சித்திரக்கதை: மன்னர் மனதை மாற்றிய புதிர்!

By ஜி.சுந்தர்ராஜன்

மரகதவூர் எனும் நாட்டை வீரசேனன் எனும் மன்னர் ஆண்டு வந்தார். அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு மன்னரே கடன் கொடுப்பதும், அதை அவரே வசூல் செய்வதும் வழக்கமாக இருந்தது. அப்படிக் கடன் வாங்கியவர்களில் முத்தையனும் ஒருவர்.

முத்தையன் நீண்ட நாட்களாகக் கடன் பாக்கியைச் செலுத்தாமலிருந்தார். ஒரு நாள் மன்னரே தனது மந்திரியுடன் வசூலுக்காக வீட்டுக்கு வந்தார். முத்தையன் வீட்டின் வெளியே இருந்தபடி, “முத்தையா...முத்தையா…” என்று குரல் கொடுத்தார்.

வீட்டுக்கு உள்ளேயிருந்து 10 வயதுச் சிறுமி வெளியே வந்தாள். அவளுக்கு மன்னரைப் பார்த்ததும் மகிழ்ச்சி. “மன்னா... தாங்கள் எங்கள் வீடு தேடி வந்தது நாங்கள் செய்த புண்ணியம். தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றாள்.

“அதெல்லாம் இருக்கட்டும். முதலில் உன் தந்தையைக் கூப்பிடு” என்று மன்னர் அதிகாரத் தோரணையில் கட்டளையிட்டார்.

“மன்னா… தற்போது என் தந்தை வீட்டில் இல்லை. அவர் சூரியனின் கண்ணை மூடுவதற்காகச் சென்றிருக்கிறார்” என்றாள்.

“என்னது, சூரியனின் கண்ணை மூடவா?” மன்னருக்கும் மந்திரிக்கும் அவள் சொன்னது புரியவில்லை. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “சரிசரி… உன் அம்மாவைக் கூப்பிடு” என்றார்.

“அம்மாவா...? அம்மா தங்கத்திலிருந்து வெள்ளியைப் பிரித்து எடுக்க அடுப்பைப் பற்ற வைத்து, உலையேற்ற போய் இருக்கிறார்” எனப் பதில் சொன்னாள்.

ஒன்றும் புரியாமல் மன்னர் மந்திரியைத் திரும்பிப் பார்த்தார். மந்திரி தனக்கும் எதுவும் புரியவில்லை என்பதைப் போலத் தலையை ஆட்டினார்.

மன்னர் சற்றே கோபமானார். ‘கடனை வசூல் பண்ண வந்த இடத்தில் இவள் புதிர் போட்டுப் பேசி நம்மைக் குழப்புகிறாளே. இவளைச் சும்மா விடக் கூடாது, என நினைத்த மன்னர், சிறுமியிடம் மிரட்டும் தோரணையில் பேசினார்.

“நான் யாரெனத் தெரியாமல் என்னிடம் விளையாடுகிறாய்” என்றார் மன்னர்.

“மன்னா, தாங்கள் யாரென நாடே அறியும். தாங்கள் ‘ஹரிஹர வம்சம்” என்றாள் சிறுமி.

“மந்திரியாரே! இந்தச் சிறுமி என்னை மிகவும் குழப்புகிறாள். இப்போது வாரும், போகலாம்” என்று சொல்லி இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.

மறு நாள்

மன்னர் மந்திரியை வரவழைத்துக் கேட்டார். “மந்திரியாரே! அந்தச் சிறுமி நேற்று சொன்ன வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. அவள் சொன்ன புதிர்களுக்கு என்னால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களால் ஏதேனும் கண்டுபிடிக்க முடிந்ததா?” என்று கேட்டார்.

“ஆம் மன்னா! அந்தப் புதிருக்கான விடையைக் கண்டுபிடித்துவிட்டேன்”.

“பிரமாதம்! அதைச் சொல்லும் மந்திரியாரே”.

“முதல் புதிர். அவளது தந்தை கூரையைப் பழுது பார்க்கப் போய் இருக்கிறார் என்று சொன்னாள். அதாவது வீட்டில் கூரையைப் பழுது அடைந்துவிட்டால், சூரியனின் பார்வை வீட்டுக்குள் விழும். கூரையை மூடி விட்டால் பார்வை விழாது. அதைத்தான் அப்படிச் சொல்லி இருக்கிறாள்” என்றால் மந்திரி.

“சரி...இரண்டாவது?”.

அவளது அம்மா நெல்லை அவிழ்த்து அரிசியாக்குவதற்கு உலையேற்றும் பணிக்குச் சென்றிருக்கிறாள். அதைத்தான் தங்கத்திலிருந்து வெள்ளியைப் பிரித்தெடுக்கப் போனதாகச் சொன்னாள்.

“ நல்ல விளக்கம். மூன்றாவதாக என்னை 'ஹரிஹர வம்சம்' என்று சொன்னாளே. அது என்ன?” என்று கேட்டார் ராஜா.

“மன்னராகிய தாங்கள் நல்லது செய்பவர்களைக் காப்பதும் தீமை செய்பவர்களைத் தண்டிக்கவும் செய்வதால் காக்கவும் அழிக்கவும் செய்யும் கடவுளைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறாள்” என்று மந்திரி விளக்கம் அளித்தார். இதைக் கேட்டதும் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.

“மந்திரியாரே! அந்தச் சிறுமியை உடனே அரண்மனைக்கு அழைத்து வர உத்தரவு போடும்” என்று கட்டளையிட்டார். உடனே அந்தச் சிறுமியையும் அவரது தந்தையையும் அரண்மனைக்குக் காவலர்கள் அழைத்து வந்தனர். கடனுக்காக மன்னர் தண்டிப்பாரோ எனச் சிறுமியின் தந்தை பயப்பட்டார். ஆனால், சிறுமியைச் சபைக்கு அழைத்து அவளது திறமையைப் பாராட்டினார். ஏராளமான பரிசுகளையும் கொடுத்தார்.

பிறகு சிறுமியின் தந்தையிடம் திரும்பி, “முத்தையா! மிகவும் அறிவான குழந்தையைப் பெற்றிருக்கிறாய். அவளது புத்திக்கூர்மையைப் பாராட்டுகிறேன். நீ வாங்கிய கடனைத் திருப்பித் தர வேண்டாம். சந்தோஷம்தானே முத்தையா” என்று கேட்டார்.

மன்னருக்குப் பெரிய கும்பிடு போட்ட முத்தையன், தன் மகளை ஆரத் தழுவி முத்தமிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்