அன்று அதிகாலையிலேயே சுஸ்கித் எழுந்துவிட்டாள். அவளுக்கு மிக முக்கியமான நாள் அது. சந்தோஷத்தினால் ராத்திரி முழுவதும் அவளுக்கு சரியான உறக்கமில்லை. கட்டிலுக்கு அருகில் இருந்த ஜன்னல் வழியே அவள் மகிழ்ச்சியோடு வெளியே பார்த்தாள். ஆப்ரிகாட் மரங்கள் பூத்துக் குலுங்கின. அவள் அம்மா தேநீர் தயாரித்துக்கொண்டிருந்தாள்.
வெகுகாலமாகக் காத்திருந்த பொன்னாள் அது. சுஸ்கித் முதன்முதலாக ஸ்கூலுக்குப் போகிற நாள் அது. இந்த ஒரு நாளுக்காக அவள் ஒன்பது வருடங்கள் காத்திருந்தாள். சுஸ்கித்தின் வீட்டிலிருந்து ஸ்கூல் ஒன்றும் ரொம்ப தூரத்தில் இல்லை. ஆனால் ஸ்கூலுக்கும் அவள் வீட்டுக்கும் இடையே விழுந்து கொண்டிருக்கும் ஓடையைக் கடக்கச் சினார் மரத்தின் அருகிலுள்ள பாறையைப் பிடித்து ஏறித்தான் குழந்தைகள் அருவியைக் கடக்கிறார்கள். சுஸ்கித்தின் கிராமமான ஸ்கிட்போ யூலியில் உள்ள எல்லாக் குழந்தைகளும் இப்படித்தான் ஸ்கூலுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். ஆனால் கால்கள் சரியில்லாத சுஸ்கித்தினால் அது முடியாது. ஏனென்றால், அவளால் நடந்து போக முடியாது.
பிறந்தபோதே சுஸ்கித்தின் கால்கள் மற்றக் குழந்தைகளைப் போலச் சாதாரணமாக இல்லை. டாக்டர்களிடம் காண்பித்து, பல மருந்துகளும் சாப்பிட்ட பின்னரும் சுஸ்கித்தின் கால்கள் சரியாகவில்லை. அவளால் நடக்க முடியவில்லை.
தனக்கும் தன் தம்பிக்கும் என்ன வித்தியாசம் என்று சுஸ்கித்துக்கு முதலில் புரியவில்லை. ஆனால் மற்றவர்கள் எளிதாகச் செய்கிற சில வேலைகளை, தான் மட்டும் கஷ்டப்பட்டே செய்ய வேண்டிவரும் என்பது மெள்ளமெள்ள அவளுக்குப் புரிந்தது.
இதற்காகச் சுஸ்கித் வருத்தப்பட்டபோது, அவளுடைய அப்பாவோ, "மற்றக் குழந்தைகளைவிட உனக்கு நன்றாகத் தைக்கத் தெரியும். அழகாகப் படங்கள் வரையத் தெரியும்..." என்று சொன்னார். அத்துடன் அப்பா அவளுக்குக் கலர் பென்சில்களை வாங்கி வந்து கொடுப்பார்.
ஒரு நாள் சுஸ்கித்தின் அப்பா சக்கர நாற்காலியை வாங்கி வந்தபோது, வீட்டிலுள்ள அனைவரும் மிகுந்த உற்சாகமடைந்தனர். "இனி நான் ஆசைப்படுகிற இடத்தையெல்லாம் சுற்றிப் பார்ப்பேனே" என்று சுஸ்கித் உற்சாகமாகக் கூவினாள். மெள்ளமெள்ள சுஸ்கித்தே சக்கர நாற்காலியைப் பயன்படுத்த ஆரம்பித்தாள்.
வீட்டில் அவசியம் ஏற்படும்போது சுற்றித் திரியச் சக்கர நாற்காலியைச் சுஸ்கித் பயன்படுத்துவாள். அதை திருப்புவதற்குச் சக்தி இருந்தால்போதும். தினமும் அம்மா அடுப்பங்கரையில் சமையல் செய்யும்போது, சுஸ்கி அடுக்களை ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு வெளியே பார்த்துக்கொண்டே ஓவியம் வரைவாள். அங்கேயிருந்து பார்த்தால் புல் மேய்வதற்கு ஆடுமாடுகளை ஓட்டிச் செல்வதைப் பார்க்கலாம். அருவியில் இருந்து ஓடையில் விழுகிற நீல நிறத் தண்ணீரையும் பார்க்கலாம். வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்தால், முதலில் சுஸ்கித்துக்கே அது தெரியும்.
அவளுடைய அம்மா சக்கர நாற்காலியில் உட்காரவைத்துச் சுஸ்கித்தை வெளியே கூட்டிப் போவாள். சிரித்து, விளையாடிக்கொண்டு ஸ்கூல் விட்டுவரும் குழந்தைகளைச் சுஸ்கித் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள்.
ஒரு நாள் மாலை நேரத்தில் தாத்தாவுடன் சுஸ்கி வெளியே போயிருந்தபோது, ஒரு சிறுவன் தாத்தாவின் கையில் ஒரு டிரைவர் கொடுத்த கடிதத்தைக் கொடுத்தான்.
"என்னுடைய பெயர் அப்துல், இந்த ஸ்கூலில் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். நீ ஏன் ஸ்கூலுக்குப் போகவில்லை?" என்று சுஸ்கித்தைப் பார்த்துக் கேட்டான்.
"ஸ்கூலுக்குப் போகிற வழி குண்டும் குழியுமா இருக்குதில்லையா. அந்த வழியாக இந்தச் சக்கர நாற்காலி எப்படி வரும்? அப்புறம் ஓடையை நான் எப்படிக் கடப்பேன்?" என்று சுஸ்கித் பதில் சொன்னாள்.
"சரி, உனக்கு ஸ்கூலுக்குப் போக ஆசையாயிருக்கா"
"கண்டிப்பா. தம்பி ஸ்கூல் கதையெல்லாம் சொல்வதைக் கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும். நானும் படிக்க வேண்டும். சிரித்து விளையாட வேண்டும். குழந்தைகளோடு சேர்ந்து மத்தியானச் சாப்பாடு சாப்பிடுகிற மாதிரி எத்தனையோ தடவை நான் கனவு கண்டிருக்கிறேன்"
அவள் சொல்வதை இடைமறித்த தாத்தா, "போதும் கண்ணே. பகல்கனவு காண வேண்டாம். நீ வீட்டிலிருந்தே படித்துக்கொள்" என்று சொல்லி அவளுக்குப் புரிய வைக்க முயற்சித்தார்.
"ப்ளீஸ் தாத்தா" சுஸ்கித் கெஞ்சினாள். அவளுடைய கண்களில் கண்ணீர் பெருகியது.
"என் தம்பி முதன்முதலில் ஸ்கூலுக்குப் போய்விட்டு வந்து பெருக்கல் வாய்ப்பாடு சொன்னபோது, ஸ்கூலே பார்த்திராத எனது அப்பாவும் அம்மாவும் ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். நானும் படிக்க ஆசைப்படுகிறேன், அப்துல்" என்றாள்.
"சுஸ்கித், நான் உன்னைப் பார்க்கத் திரும்ப வருவேன்." என்று சொல்லிவிட்டு அவன் போனான். அடுத்த நாள் ஸ்கூல் அசெம்பிளி முடிந்த பிறகு, ஹெட்மாஸ்டரின் அறைக்கு அப்துல் சென்றான்.
"குட்மார்னிங் சார்! என் கிராமத்திலுள்ள ஒரு சிறுமி ஸ்கூலுக்கு வருவதில்லை. அவள் சுஸ்கித், ஸ்டோப்டனின் அக்கா"
"எனக்குத் தெரியுமே. நடக்க முடியாதவள் தானே"
"அவள் வீட்டுக்குள்ளேயும், சுற்றுமுற்றும் சக்கர நாற்காலியில் போய்விடுவாள். ஆனால் அவள் வரும் பாதை குண்டும்குழியுமாக இருப்பதால், ஸ்கூலுக்கு வர முடியவில்லை. சுஸ்கித்துக்கு நாம் உதவ முடியுமா சார்? நாம் எல்லோரும் சேர்ந்து முயற்சித்தால் வழியைச் சரி செய்து, ஓடையின் மீது சிறிய பாலமும் கட்டிவிடலாம்" என்றான்.
"சுஸ்கித்தைப் பற்றி உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை?" என்றார்.
"எல்லாக் குழந்தையும் ஸ்கூலுக்குப் போய்ப் படிக்க ஆசைப்படத்தானே செய்யும். சுஸ்கித்துக்கும் என்னைப் போலப் படிக்க உரிமை உண்டு, இல்லையா சார்"
"அப்துல் நீ சொன்னது ரொம்ப சரி. நான் ஆசிரியர்களோடு பேசிவிட்டு யோசிக்கிறேன்" என்றார். அடுத்த நாளே மீட்டிங் நடத்தி, ஹெட்மாஸ்டர் விஷயத்தைச் சொன்னார். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொன்னார்கள். "இது நடக்காத வேலை" என்றார் ஒரு ஆசிரியர். "நடக்க முடியாதக் குழந்தையை எப்படிப் பள்ளியில் சேர்க்க முடியும். அவள் எப்படி மற்றக் குழந்தைகளைப் போலப் படிக்க, எழுத முடியும், கழிப்பறைக்குப் போக முடியுமா?"
"இதற்கெல்லாம் நாம் தீர்வு காண வேண்டும்தான். ஆனால், மற்றதையெல்லாம் பிறகு பேசி முடிவு செய்து கொள்ளலாமே" என்றார் ஹெட்மாஸ்டர்.
இரண்டு வாரங்களுக்குப் பின், எல்லாக் குழந்தைகளும் கிரவுண்டில் கூடினர். அன்று ஸ்கூலுக்கு விடுமுறை. எல்லோரும் குழு குழுவாகப் பிரிந்து வேலை பார்த்தனர். சுஸ்கித்தின் வீட்டின் முன்னாலுள்ள வழி, ஆற்றங்கரை நடைபாதையை அவர்கள் சரி செய்தனர். ஆசிரியர்களின் உதவியுடன் அருவியின் மீது பாலத்தையும் கட்டினார்கள். சிலர் பாலம் கட்ட மரங்களை எடுத்துப் போனார்கள். நடைபாதையைச் சமப்படுத்தினார்கள். திட்டமிட்டபடி வேலை நடக்கிறதா என்பதை அருகில் சென்று பார்த்த ஹெட்மாஸ்டர், எல்லோரையும் உற்சாகப்படுத்தினார்.
சுஸ்கித்தின் அப்பாவும் அம்மாவும் எல்லோருக்கும் சூடான தேநீர், பிஸ்கட் கொடுத்தார்கள். இப்படி ஒரு நல்ல நாள் வரும் என்று சுஸ்கித்தின் தாத்தா கனவிலும் நினைத்ததில்லை. குழந்தைகள் களைத்துப் போனாலும் மனநிறைவோடு வீடு திரும்பினர். தாத்தாவின் கண்கள் தளும்பின.
சுஸ்கித் ஸ்கூலுக்குப் போகும் வழி, இதோ தாயாராகிவிட்டது.
சுஸ்கித் தன் வாழ்க்கையில் முதன்முதலாக ஸ்கூலுக்குப் போகிறாள். அவள் இன்று ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாள். அவளுடைய மனசில் எதிர்காலத்தின் வர்ணஜாலங்கள் விரியத் தொடங்கின.
நன்றி: பாரதி புத்தகாலயம் வெளியிட்ட புத்தகப் பூங்கொத்து
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago