பூரணியின் தந்திரம்

By மு.முருகேஷ்

பூரணி ஆறாம் வகுப்பு படித்து வந்தாள். படிப்பில் மட்டுமல்ல, விளையாட்டிலும் படுசுட்டி.தான் மட்டும் படித்தால் போதுமென இருக்க மாட்டாள். தன்னோடு படிக்கிற மற்ற பிள்ளைகளுக்கும் தான் படித்ததைச் சொல்லிக் கொடுப்பாள்.

மாலையில் தன் தெருவில் உள்ள எல்லாக் குழந்தைகளுடனும் பூரணி சேர்ந்து விளையாடுவாள்.

“பூரணியோட விளையாடுறீங்களா…சரி, சரி…” என்று பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை சந்தோஷமாக விட்டு விடுவார்கள்.

பூரணி படிக்கிற பள்ளிக்கூடம் அவள் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரத்தில் இருந்தது. பூரணி வீட்டிலிருந்து கிளம்பும்போது, “அம்மா போயிட்டு வர்றேன், அப்பா போயிட்டு வர்றேன், தாத்தா, பாட்டி போயிட்டு வர்றேன்…!”என்று வாசலிலிருந்து குரல் கொடுப்பாள். அது அந்தத் தெரு முழுக்கக் கேட்கும்.

பூரணி பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பிவிட்டால், தெருவில் உள்ள மற்ற குழந்தைகளும் அவளோடு சேர்ந்துகொள்வார்கள்.

குட்டிக் குழந்தைகளின் பெற்றோர்கள் பூரணியைப் பார்த்து, “பாப்பாவைப் பாத்துக் கூட்டிட்டுப் போ, பூரணி…” என்று சொல்வார்கள். பூரணியும் அந்தக் குழந்தைகளின் கைகளைப் பிடித்துக் கூட்டிப் போவாள்.

எல்லாக் குழந்தைகளும் ஒன்றாய் சேர்ந்து போவதைப் பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருக்கும். அப்படியே குட்டித் தேவதைகள் பூமிக்கு இறங்கி வந்ததைப் போலிருக்கும்.

குழந்தைகள் பள்ளிக்கூடம் போகிற வழியில் ஒரு பாழடைந்த மண்டபம் இருந்தது.

எல்லாப் பெற்றோர்களும் குழந்தைகளிடம் மறக்காமல் சொல்லி அனுப்புவது இதைத்தான்.

“நேரா ஸ்கூலுக்குப் போயிட்டு, போன மாதிரியே வரணும். அந்தப் பாழடைஞ்ச மண்டபத்துப் பக்கம் போயிரக் கூடாது…!”

குழந்தைகள் யாரும் அந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள்.நேராய்ப் போய் அப்படியே வந்து கொண்டிருந்தார்கள்.

அப்படி இருக்கையில் ஒருநாள் –

பள்ளிக்கூடம் விட்டு, எல்லாக் குழந்தைகளும் வந்து கொண்டிருந்தார்கள். பூரணியின் பின்னே நான்காம் வகுப்புப் படிக்கும் குட்டிப் பையன் நந்து ஆடியாடி வந்து கொண்டிருந்தான்.

அந்தப் பாழடைந்த மண்டபத்திலிருந்து மெலிதான முனகல் சத்தம் கேட்டது. யாரோ வலியால் துடிப்பது போலொரு சத்தம்.

பின்னால் வந்துகொண்டிருந்த நந்துவுக்கு மட்டும் இந்தச் சத்தம் கேட்டது. திடீரென அவனுக்குள் ஏதோ ஒரு துறுதுறுப்பு.

‘போய்தான் என்னான்னு பாப்போமே…!’

சட்டெனத் திரும்பி அந்தப் பாழடைந்த மண்டபத்தின் பக்கமாய்ச் சென்றான் நந்து. உள்ளே யாருமில்லை.

ஆனால், தீப்பெட்டி அளவுள்ள சிறிய பெட்டி ஒன்று மட்டும் அப்படியும் இப்படியாய் அசைந்து கொண்டிருந்தது. அந்த முனகல் சத்தம்கூட அதிலிருந்துதான் வந்தது.

வேகமாய் ஓடிப் போய் அந்தப் பெட்டியை எடுத்தான் நந்து. ‘என்னதான் உள்ளேயிருக்கு…?’ ஆர்வத்தோடு பெட்டியைத் திறந்தான்.

உள்ளேயிருந்து ‘குபுகுபு’வென பல வண்ணப் புகை வெளியே வந்தது. பிறகு ஒரு பூதமும் வந்தது. மாட்டைப் போல இரு கொம்புகளோடும், நீண்ட வாலோடும் பெரிய கூரான பற்களோடும் வெளியே வந்த பூதத்தை ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்தான் நந்து.

“நான்தான் அரண்மனை பூதம்.என்னை இந்தப் பெட்டியிலிருந்து விடுதலை செய்த குட்டிப் பையா, உனக்கு என் நன்றி. ஆனாலும், என்னை மன்னித்துக்கொள்; இந்தப் பெட்டிக்குள்ளிருந்து யார் என்னை விடுவித்தாலும், அவர்களை சாப்பிடுவதென நான் முடிவு செய்துவிட்டேன். இப்போது உன்னை சாப்பிட்டால்தான் என் பசி அடங்கும்…” என்றது பூதம்.

நந்துவுக்குப் பயம் வந்துவிட்டது. ‘யம்மா…!’என்று அழத் தொடங்கினான்.

அழுகைக் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்த பூரணி அதிர்ந்தாள். ‘நந்து எங்கே போனான்…?’ சுற்றும்முற்றும் பார்த்தாள்.

பாழடைந்த மண்டபத்திலிருந்து தான் அவனுடைய குரல் கேட்டது. மண்டபத்தை நோக்கி ஓடினாள்.

தனது ஒரு விரலால் நந்துவைத் தூக்கி விழுங்கப் போனது பூதம்.

“ஏ…பூதமே, உனக்கு என்ன வேண்டும், நந்துவைக் கீழே விடு…” என்று கத்தினாள் பூரணி.

பூரணியை ஏளனமாய்ப் பார்த்தது பூதம். தான் சிறிய பெட்டிக்குள் அடைப்பட்டுக் கிடந்ததையும், நந்து தன்னைத் திறந்துவிட்டதையும் சொல்லி, “இப்போது இவனை விழுங்கினால்தான் என் பசி அடங்கும்…” என்றது பூதம்.

பூதத்தின் நயவஞ்சகத்தைப் புரிந்துகொண்டாள் பூரணி. “அய்யோ…நந்துவை எப்படிக் காப்பாற்றுவது…?’ யோசித்த பூரணி, ‘கலகல’வெனப் பலமாய்ச் சிரித்தாள்.

“ஏ, குட்டிப்பெண்ணே…ஏன் சிரிக்கிறாய்…?”பூதம் கேட்டது.

“நீ சொல்கிற பொய்யைக் கேட்டு, சிரிக்காமல் வேறென்ன செய்ய…?” என்றாள் பூரணி.

“என்ன, நான் பொய் சொல்கிறேனா…?”என்று மறுபடியும் பூதம் கேட்டது.

“ஆமா, நீ பொய்தான் சொல்றே. நீ எவ்வளவு பெரிய பூதம். நீ போயி இந்த இத்தூனூண்டு பெட்டிக்குள்ளே இருந்தேன்னு சொல்றதை என்னால நம்ப முடியலே…!”என்று கேலியாய்ச் சிரித்தாள் பூரணி.

பூதத்திற்குப் பொல்லாத கோபம் வந்துவிட்டது.

“ஏ, குட்டிப் பெண்ணே. இந்தச் சிறிய பெட்டிக்குள்தான் நான் இத்தனைக் காலமாய் அடைபட்டுக் கிடந்தேன். எப்படின்னுதானே நம்ப மாட்டேங்கற…? இதோ, இப்படித்தான் இருந்தேன்…” என்று சொன்ன பூதம், அப்படியே தனது உடலைச் சுருக்கிக் கொண்டு, சிறிய பெட்டிக்குள் சென்றது.

இந்தச் சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பூரணி, சடக்கென அந்தச் சிறிய பெட்டியை மூடிவிட்டாள்.

பெட்டிக்குள் அடைப்பட்ட பூதம் முனகியது.

“நயவஞ்சக பூதமே, உன்னை விடுவித்த நந்துவையே கொல்லப் பார்த்தாயே. உனது நன்றி மறந்த செயலுக்கு, நீ பெட்டிக்குள்ளேயே கிடப்பதுதான் சரியான தண்டனை…!” என்று சொல்லிவிட்டு நந்துவைக் கூட்டிக்கொண்டு, வீடு நோக்கி நடந்தாள் புத்திசாலி பூரணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்