உலகிலேயே மிகப் பெரிய நன்னீர் ஏரி எது?, உலகிலேயே மிக ஆழமான ஏரி எது?, உலகிலேயே மிகப் பழைய ஏரி எது?, உலகிலேயே அதிக அளவு நன்னீர் கொண்ட ஏரி எது? இவை எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான். அது, ரஷ்யாவில் உள்ள பைக்கால் ஏரி. நிலப்பரப்பில் உள்ள நன்னீரில் 20 சதவீதம் பைக்கால் ஏரியில் மட்டுமே இருக்கிறது! ரஷ்யாவின் நல்ல தண்ணீரில் 90 சதவீதம் இந்த ஏரியிலிருந்தே கிடைக்கிறது. ‘சைபீரியாவின் முத்து’ என்றும் ‘ஏரிகளின் அக்கா’ என்றும் இதை அழைக்கிறார்கள்.
பிறைபோல வளைந்திருக்கும் பைக்கால் ஏரியின் நீளம் 636 கி.மீ. அகலமோ 80 கி.மீ., ஆழமோ 1,620 மீட்டர். சுமார் 300 ஆறுகளிலிருந்து இந்த ஏரிக்குத் தண்ணீர் வந்து சேர்கிறது. ஏரியில் 22 தீவுகளும் இருக்கின்றன.
2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே பைக்கால் ஏரி உருவாகிவிட்டது. பழங்கால ஏரி என்பதால் இங்கே வசிக்கும் உயிரினங்களுக்கும் குறைவில்லை. 1,085 நீர்வாழ் செடிகள் இந்த ஏரியில் காணப்படுகின்றன. 1,550 நீர்வாழ் உயிரினங்கள் இங்கே வசிக்கின்றன. முட்டையிடாமல், குட்டி போடும் 5 வகை மீன்கள் இருக்கின்றன. இங்கேயே உருவான 27 வகை கோபி மீன்களும் காணப்படுகின்றன. ‘நெர்பா’ எனப்படும் நன்னீர் வாழ் சீல், பைக்கால் ஏரியில் மட்டுமே இருக்கிறது. 300 வகை பறவை இனங்கள் உள்ளன. பைக்காலில் வசிக்கும் பாதி உயிரினங்கள் இங்கே மட்டும் வாழ்கின்றன.
ஏரியைச் சுற்றி மலைகளும் காடுகளும் இருப்பதால், ஏரிக்கு அருகில் இருக்கும் நிலத்திலும் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. கரடிகள், மான்கள், பெரிய கடமான்கள், காட்டு மான்கள் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒவ்வோர் ஏரியும் மேல் பகுதி, நடுப்பகுதி, அடிப்பகுதி என்று மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும். பைக்கால் ஏரியின் அடிப்பகுதியில் வெப்ப நீரூற்றுகள் இருக்கின்றன. இவை ஏரியின் நீரில் ஆக்ஸினை பரவச் செய்கின்றன. அதனால் உயிரினங்கள் வாழ நல்ல சூழல் நிலவுகிறது.
சைபீரியாவின் தென்பகுதியில் இருக்கும் பைக்கால் ஏரிப் பகுதி, ஓராண்டில் 5 மாதங்கள் பனிக்கட்டியாகிவிடும். ஒவ்வொரு குளிர்காலத்திலும் இங்கே வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்கும் கீழே சென்றுவிடும். 1 மீட்டர் முதல் 2 மீட்டர் ஆழம்வரை உறைந்திருக்கும் இந்தப் பனிக்கட்டி மீது கார், லாரிகூடப் போக முடியும். பகல் நேரத்தில் பனிக்கட்டி சூடாகும். இரவில் திரும்பவும் உறைந்துவிடும். மோசமான வானிலை நிலவும்போது பனிக்கட்டி விரிசல் விடும். காற்று அதிகம் வீசும்போது பனிக்கட்டிகள் உடைந்து 10, 12 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கும். உடைந்த பனிக்கட்டிகள் மீது சூரிய வெளிச்சம் படும்போது மரகதக் கற்களைப்போல ஜொலிக்கும்!
ஏரியின் கரைகளில் மைக்கா, மார்பிள் போன்ற கனிமங்களும் அதிகம் கிடைக்கின்றன. அதனால் சுரங்கம், காகிதத் தொழிற்சாலை, கப்பல் கட்டுமானம், மீன் தொழிற்சாலைகள், மரத் தொழிற்சாலைகள் போன்றவை இயங்கி வருகின்றன. காகிதத் தொழிற்சாலையின் கழிவுகள் ஏரியில் கலந்து, மாசுபடுத்தியதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஏரியைக் காப்பதற்காக 1971-ம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. தற்போது மீண்டும் தொழிற்சாலைகளும் அணு ஆலைகளும் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
மிகப் பழங்காலத்துக்கு ஏரி என்பதால், உயிரினங்களின் ஆராய்ச்சிக்குரிய இடமாக இருந்து வருகிறது பைக்கால். பளிங்கு போன்று சுத்தமான நீரைக் கொண்டுள்ள இந்த ஏரியைப்போல ஓர் ஏரியை மனிதர்களால் உருவாக்கவே முடியாது. இயற்கை கொடுத்த இந்த அற்புதமான ஏரியைக் காப்பது ஒன்றே மனிதர்கள் அந்த ஏரிக்குச் செய்யும் பேருதவி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago