மன்னர் திம்மவாணன், அரண்மனையில் தீவிரச் சிந்தனையுடன் உலாத்திக்கொண்டிருந்தார். தலைமை மந்திரியும், தலைமை பண்டிதரும் அமைதியாக நின்றிருந்தனர்.
“நிலைமை இப்படிச் சிக்கலாகும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. மக்கள் தண்ணீருக்காக அங்குமிங்கும் அலைவதையும், பயிர்கள் தண்ணீரில்லாமல் கருகிப் போவதையும் பார்க்கும்போது ஒன்றும் சொல்வதற்கில்லை. இன்னும் மூன்று மாதங்களுக்கான உணவு தானியங்களே சேமிப்புக் கிடங்குகளில் இருப்பதாக உணவு அமைச்சர் கூறுகிறார்”.
“ஆம் அரசே! ஒரு வருடமாக மழை பெய்யவில்லை. ஏரி, குளம், கிணறு, ஆறுகளெல்லாம் வறண்டு விட்டன” என்றார் தலைமை மந்திரி.
“கிராமங்களை இணைக்கச் சாலைகள் அமைக்கும் போது வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாகப் புதிய மரக்கன்றுகளை நட்டிருந்தால் இவ்வளவு வறட்சி ஏற்பட்டிருக்காது. மழை பொய்த்திருக்காது!” என்றார் பண்டிதர்.
“உண்மைதான்! இப்போது அதை நினைத்து என்ன பயன்?” மன்னர் முகத்தில் கவலை சூழ்ந்தது.
“கவலை வேண்டாம் அரசே! நம் ஆய்வகத்தில் பெருமுயற்சிக்குப் பிறகு ‘சிறப்பு விதை’ ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறோம். அதை நம் எல்லைக்குள் உள்ள ஆயிரம் கிராமங்களில் பூமியில் விதைக்க உத்தரவிடுங்கள் அரசே!”
பண்டிதர் கூறியதைக் கேட்ட அரசருக்குக் கோபம் வந்தது. “பண்டிதரே… நான் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான நிலைக்கு என்ன தீர்வு என யோசித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இரண்டு வருடங்களுக்குப் பிறகு வளர்ந்து மரமாகி, மழை கொண்டு வரப் போகும் திட்டத்தைப் பற்றி சொல்கிறீர்கள்!” என்றார்.
“அரசே! என் மீது நம்பிக்கை வையுங்கள். விதைகளைக் குழி தோண்டி புதைக்க உத்தரவிடுங்கள். அப்புறம் நடப்பதைப் பாருங்கள்!” என்றார் பண்டிதர்.
மன்னர் திம்மவாணன் சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்தார். பண்டிதர் மேல் அவருக்கு நிறைய நம்பிக்கை உண்டு. எனவே, பண்டிதர் சொல்படி ஏற்பாடு செய்வதாக அரசர் சொன்னார்.
“மன்னா! ஆனால் ஒரு நிபந்தனை! விதையைப் பூமியில் புதைத்த பிறகு மழை நீரைச் சிறிதாவது ஊற்ற வேண்டும். அதுதான் அந்த விதைகளை நன்றாக முளைக்க வைக்கும்” என்றார் பண்டிதர்.
“இப்போது நாட்டில்தான் மழை பெய்யவில்லையே, மழை நீரை எப்படிக் கொண்டு வருவது?” என்றார்.
அப்போது மன்னர் மகன் வீரவாணனும், மந்திரி மகன் அஞ்சுகனும் அங்கே வந்தனர்! “தந்தையே, பண்டிதர் சொன்னபடி மழை நீரைச் சேகரித்து வருகிறோம்” என்றான் வீரவாணன்.
“நாங்கள் நாளையே புறப்படுகிறோம். இன்றே ஏரி குளம் ஆறுகளைத் தூர் வாரித் தயாராக வைத்திருக்க மக்களுக்கு உத்தரவிடுங்கள்!” என்றான் அஞ்சுகன். மன்னர் உடனே அதைச் செயல்படுத்த, அனைவரும் ஏரி குளம் ஆறுகளைத் தூர் வாரும்படி உத்தரவு பிறப்பித்தார்.
