சித்திரக்கதை: பிறந்த நாள் பரிசு

By முருகேஸ்வரி ரவி

ராஜாவுக்கு இன்னும் இரண்டு நாட்களில் பிறந்த நாள். ராஜா எப்போதும் தன் பிறந்த நாளுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பான். அம்மா, அப்பா, அக்கா என எல்லோரும் அவனுக்கு ஏதாவது ஒரு பரிசு தருவார்கள். ஆனாலும், அவனுக்கு அவனுடைய தாத்தா ஏகாம்பரம் தரும் பரிசுதான் பிடிக்கும்.

சிறு வயதிலிருந்தே தாத்தாவுடன் ரொம்ப நெருக்கம். தாத்தாவோடு சேர்ந்து நடைப்பயிற்சிக்குச் செல்வது முதல் இரவில் படுக்கப்போகும் வரை தாத்தாவையே சுற்றிக்கொண்டிருப்பான். இரவில் தனக்குத் தெரிந்த இதிகாசக் கதைகள் முதல் தற்போது படித்த நாகரிகக் கதைகள் என அனைத்தையும் அவனுக்குச் சொல்வார். ராஜாவும் தான் படித்த நவீன சமாச்சாரங்களைத் தாத்தாவுடன் பகிர்ந்துகொள்வான்.

அவனுடைய பத்தாவது பிறந்த நாளுக்கு நாய்க்குட்டி ஒன்றைப் பரிசளித்தார் தாத்தா. அவனுடைய பன்னிரெண்டாவது பிறந்த நாளுக்கு மரக்கன்று ஒன்றைப் பரிசளித்தார். அன்றிலிருந்து அவனுக்குத் தோட்டம் வைப்பதில் ஆர்வம் வந்துவிட்டது. இப்போது அவன் வீட்டில் நிறையப் பூச்செடிகள் பூத்துக் குலுங்கின்றன.

அவனது பிறந்த நாள் வந்தது. காலையில் தோசை சுட்டுக்கொண்டிருந்த அம்மாவை விடாமல் கேள்வி கேட்டான். “தாத்தா என்ன கிப்ட் தரப் போறார்மா? உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று ஆர்வமுடன் கேட்டான். “தெரியலையே, ஆனா இதுவரைக்கும் ஒண்ணும் வாங்கின மாதிரித் தெரியலை” என்றாள் அம்மா.

வீட்டுக்குள் எது வந்தாலும் அம்மாவுக்குத் தெரிந்துவிடும். அம்மாவே தெரியவில்லை என்றால், தாத்தா ஒண்ணும் வாங்கலையோ என்று நினைத்தான் ராஜா. தாத்தாவும் எதுவும் தெரியாததுபோல் வீட்டில் சுற்றிக்கொண்டிருந்தார். ராஜாவுக்கு இது பதிமூன்றாவது பிறந்த நாள். பதின்பருவம் தொடங்கும் வயது. தாத்தா பெரிய பரிசு தருவார் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம்தான் மிச்சம்.

மதியம் மணி பன்னிரெண்டடித்தது. “ராஜா, உனக்கு மதியம் வீட்டுல சாப்பாடு இல்லை. வேறு ஒரு இடத்துக்குப் போகலாம், வா” என்று கூப்பிட்டார் தாத்தா.

மதியம் மணி பன்னிரெண்டடித்தது. “ராஜா, உனக்கு மதியம் வீட்டுல சாப்பாடு இல்லை. வேறு ஒரு இடத்துக்குப் போகலாம், வா” என்று கூப்பிட்டார் தாத்தா.

“எங்கே தாத்தா?” என்று ஆசையாக ராஜா கேட்டான். “வா, காட்றேன்” என்ற அவர், “மருமகளே! நாங்க ரெண்டு பேரும் வெளியே சாப்பிடப்போறோம்” என்றார்.

“ஓ… லன் வாங்கித்தரப் போறாராக்கும்” என்று எண்ணியவாறே, அம்மாவிடம் “பை..” என்று சொல்லிவிட்டுத் தாத்தாவைப் பின்தொடர்ந்தான்.

கொஞ்சம் தூரம் நடந்துபோனார்கள். அங்கே ஒரு அனாதை ஆசிரமம் இருந்தது. அங்கு அனைவரும் வரிசையாகக் காத்திருந்தனர். அவன் உள்ளே நுழைந்ததும், “ ஹேப்பி பர்த் டே டு யூ...” என்று கோரஸாகப் பாடினார்கள். அங்கிருந்த ஆயா ஒருவர், “ தம்பி, நீதான் ராஜாவா? பிறந்த நாள் வாழ்த்துகள். என்னோடு வா” என்று உள்ளே கூட்டிசென்றார்.

ராஜாவுக்கு நெகிழ்ச்சியாகி விட்டது. திரும்பித் தாத்தாவைப் பார்த்தான். அவர் சிரித்தார். ஆயா உள்ளே அழைத்துச் சென்று, “தம்பி ராஜா, இன்று உன் பிறந்த நாளை முன்னிட்டு இந்தக் குழந்தைகள் வயிறாரச் சாப்பிடப் போகிறார்கள். உன் தாத்தா இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார். வா.. உன் கையால் அவர்களுக்கு இனிப்பு கொடு” என்றார்.

எல்லாக் குழந்தைகளும் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். ராஜா ஒவ்வொருவருக்கும் இனிப்பு கொடுத்தான். அவர்கள் அதை வாங்கிக்கொண்டு, “நன்றி அண்ணா” என்று கூறியபோது அவனுக்கு மகிழ்ச்சியில் கண்ணீர் வந்துவிட்டது. அவனும் அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டான். சில குழந்தைகள் அவனிடம் ஓடி வந்து பேசி முத்தம் கொடுத்தனர். அவன் பேரைச் சொல்லிச் சிரித்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் போயிருக்கும். “கிளம்பலாமா ராஜா?” என்று தாத்தா கேட்டார். அவனுக்குக் கிளம்ப மனமில்லை. என்றாலும், “ம்...ம்..” என்றான். ஆசிரமத்திலிருந்த எல்லோரும் அவனுக்கு டாட்டா காட்டி வழியனுப்பினார்கள். வரும் வழியில் மௌனமாய் வந்தான். வீடு வந்ததும், தாத்தாவைப் பார்த்து, “ரொம்ப நன்றி தாத்தா” என்றான். தாத்தா அவனை கட்டியனைத்து முத்தமிட்டார். தாத்தாவின் பிறந்த நாள் பரிசை நினைத்து அன்று முழுவதும் ராஜாவுக்கு மனம் நெகிழ்ச்சியாக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்