பழங்குடிகளைப் படித்த மாணவர்கள்!

By குள.சண்முகசுந்தரம்

கோடை விடுமுறையை நீங்கள் எப்படிக் கழித்துவருகிறீர்கள்? ஊருக்குச் சென்றிருப்பீர்கள், சுற்றுலா சென்றிருப்பீர்கள் அல்லது ஏதாவது கோடைக் கால முகாமுக்குப் போய்க்கொண்டிருப்பீர்கள். ஆனால், மதுரையைச் சேர்ந்த சில பள்ளி மாணவர்கள் கர்நாடகாவில் குடகு மலை பகுதியில் வாழும் பழங்குடியின மக்களோடு பழகிப் புதுமையான அனுபவத்தோடு ஊர் திரும்பியிருக்கிறார்கள். மாணவர்கள் குடகுக்குச் செல்ல மதுரையில் உள்ள ‘செசி’மற்றும் ‘சீடு’ தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்துகொடுத்தன.

குடகின் மிக உயரமான சிகரம் தடியன்மோல். இங்குள்ள யவஹபாடி கிராமம் இந்தக் கோடையிலும் குளிர்கிறது. குலுக்கிப் போட்ட சோழிகளைப் போல அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தெரிகிறது இங்கு வசிக்கும் மலைகுடியா பழங்குடிகளின் குடில்கள். இயற்கையோடு இயைந்து வாழும் இவர்களின் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்ளத்தான் 40 மாணவர்கள் ஏப்ரல் 29-ல் யவஹபாடி போய்ச் சேர்ந்தார்கள்.

வாழ்ந்து பாருங்கள்

“முகாம் நடக்கும் 3 நாட்களும் உங்களின் வழக்கமான நகர வாழ்க்கையை மறந்துவிட வேண்டும். இங்கிருக்கும் பழங்குடி மக்களின் உணவைச் சாப்பிட்டு, அவர்களின் குடிசைகளிலேயே தங்கி, அவர்களில் ஒருவராக வாழ்ந்து பாருங்கள். வித்தியாசமான அனுபவத்துடன் ஊருக்குத் திரும்புவீர்கள்” என முன்கூட்டியே இந்தப் பயணம் பற்றி முன்னுரை கொடுத்திருந்தார் முகாம் ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் தன்ராஜ்.

அவர் சொன்னபடியே மே 1-ம் தேதி முகாம் முடித்து ஊருக்குத் திரும்புகையில் மாணவர்களுக்குள் புது அனுபவம் குடியேறி இருந்தது. யவஹபாடியில் ஆழ்துளை கிணறுகள் இல்லை. மலையிலிருந்து இயற்கையாகத் தன்போக்கில் வழிந்தோடி வரும் நீரை ஆங்காங்கே தேக்கி வைத்துச் சிக்கனமாகப் பயன்படுத்துகிறார்கள். பயன்பாட்டின் போது சிதறும் தண்ணீரையும் குட்டை போல ஓரிடத்தில் தேக்கிவைத்து, அதில் மீன் வளர்க்கிறார்கள். வெளியிலிருந்து எந்த உணவு தானியத்தையும் கொண்டுபோகாமல், அந்த மலையில் என்ன விளையுமோ அதை மட்டுமே உண்டு வாழ்கிறார்கள். கடுகளவுகூட இவர்கள் இயற்கையைச் சீண்டுவதில்லை. அந்த ஊருக்குச் சென்று வந்த மாணவர்களில் ஒருவரான சூர்யா சொல்வதைக் கேளுங்கள்.

“அந்த ஊர் மக்களின் தலைவர் குடியார முத்தப்பா அவ்வளவாகப் படிப்பறிவு இல்லாதவர். ஆனாலும், தனது மகளைத் தோள்மீது தூக்கி கொண்டுபோய்ப் படிக்க வைத்திருக்கிறார். தான் பெற்ற கல்வியைத் தனது தந்தைக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் மகள். பழங்குடியினப் பிள்ளைகளிடமிருந்து நாங்கள் நிறைய படித்துக்கொண்டோம். எங்களுக்குத் தெரிந்த சிலவற்றை அவர்களுக்கும் சொல்லிக்கொடுத்தோம். நிஜமாகவே எங்களுக்கு இது புது அனுபவம்தான்” என்கிறார் சூர்யா.

“தற்போது வறட்சி நிலவுவதால் அதுபற்றி ஒரு நாடகத்தை அங்கே நடித்துக் காட்டினோம். ஆனால், இயற்கையோடு வாழும் அந்த மக்கள் வறட்சியைப் பற்றி பெரிதாக அறிந்திருக்கவில்லை. என்றாலும் நாங்கள் சொல்ல வந்த கருத்தை உள்வாங்கிக் கொண்டார்கள். பழங்குடிகளின் பாரம்பரிய நடனம், பாட்டு, கலைகள் பாரம்பரிய உணவு என நிறைய விஷயங்களை நாங்கள் உள்வாங்கிக்கொண்டோம். இதை எல்லாம் எங்கள் நண்பர்களுக்கும் அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கும் சொல்லித் தரப்போகிறோம்” என்று உற்சாகமாகச் சொன்னார் மாணவி சரண்யா.

அடுத்த பயணம்

மகிழ்ச்சியையும் துக்கத்தையும் சமமாகப் பாவிக்கும் மலைகுடியா பழங்குடி மக்கள், இரண்டுக்குமே துடி என்ற கருவியை இசைத்தபடி உருட்டுக்கொட்டு என்ற நடனத்தை ஆடுகிறார்கள். முகாமில் மதுரை பிள்ளைகளும் இந்த நடனத்தை ஆடினார்கள். பழங்குடி மக்களின் வாழ்க்கையைப் பாடம் படித்து விட்டு வந்த இந்த மாணவர்கள், அந்த மக்கள் இயற்கையை அவர்கள் எப்படிப் போற்றுகிறார்கள் என்பதை வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லி வியக்கிறார்கள்.

‘இருட்டு இருட்டாத்தான் இருக்கணும்; இருட்டையும் ரசிக்கப் பழகிக்கணும். ஆனால், விளக்குகளின் ஒளியில் இருட்டைத் தொலைத்துவிட்டதால், நகரங்கள் எப்போதும் பகலாகவே தெரிகின்றன. இதனால், இயற்கை எவ்வளவு சீரழிகிறது தெரியுமா?’’ பழங்குடியினத் தலைவர் குடியார முத்தப்பாவின் இந்த ஆதங்கம் முகாமில் கலந்துகொண்ட மாணவர்களுக்குள் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியிருப்பது அவர்களின் பேச்சில் உணரமுடிகிறது.



அடுத்ததாக இந்த மாணவர்கள் மதுரையை அடுத்துள்ள வேம்பரளி, சிந்துபட்டி, சீகுபட்டி, கொடுகம்பட்டி, கடவூர் மாயாகிராமம், சேந்தமங்கலம் ஆகிய கிராமங்களில் மே 17 தொடங்கி நான்கு நாட்கள் சிறப்பு முகாம்களை நடத்த உள்ளார்கள். நீர்நிலைகளைப் பாதுகாப்பது, இயற்கை விவசாயத்தைப் போதிப்பது, ஊரின் பழமையைப் போற்றுவது இவை இரண்டுதான் இந்த முகாமின் முக்கிய நோக்கம். இந்த முகாமில் பங்கேற்க வடமாநிலங்களைச் சேர்ந்த 60 இளைஞர்கள் வரவிருக்கிறார்கள். அவர்களோடு உள்ளூர் இளைஞர்களையும் ஒருங்கிணைத்து நீர்நிலைகளைத் தூர்வாரப் போகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்