிசைக் கருவிகள். கைகளால் தட்டுவது, அடிப்பது, குச்சிகளால் அடிப்பதன் மூலம் இந்தக் கருவிகளில் இசை உருவாக்கப்படுகிறது. தவில், பறை, முரசு, தமுக்கு, மிருதங்கம், கஞ்சிரா, செண்டை மேளம், தபலா, டோலக் போன்றவை இந்த வகையின் கீழ் வரும். பண்டைக் காலம் முதல் பறையிசை நம் பண்பாட்டின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் முக்கிய இடம்பிடித்துள்ளது. தற்போது தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள், பொது நிகழ்ச்சிகளில் பறையிசையும் பறையாட்டமும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.
நாகஸ்வரத்துடன் இணைந்த தவில் இன்றி நம்முடைய மங்கல நிகழ்ச்சிகள் நடப்பதில்லை. தவில் இசைக் கருவியில் ஒரு புறம் குச்சியாலும், மற்றொருபுறம் விரலில் `தொப்பி’அணிந்தும் அடித்து இசையை எழுப்புவார்கள். தபலா என்பது டக்கா, கரணை என இரண்டு பாகங்களைக் கொண்டது. அடர்த்தியான ஒலியை (Bass) எழுப்பக் கூடியது டக்கா. இது செம்பு அல்லது பித்தளை அடிப்பாகத்துடன் தோலால் மூடப்பட்டிருக்கும். கரணையில் அடர்த்தி குறைந்த தாளக்கட்டுகளை (Sharp notes) வாசிக்கமுடியும். இது பலா மரத்தில் தயாரிக்கப்பட்டு, தோலால் மூடப்படுகிறது. தபலா இசைப்பதில் அல்லா ரக்காவும் அவரின் மகன் ஜாகிர் ஹுசைனும் புகழ்பெற்றவர்கள்.
மற்ற கருவிகள்
உலோகம், மரம் போன்ற திடப்பொருட்களாலும் இசைக்கருவிகள் உருவாக்கப்படுகின்றன. உலோகத்தால் உருவாக்கப்படும் கருவிகளுக்குக் கஞ்சக் கருவிகள் என மற்றொரு பெயரும் உண்டு. ஜால்ரா, கோலாட்டம் போன்றவை ஒரேவிதமான இரண்டு பொருட்களை மோதுவதால் இசையை உருவாக்குபவை. பல்வேறு அளவு கொண்ட மங்கு எனப்படும் சீனக் களிமண் பாத்திரங்களில் நீர் நிரப்பப்பட்டு, பாத்திரத்தின் விளிம்பில் குறிப்பிட்ட இடைவெளியில் குச்சியால் தட்டுவதன் மூலம் ஜலதரங்கத்தில் இசை உருவாகிறது.
இதில் நீர் ஏற்படுத்தும் சிற்றலைகள் இனிமையான இசையை உருவாக்குகின்றன. பானையின் மேற்புறத்தைத் தட்டுவதால் இசை எழுப்பும் கருவி கடம். அதேபோலக் குலுக்குவதன் மூலம் இசையை உருவாக்கும் கருவி கிலுகிலுப்பை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago