இந்தக் கடல் சுருங்குதே!

By எஸ். சுஜாதா

கடல்களில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. ஆனால், சாக்கடலில் மட்டும் உயிரினங்கள் வாழ்வதில்லை. அதற்குக் காரணம் என்ன? சாக்கடல் நீரின் தன்மைதான்.

சாக்கடல் (Dead Sea) என்று சொன்னாலும் இது கடல் அல்ல. மிகப் பெரிய ஏரி. இஸ்ரேல், ஜோர்டான் நாடுகளின் எல்லையில், ஜோர்டான் பகுதியில் அமைந்திருக்கிறது. சுமார் 67 கி.மீ. நீளம், 15 கி.மீ. அகலம், 300 மீட்டர் ஆழம் கொண்டது சாக்கடல்.

நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்தை விட 1,388 அடி கீழே அமைந்திருக்கிறது. பூமியின் மேல் அடுக்கில் ஏற்படும் நகர்வுகளின் காரணமாகச் சாக்கடல் தொடர்ந்து கீழிறங்கிக்கொண்டே இருக்கிறது.

கடல் நீரில் உள்ளதைவிட சாக்கடல் நீரில் மிக அதிக அளவில் உப்பு இருக்கிறது. ஒரு லிட்டர் கடல் நீரைக் காய்ச்சினால் 35 கிராம் உப்பு கிடைக்கும். ஆனால், 1 லிட்டர் சாக்கடல் நீரைக் காய்ச்சினால் 340 கிராம் உப்பு கிடைக்கும். அப்படியென்றால் நீரின் தன்மையைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

கடல் நீரில் சோடியம் குளோரைட் உப்பு 97 சதவீதமும், இதர உப்புகள் 3 சதவீதமும் உள்ளன. ஆனால், சாக்கடலில் சோடியம் குளோரைட் 30 சதவீதமும், பொட்டாசியம் குளோரைட், மக்னீசியம் குளோரைட், இதர உப்புகள் 70 சதவீதமும் உள்ளன.

அதிக உப்புக்குக் காரணம்?

சாக்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளில் கனிம உப்புகள் அதிகம் உள்ளன. அவை சாக்கடலில் கலக்கும்போது உப்பின் தன்மை அதிகரித்துவிடுகிறது. சாக்கடல் நீர் வேகமாக ஆவியாகிறது. அதே நேரம் மிகக் குறைவாகவே மழை பெய்கிறது. இதனால், நீரில் உள்ள உப்பின் அடர்த்தி அதிகரித்துவருகிறது.

சாக்கடலில் கலக்கும் ஒரே நதி ஜோர்டான். இதன் பாதையில் இஸ்ரேல், சிரியா நாடுகள் அணைகளைக் கட்டி, பெரும் பகுதி தண்ணீரைப் பாசனத்துக்குத் திருப்பிவிட்டுக்கொண்டன. இதனால், சாக்கடலுக்குத் தண்ணீர் வருவது குறைந்துவிட்டது. சாக்கடலின் பரப்பளவும் சுருங்கிவருகிறது.

சாக்கடலில் உயிர்கள் உண்டா?

சாக்கடலில் மீன், ஆமை, நண்டு, நத்தை, கடல் தாவரங்கள் போன்ற எந்த உயிரினங்களும் இல்லை. உயிரினங்கள் வசிக்க முடியாத அளவுக்கு நீரில் உப்பு இருப்பதே இதற்குக் காரணம். அதனால்தான் சாக்கடல் என்று பெயர். ஆனால், மழை அதிகம் பெய்யும் காலங்களில் உப்புத் தன்மை சிறிது குறையும். அப்போது குறுகிய கால உயிரினங்கள் சில வாழ்வதுண்டு. சாக்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல பறவை இனங்களும் ஒட்டகம், நரி, முயல் போன்ற விலங்கினங்களும் வாழ்கின்றன.

மருத்துவக் குணம்

சாக்கடலைப் பார்க்க நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். சாக்கடல் நீரில் மிதக்கலாம் என்பது முதல் காரணம். இந்த நீர் பல்வேறு நோய்களைக் குணமாக்கும் என்பது இன்னொரு காரணம்.

சாதாரண நீரைவிட உப்பு நீரின் அடர்த்தி அதிகம். சாதாரண நீரில் போடும் முட்டை கீழே சென்றுவிடும். சிறிது உப்பைப் போட்டால், முட்டை மேலே மிதக்க ஆரம்பித்துவிடும். இதே தத்துவத்தில்தான் சாக்கடலும் மனிதர்களை மிதக்கவைக்கிறது! நீச்சல் தெரியாதவர்கள்கூடச் சாக்கடலில் மூழ்க முடியாது. மிதந்துகொண்டே புத்தகங்களைப் படிக்க முடியும்!

சாக்கடல் சேற்றை உடல் முழுவதும் பூசிக்கொண்டு, நீண்ட நேரம் படுத்திருந்தால் தோல் நோய்கள் குணமாவதாகச் சொல்லப்படுகிறது. தசை வலி, மூட்டு வலிகளைக் குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. கடல் மட்டத்தைவிடத் தாழ்வான பகுதி என்பதால் காற்றின் அடர்த்தியும் அதிகம். ஆக்ஸிஜனும் அதிகம். சுவாசம் தொடர்பான பிரச்சினைகளும் தீரும் என்கிறார்கள். சாக்கடல் உப்பு, சேற்றில் இருந்து மருந்துகளும் அழகு சாதனப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்