காரணம் ஆயிரம்: செத்துப் பிழைக்கும் தவளைகள்

By ஆதலையூர் சூரியகுமார்

உணவும், தண்ணீரும் இல்லாமல் உங்களால் எத்தனை நாட்கள் உயிர் வாழ முடியும் ? இது அவரவர் உடல்நிலையைப் பொறுத்தது என்றாலும் எப்படிப்பட்டவராக இருந்தாலும் பத்துப் பதினைந்து நாட்களுக்கு மேல் தாங்க முடியாது. மிகவும் கடுமையான போராட் டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வைராக்கியமாக மேலும் சில நாட்கள் கடத்துவார்கள். அதற்கும் கூட ஓர் எல்லை உண்டு. ஆனால், சில தவளைகள் பல மாதங்கள் உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல், ஜீவ சமாதி யாகி, திரும்பவும் சில மாதங்கள் கழித்து உயிர்த்தெழுகின்றன என்றால் நம்ப முடிகிறதா ?

தவளை இனங்களில் மரத்தவளை (Wood frog ) என்றொரு தவளை இனம் உள்ளது. வட அமெரிக்காவில் காணப்படும் இந்த வகை தவளைகள்தான் இறந்து போய் மீண்டும் உயிர் பிழைக்கும் அதிசயத் தன்மையைப் பெற்றிருக்கின்றன.

அப்பலாச்சியன் மலைத்தொடரின் தென் பகுதியில் தொடங்கி வடக்கு கரோலினா மாகாணத்தின் தாழ்நிலங்கள் வரை இந்த மரத்தவளைகள் காணப்படுகின்றன. கடந்த நூற்றாண்டில்தான் இந்த வகைத் தவளைகள் உயிரியல் அறிஞர்களின் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அளவுக்கு அதிகமான குளிரைத் தாங்கி மரணத்தை வெல்லும் இந்தத் தவளைகளின் ஆற்றல்தான் அது உயிரியல் அறிஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்குக் காரணம். சரி, மரத்தவளை மரணத்தை எப்படி வெல்கிறது?

மரத்தவளை 50 மில்லி மீட்டர் முதல் 70 மில்லி மீட்டர் வரை நீளம் உள்ளது. ஆண் தவளைகளைவிடப் பெண் தவளைகளே அதிக நீளம் உடையவை. பழுப்பு வண்ணத்தில், கருமையான கண்களுடன் மரத்தவளைகள் உள்ளன. பெரிய மரங்களிலும், கிளைகளிலும், மரப்பட்டை இடுக்குகளிலும், பெரிய பெரிய இலைகளுக்கு அடியிலும் இவை வாழ்வதால் இதனை மரத்தவளைகள் என்று சொல்கிறார்கள். இன்னொரு காரணமும் இருக்கிறது, அதன் பழுப்பு நிறம் மரத்தின் நிறத்தை ஒத்திருப்பதாலும் அதனை மரத்தவளை என்கிறார்கள்.

மரத்தவளைகள் காடு வாழ்பிராணி வகையைச் சேர்ந்தவை. தேங்கி நிற்கும் நீர் நிலைகளில் இவை குஞ்சு பொரிக்கின்றன. குளம், குட்டைகள் போன்ற பெரிய நீர் நிலைகள் மரத்தவளைகளுக்குத் தேவைப்படுவதில்லை. சாதாரணமாக உள்ள பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில்கூட இத்தவளைகள் குஞ்சு பொரித்துவிடும். சதுப்பு நிலங்கள், சிறிய நீர்க்குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் மரத்தவளைகள் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் இருக்கக்கூடிய சிறுசிறு பூச்சிகள்தான் மரத்தவளைகளின் உணவு. குட்டித் தவளைகள் பாசிகளை உணவாகக் கொள்கின்றன.

பெரிய மரத்தவளையானது கோடைக் காலத்தில் வெப்பத்தைத் தாக்குப் பிடிப்பதற் காக நல்ல ஈரப்பதமுள்ள இடத்துக்கு இடம் பெயர்ந்துவிடுகின்றன. காடுகளில் இருக்கக்கூடிய சேற்று நிலங்கள், நீர் தேங்கிய பள்ளங்கள் ஆகிய இடங்களைத் தேடிக் கோடையில் சென்றுவிடுகின்றன.

குளிர்காலங்கள்தான் மரத்தவளை களுக்கு மரண அவஸ்தையைத் தருகின்றன. கோடைக் காலத்தில் காடுகளின் குளு,குளு பகுதியில் வசித்துக் குதூகலிக்கும் தவளைகள், குளிர் காலத்தைக் கொடுமையாக உணர்கின்றன. குளிர் என்றால் சாதாரணக் குளிர் அல்ல. காற்றைக்கூட உறைய வைக்கும் குளிர். இந்தக் கொடூரக் குளிரில்தான் மரத்தவளைகள் மரணத்தை வெல்லும் சாகசம் செய்கின்றன’.

மரத்தவளைகள் தங்களுடைய ரத்தம் உறைவதையும், திசுக்கள் சுருங்குவதையும் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியைப் பெற்றிருக்கின்றன. பெரும் குளிரைத் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு அவற்றின் திசுக்கள் செயலாற்றுகின்றன. குளிர்காலம் தொடங்கும்போது, தவளையின் கல்லீரலில் இருக்கக்கூடிய கிளைக்கோஜன், அதிக அளவில் குளூக்கோஸாக மாற்றப்படுகிறது. இந்தக் குளூக்கோஸுடன் தவளையின் திசுக்களில் உள்ள யூரியாவும் சேர்ந்து கிரையோபுரொட்டக்டன்ஸ் (cryoprotectants) என்ற பொருளாக மாறிவிடுகிறது. இந்தக் கிரையோபுரொட்டக்டன்ஸ் என்ற பொருள்தான் குளிரால் சுருங்கிடாதவண்ணம் செல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

குளிர் காலத்தில் மரத்தவளையின் உடம்பில் உள்ள நீர் 65 சதவீதம் உறைந்து விடும். இதயத் துடிப்பும் நின்றுவிடும். (பனிப்படர்வுக்குக் கீழ் உறைந்து வாழும் தவளையின் இந்த வாழ்க்கை நிலையைக் குளிர்கால உறக்கம் என்று குறிப்பிடுகிறார்கள்.)

குளிர் காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்கும்போது, ‘எனக்கு என்ன ஆச்சு? நான் எங்கே இருக்கேன்’ என்று திருதிருவெனக் கண்விழித்து பார்க்கும் தவளை, தன் மேலே படிந்திருக் கும் பனித்துகள்களை உதறிவிட்டு சுவாசிக்கத் தொடங்கிவிடும். ‘கிரையோ புரொட்டக்டன்ஸ்’தான் தவளையை அழிவிலிருந்து காப்பாற்றக் காரணம்.

மாணவர்களே! நீண்ட உறை குளிரில் பனிக்கட்டிகளுக்கு அடியில் உயிர்வாழும் தவளையின் திசு அமைப்பை, மனித உடம்புக்கும் கொண்டுவரும் ஆராய்ச்சி யில் வெற்றி பெற்றுவிட்டால், பனிச்சரிவில் சிக்கி உயிரிழக்கும் ராணுவ வீரர்களைகூடக் காப்பாற்றி விடலாம் இல்லையா ?

(காரணங்களை அலசுவோம்)

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்