மறு நாள் வீரவாணனும் அஞ்சுகனும் அண்டாக்களைக் கயிற்றில் கட்டி கொண்டு குதிரைகளில் கிளம்பினர். வீரவாணனுடைய குதிரை, சிறப்புத் தன்மை வாய்ந்தது. பூமியிலும் ஓடும், வானிலும் பறக்கும்! இறக்கைகள் முளைத்த குதிரை அது!
வானத்தைப் பார்த்துக்கொண்டே, ‘வானம் மேகமில்லாமல் காட்சியளிக்கிறது. எப்படி நாம் மழை பெய்யும் பகுதியைக் கண்டுபிடிப்பது?’ என யோசித்துக்கொண்டே இருவரும் சென்றனர். திடீரென மூளைக்குள் மின்னல் வெட்ட, குதிரையை விட்டு இறங்கிய அஞ்சுகன், காய்ந்து கருகிப் போன புற்களுக்கிடையில் எதையோ தேடினான். வீரவாணனும் பின்தொடர்ந்தான்.
“அதோ இருக்கிறது!” எனச் சுட்டுவிரலால் காண்பித்த இடத்தில் பச்சைநிற மழை விட்டில் ஒன்று நின்றிருந்தது. “விட்டிலே…” என அஞ்சுகன் அழைத்ததும் திரும்பிப் பார்த்தது. அதன் முகம் சிறியதாக இருந்தாலும் வேற்றுக்கிரகவாசியின் முகத்தைப் போலிருந்தது.
விட்டிலிடம் “மழை எங்கே பெய்கிறது?” எனக் கேட்டான் அஞ்சுகன். தன் உடம்பை வடகிழக்கு நோக்கித் திருப்பி மழை பெய்யும் திசையைக் காட்டி ஏதோ ஒன்றைச் சொன்னது. அதைக் கேட்டதும் அஞ்சுகன், தன்னுடைய குதிரையை அங்கே இருந்த ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விட்டு வீரவாணனின் குதிரையின் பின்புறத்தில் ஏறி அமர்ந்தான். “இளவரசே… வட கிழக்கு நோக்கிக் குதிரையைப் பறக்க விடுங்கள்! நூறு மைல் தூரத்திலுள்ள அந்தப் பகுதியில்தான் மழை பெய்கிறதாம். அதுவும், இன்னும் முக்கால் மணி நேரத்துக்குத்தான் மழை பெய்யுமாம்!” என்றான்.
வீரவாணன் குதிரையைக் கிளப்பினான். அது தன் இறக்கைகளை விரித்து வானத்தில் பறக்க ஆரம்பித்தது. காடுகள், மலைகள் தாண்டி கால் மணி நேரத்தில் மழை பெய்யும் பகுதிக்கு வந்துவிட்டது. மூவரும் மழையில் நனைந்துவிட்டார்கள். பெருமழை பெய்து காடுகளிலும், மண் சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
“இளவரசே! நாம் இப்போது கண்ணபுரி நாட்டின் எல்லையில் இருக்கிறோம். அரண்மனைக்குச் சென்று அரசரைச் சந்தித்து மழை நீரைப் பிடிக்க அனுமதி கேட்கலாமா?” எனக் கேட்டான் அஞ்சுகன்.
“வேண்டாம்! கண்ணபுரி நமக்கு நட்பு நாடு. நேரம் குறைவாக இருப்பதால் கீழே இறங்குவோம்” எனக் கூறிய வீரவாணன் குதிரையைத் தாழ்வாகப் பறக்க விட்டான். வயல்களுக்கு நடுவில் தனியாக இருந்த ஓட்டு வீட்டின் முன் இறங்கினர். கதவைத் தட்டியதும் விவசாயி கதவைத் திறந்தார். அவரிடம் விவரத்தைக் கூறி மழை நீரைப் பிடித்துக் கொள்ள அனுமதி கேட்டார்.
“தாராளமாக. மழை நீர் உலகம் முழுவதற்கும் பொதுவானது. யார் வேண்டுமானாலும் பிடித்துப் பயன் படுத்திக் கொள்ளலாம்” என அனுமதி அளித்தார்.
முற்றத்தின் நான்கு மூலைகளில் ஓடுகளில் விழுந்த நீர் அருவி போல் கொட்டிக் கொண்டிருந்தது. இரண்டு மூலைகளில் இரண்டு அண்டாக்களை வைத்தனர். மழையின் வேகத்தால் பத்து நிமிடத்தில் அண்டா நிறைந்தது. விவசாயிக்கு நன்றி கூறி அண்டாக்களை மூடி போட்டு மூடி கயிற்றால் கட்டி குதிரையில் புறப்பட்டனர்.
அதற்குள் நாட்டு மக்கள் அனைவரும் ஒரே நாளில் ஏரி, குளம், ஆறு, கிணறுகள் முழுவதையும் சுத்தப்படுத்தி விட்டார்கள். மன்னர் தன் படை வீரர்களிடம் ஆயிரம் சிறப்பு விதைகளையும், மழை நீரையும் கொடுத்து ஆயிரம் கிராமங்களுக்கு அனுப்பினார். அவர்கள் குதிரையில் வேகமாகச் சென்று ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு அடி ஆழக் குழி தோண்டி விதையைப் புதைத்து மழைநீரை ஊற்றினர்.
அரண்மனைக்கு எதிரிலும் ஒரு விதை விதைக்கப்பட்டு மழை நீர் ஊற்றப்பட்டது. விதைத்த ஒரிரு மணி நேரத்தில் அது பூமியைப் பிளந்துகொண்டு மரமாக வளர ஆரம்பித்தது. மன்னருக்கும் சுற்றியிருந்தவர்களுக்கும் ஆச்சரியம். பண்டிதர் பெருமிதத்துடன் மரம் வளர்வதைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
இரவுக்குள் இரண்டு பனைமர உயரத்துக்கு அந்த மரம் வளர்ந்துவிட்டது. இரவு கழிந்து விடியும்போது மூன்று பனைமர உயரத்துக்கு வளர்ந்திருந்தது. அதன் உச்சியில் பனை மரத்தைப் போலவே பசுமை நிறக் கிளைகளும் இலைகளும் வளர்ந்திருந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் நடப்பட்ட விதைகள் அனைத்தும் இது போலவே வளர்ந்திருந்தன. உச்சியில் வளர்ந்திருந்த பசுமையான இலைகள் மழை மேகங்களை ஈர்த்தன. கருமேகக் கூட்டங்கள் ஒன்று கூடி இடிமின்னலுடன் மழை பொழிய ஆரம்பித்தது. அன்று முழுவதும் பெய்த மழை மறுநாள்தான் நின்றது. ஏரி, குளம், கிணறு, ஆறுகளெல்லாம் நிரம்பியது. கண்மாய்களில் நீரோட்டம் கண்கொள்ளா காட்சியாக இருந்தன.
பண்டிதரை அழைத்துப் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார் மன்னர்.
“மன்னா! அந்த மரங்கள் அனைத்தும் நாளையே பட்டு போய் உதிர ஆரம்பித்துவிடும். இது தற்காலிகமான ஏற்பாடுதான். சாலையோரங்களிலும் வீடுகளிலும் கோயில்களிலும் காடுகளிலும் மரக் கன்றுகளை நட்டு, அதை நல்ல முறையில் பேணி காப்பதே நிரந்தரமான தீர்வு! மீதமுள்ள விதைகளைப் பத்திரமாகப் பெட்டகத்தில் பூட்டி வையுங்கள். மீண்டும் தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்!” என்றார் பண்டிதர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago