உயிரினங்களில் பலவற்றுக்குப் ‘உருமறைப்பு’ (camouflage) என்ற தகவமைப்பை இயற்கை வழங்கியிருக்கிறது. சில உயிரினங்களுக்கு இடத்துக்கு ஏற்றாற் போல தோலின் நிறம் அமைந்திருக்கும். சில உயிரினங்களுக்கு இடத்துக்கு ஏற்றாற் போல நிறம் மாறும். சில உயிரினங்களின் உடலில் உள்ள கோடுகளும் புள்ளிகளும் எதிரிகளைக் குழப்பமடையச் செய்யும்.
அதாவது, எளிதில் எதிரியின் கண்களில் படாமல் தப்பிக்கவும், தன்னுடைய இரையை எளிதில் பிடிக்கவும் இந்தத் தகவமைப்பு உதவுகிறது. வித்தியாசமான தகவமைப்பை பெற்றுள்ள சில உயிரினங்களைப் பார்ப்போமா?
இலை வால் பல்லி
காய்ந்த இலைகளைப் போன்ற தோற்றமுடைய இலை வால் பல்லி (leaf tailed gecko) ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் காணப்படுகிறது. மரப்பட்டை, காய்ந்த இலைகளுடன் இருக்கும் இந்தப் பல்லியை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. 10 முதல் 30 செ.மீ. நீளம் வரையே இது இருக்கும். இலை வால் பல்லியில் எட்டு வகைகள் இருக்கின்றன.
ஒவ்வொன்றும் உருவம், நிறங்களில் சிறிய மாற்றங்களுடன் காட்சியளிக்கின்றன. பகல் நேரங்களில் மரப்பட்டை, கிளைகளில் ஓய்வெடுத்துவிட்டு, இரவு நேரங்களில் உணவு தேடிக் கிளம்பும். பூச்சிகள், கொறிக்கும் சிறு விலங்குகள் இவற்றின் உணவு.
இலைப் பூச்சி
இலைப் பூச்சியை (leaf insect) ‘நடக்கும் இலை’ என்றே அழைக்கிறார்கள். பெயருக்கு ஏற்றாற் போல இலையைப் போலவே இருக்கிறது இந்தப் பூச்சி. இப்பூச்சியால் பறக்க முடியாது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும். இலைகளைத் தின்று வளரும்போது பச்சை நிறத்துக்கு மாறிவிடும். 2.3
அங்குலமே இருக்கும் இந்த இலைப் பூச்சிகள் இலைகளுடன் சேர்ந்திருந்தால் சுலபத்தில் கண்டுபிடிக்கவே முடியாது. இந்தியா, ஃபிஜி தீவுகளில் இலைப் பூச்சிகள் வாழ்கின்றன. இவற்றின் நெருங்கிய உறவினர்தான் குச்சிப் பூச்சிகள்.
குச்சிப் பூச்சி
நடக்கும் குச்சி அல்லது குச்சிப் பூச்சிகள் (stick insect) நீண்ட உடலைப் பெற்றவை. அசையும்போதுதான் அது குச்சிப் பூச்சி என்றே அடையாளம் கண்டுகொள்ள முடியும். இப்பூச்சிக்கு நீண்ட ஆண்டெனாக்கள் உண்டு. ஒரு அங்குலத்தில் இருந்து ஒரு அடி வரை பல சைஸ்களில் குச்சிப் பூச்சிகள் உள்ளன. பூச்சிகளிலேயே மிகவும் நீளமானது இதுதான்! பார்ப்பதற்குச் சட்டெனத் தெரியாது. துர்நாற்றத்தை வெளியிட்டு, எதிரியிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும். ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கக் கண்டங்களில் இது காணப்படுகிறது. பச்சை, பழுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றன.
கும்பிடு பூச்சி
கும்பிடு பூச்சியின் (praying mantis) முன்னங்கால்கள் இரண்டும் சேர்ந்து கும்பிடுவதுபோல இருப்பதால் இந்தப் பெயர்! 180 டிகிரிக்கு இப்பூச்சித் தலையைத் திருப்பி, சுற்றுப்புறத்தைக் கவனிக்க முடியும். பச்சை, பழுப்பு வண்ணங்களில் காணப்படும் இந்தப் பூச்சியும் எளிதில் நம் கண்களுக்குத் தெரியாது. இதே நிறத்தில் உள்ள வெட்டுக்கிளி, விட்டில் பூச்சி, ஈக்கள்தான் இதன் உணவு. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியக் கண்டங்களில் இந்தப் பூச்சிகள் காணப்படுகின்றன.
மலர் பூச்சி
கும்பிடு பூச்சியின் உறவினர் இந்த ஆர்கிட் மலர் பூச்சி (orchid flower mantis). ஆர்கிட் மலர்களை அச்சு அசலாக ஒத்திருக்கும். வெள்ளை, இளஞ் சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும். கால்கள் ஆர்கிட் மலர்களின் இதழ்களைப் போல இருக்கும். இரையைக் கண்டதும் தாவரங்கள் மீது மெதுவாக ஏறி, பூக்களுக்கு அருகே வரும். இரையாகும் உயிரினம் இது பூவா, பூச்சியா என்று குழப்பம் அடையும். அப்போது இரையைப் பிடித்துச் சாப்பிட்டுவிடும். மலேசியா, இந்தோனேசியாவில் இப்பூச்சி காணப்படுகிறது.
கல் மீன்
உலகிலேயே அதிக விஷம் கொண்டது கல் மீன் (stone fish). கடலின் தரையில் வாழக்கூடியது. பவழத்திட்டுகள், பாறைகளுக்கு அருகில் வசிக்கும். தன்னுடைய துடுப்பால் மண்ணைக் கிளறும். அசையாமல் ஒரே இடத்தில் அப்படியே இருக்கும்.
மீன் என்று தெரியாமல் இரை வந்தால், மிக வேகமாகச் சென்று முள்ளை விரித்து, விஷத்தைச் செலுத்திவிடும். பின்னர் இறந்த இரையை உணவாக்கிக்கொள்ளும். மனிதர்கள் மீது விஷம் பட்டாலும் பிழைப்பது கஷ்டம். பசிபிக், இந்தியப் பெருங்கடல்களில் இம்மீன் காணப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago