காய்ச்சல்னா கசக்குமா?

By வி.தேவதாசன்

ரஞ்சனிக்குக் கடந்த மூன்று நாட்களாகக் கடுமையான காய்ச்சல். படுக்கையிலேயே இருந்தாள். இப்போதுதான் காய்ச்சல் சற்றுக் குறைந்து, எழுந்து உட்கார்ந்தாள். என்றாலும் சாப்பிட எது கொடுத்தாலும், வேண்டாம் என்று அடம்பிடித்தாள்.

‘‘ரஞ்சனி, கொஞ்சம் கஞ்சி குடி. அப்போதான் உடம்பு சீக்கிரமா சரியாகும்” என்றார் நிலா டீச்சர்.

‘‘அம்மா! எனக்கு எதுவுமே வேணாம். எதைச் சாப்பிட்டாலும் கசக்குது. என்னால சாப்பிடவே முடியல. மீறி சாப்பிட்டா,

வாந்தி வர மாதிரி இருக்கு, ப்ளீஸ்மா…! எனக்கு எதையும் தராதீங்க” என்று கெஞ்சினாள் ரஞ்சனி.

“ரஞ்சனி! காய்ச்சல் கடுமையா அடிக்குது. அதனால இன்னும் ரெண்டு, மூணு நாளைக்கு நாக்கு அப்படித்தான் கசக்கும். அதுக்காகப் பட்டினியாவே இருக்க முடியுமா? கொஞ்சம் சாப்பிடு, அப்போதான் தெம்பா இருக்கும்!” என்றார் நிலா டீச்சர்.

`சரி’ என்று சொல்வது போலத் தலையை அசைத்தாள் ரஞ்சனி.

‘‘அம்மா…! அம்மா…!” என்று மெதுவாக அழைத்தான் கவின்.

“என்னடா?” என்று கேட்டார் நிலா டீச்சர்.

“எனக்கு ஒரு சந்தேகம்மா” என்றான் கவின்.

“என்ன சந்தேகம்?” என்றார் நிலா டீச்சர்.

“காய்ச்சல் வந்துட்டா எதைச் சாப்பிட்டாலும் ருசியாவே இல்லையே. அது ஏம்மா?” என்று கேட்டான் கவின்.

“எனக்குதானே காய்ச்சல் வந்தது. உனக்கு எப்போ சாப்பாடு ருசியில்லாம போச்சு?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் ரஞ்சனி.

“உனக்கு இப்பதான் காய்ச்சல் வந்துருக்கு. இதுக்கு முன்னாடி எனக்கு எத்தனத் தடவை வந்துருக்கு?” என்று திரும்பிக் கேட்டான் கவின்.

அவன் பேசியதைக் கேட்டு நிலா டீச்சரும் ரஞ்சனியும் சிரித்தனர்.

“காய்ச்சல் வந்தா சாப்பாடு ருசியில்லாம போறது ஏன்னு சொல்லுங்கம்மா?” என்று மீண்டும் தனது கேள்வியைக் கேட்டான் கவின்.

“சரி சொல்றேன்” என்று சொன்ன நிலா டீச்சர், காய்ச்சல் வந்தவர்களுக்கு உணவின் ருசி தெரியாமல் போவதற்கான காரணத்தை விளக்கத் தொடங்கினார்.

“நம்ம நாக்குல விரலை வச்சு தடவிப் பார்த்தால் சொரசொரப்பாக இருக்கிறதைத் தெரிஞ்சுக்க முடியும். சுவையை உணரக்கூடிய ஏராளமான சிறுசிறு மொட்டுகள் நம்ம நாக்குல இருக்கு. நாமச்

சாப்பிடற சாப்பாட்டில உள்ள ருசியை இந்தச் சுவை மொட்டுகள்தான் உணர்ந்துகொண்டு, உடனடியாக நரம்புகள் மூலமா நம்ம மூளைக்குத் தெரியப்படுத்தும். இனிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, கசப்பு, புளிப்பு என ஒவ்வொரு சுவையையும் உணர்ந்துகொள்ளத் தனித்தனி சுவை மொட்டுகள் நாக்குல இருக்கு. அவை மூலமாதான் ஒவ்வொரு சாப்பாட்டோட வித்தியாசமான ருசியையும் நம்மால உணர முடியுது.

நாக்குல உள்ள சுவை உணரும் மொட்டுகள்ல நிறைய என்சைம்ஸ் சுரக்கும். இந்த என்சைம்களின் உதவியாலதான் நாக்கில உள்ள மொட்டுகளால சுவையை உணர முடியுது. நம்ம உடம்பு ஆரோக்கியமா இருக்கும்போது 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை இருக்கும். இதுதான் சரியான வெப்பநிலை. காய்ச்சல் வந்துட்டா நம்ம உடம்போட வெப்ப அளவு அதிகமாயிடும்னு உங்களுக்குத் தெரியுமில்லையா? சில நேரங்கள்ல 105 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்குக்கூட உடலோட வெப்பம் கூடிடும்.

இப்படி உடம்போட வெப்பநிலை அதிகரிச்சா, நாக்கின் சுவை மொட்டுகளில் உள்ள என்சைம்ஸ் செயலிழந்து போகும். அவற்றால் வேலை செய்ய முடியாது. அதனால சுவை அறியும் மொட்டுகளால் சரியான சுவையை உணர முடியாமல் போயிடும். இதனாலதான் காய்ச்சல் அடிக்கும்போது எதைச் சாப்பிட்டாலும் கசக்குது. இல்லேன்னா, எந்தச் சுவையுமே இல்லாம சப்புனு இருக்கும்.

காய்ச்சல் குறைஞ்சு, உடம்போட வெப்பநிலை சரியான அளவுக்கு, அதாவது 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வந்துட்டா, அதன்பிறகு என்சைம்ஸ் மீண்டும் மெதுவாக செயல்படத் தொடங்கும். அதற்குப் பிறகுதான் நாம சாப்பிடற சாப்பாட்டுக்கும் சுவை கிடைக்கும். அதிகமாகக் காய்ச்சல் அடித்தவர்களுக்கு, காய்ச்சல் குறைஞ்ச பிறகும் சுவை அறியும் மொட்டுகள் இயல்பான நிலைக்கு வர ரெண்டு, மூணு நாளாகும்” என்றார் நிலா டீச்சர்.

“ரஞ்சனி கவலைப்படாம படுத்துக்கோ. நீ சாப்பிட வேண்டிய சாப்பாடெல்லாம் வீணாயிடும்னு கவலைப்பட வேண்டாம். அதையெல்லாம் நான் பார்த்துக்குறேன். உன் நாக்குல உள்ள சுவை அறியும் மொட்டுகள் உடனே இயல்பு நிலைக்குத் திரும்பணும்னு அவசியம் இல்ல. மெதுவா நாலஞ்சு நாள், ஏன் ஏழெட்டு நாள்கூட எடுத்துக்கட்டும். நீ ஓய்வெடுத்துக்க” என்றான் கவின்.

கவின் கூறியதைக் கேட்டு ரஞ்சனியும் நிலா டீச்சரும் மீண்டும் சிரித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்