நான் இதுவரை குண்டாய் இருக்கிற யானைகளைத்தான் பார்த்திருக்கிறேன். நீங்களும் அப்படித்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஒல்லியாய் இருக்கிற யானையை யாராவது பார்த்திருக்கிறீர்களா? பார்த்ததில்லையா? நான் நேற்றுதான் அப்படியொரு யானையை எங்கள் தோட்டத்து மூலையில் பார்த்தேன்.
மெலிந்து ஒல்லியாகப் பார்ப்பதற்கு ஒரு குட்டி மானுக்குக் கொம்பு இல்லாமல், துதிக்கை முளைத்ததுபோல் ரொம்ப வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது. இது யானைதானா என்று முதலில் என்னால் நம்ப முடியவில்லை. பிறகு, அருகில் சென்று பார்த்தேன்.
அட…யானையேதான்!
“உன் பேரென்ன?”என்று கேட்டேன்.
அதற்கு உடனே, “மல்லி…”என்றது அந்த யானை.
“ஏன், இப்படி வித்தியாசமா இருக்கே?”என்று மறுபடியும் கேட்டேன்.
“அது என்னான்னே தெரியலே. நான் பிறந்ததிலிருந்தே இப்படித்தான் ஒல்லியாவே இருக்கேன்!” என்றது மல்லி. அதன்குரலில் லேசான வருத்தம் தெரிந்தது.
“இதிலே உனக்கென்ன வருத்தம்? பார்க்க நல்லாத்தானே இருக்கே!” என்றேன்.
“உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு. எனக்கு என்னைப் பிடிக்கலையே. யானைன்னா குண்டா பெரிசா இருக்கணும். அப்பத்தான் நம்மளைப் பார்த்து பயந்து ஓடுவாங்க. இப்பப் பாரு, நீகூட என்கிட்டே யானைங்கிற பயமேயில்லாம பேசிக்கிட்டு இருக்கே!” என்றது மல்லி.
என்ன சொல்வதென்று தெரியாமல், நான் குழம்பிப்போய் நின்றேன். என் வலது பக்கத்தில் ஒரு பெரிய உருவத்தின் நிழலொன்று அசைந்தது.
அப்படியே ஒரு கணம் ஆடிப்போய் விட்டேன்.
“பயப்படாதே! அதுவும் என்னோட நண்பன்தான்!” என்றது மல்லி.
லேசான தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அப்படியே திரும்பிப் பார்த்தேன். மலைபோல பெரிய குண்டான ஒட்டகம் ஒன்று நின்றுகொண்டிருந்தது.
“அய்யோ… எவ்வளவு பெரிய உருவம்..!” மலைத்துப் போய் நின்றேன்.
“அவன் பேரு கில்லி. அவனும் பிறந்ததிலிருந்தே இப்படித்தான் ரொம்ப குண்டாவே இருக்கான்!”
மல்லிதான் இதையும் சொன்னது.
“சரி, நீங்க ரெண்டு பேரும் ஏன் காட்டை விட்டு, இப்படி ஊருக்குள்ளே வந்திருக்கீங்க?” என்றேன்.
“இங்க பக்கத்தில கால்நடை மருத்துவர் ஒருத்தர் இருக்கிறதா கேள்விப்பட்டோம். அவரைப் பார்த்து உடம்பைக் குறைச்சுக்கிட்டுப் போகலாம்னு நானும், உடம்பைப் பெருசாக்கிட்டுப் போகலாம்னு மல்லியும் வந்திருக்கோம்!” என்று சொன்னது கில்லி.
எங்கள் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் அந்த மருத்துவர் இருக்கிறார். அவரின் வீட்டுக்குச் செல்லும் வழியைக் காட்டினேன்.
“ரொம்ப நன்றி!”என்றபடி மல்லியும், கில்லியும் என்னைக் கடந்து போயின.
இரண்டும் செல்வதை வியந்து பார்த்தபடி நின்றேன்.
வீட்டு வாசலிலேயே நின்றிருந்தார் கால்நடை மருத்துவர் காங்கேயன்.
மருத்துவரைப் பார்த்ததும் ஒல்லி மல்லி துதிக்கையை மேலே தூக்கி வணங்கியது. குண்டு கில்லி தலையை இப்படியும் அப்படியு மாய் ஆட்டியாட்டி ‘வணக்கம்’ போட்டது.
“உங்க ரெண்டு பேரைப் பத்தியும் நான் நிறையவே கேள்விப்பட்டிருக்கேன். இப்பத்தான் பார்க்கிறேன்!” என்றார் மருத்துவர் காங்கேயன்.
தங்களைப் பற்றி மருத்துவர் முன்பே அறிந்திருக்கிறார் என்று தெரிந்ததும் மல்லி, கில்லி முகத்தில் அளவில்லா சந்தோசம்.
“என்னை எப்படியாவது மற்ற யானைகள் மாதிரியே குண்டாக்கிடுங்க டாக்டர்” என்றது மல்லி.
“டாக்டர், என்னையும் உடம்பை இளைக்க வச்சு, மத்த ஒட்டகங்கள் மாதிரியே ஆக்கிடுங்க!”என்றது கில்லி.
“முதல்ல உங்க ரெண்டு பேரையும் நான் பரிசோதிச்சுப் பார்க்கணும், வாங்க!” என்றவர் பக்கத்திலிருந்த அரசு கால்நடை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார்.
மல்லி, கில்லி இரண்டையும் பரிசோதனை செய்தார்.
நேரம் கடந்தது.
மல்லி, கில்லி இரண்டும் பொறுமை இழந்தன.
“நான் குண்டாக ஏதாவது டானிக் இருந்தா உடனே கொடுங்க, அது போதும் டாக்டர்!” என்று உடம்பைக் குலுக்கியபடியே கேட்டது மல்லி.
உடனே கில்லி, “நான் ஒல்லியாக மாற, ஏதாவது மாத்திரை இருந்தா சீக்கிரமா கொடுங்களேன்!” என்று கெஞ்சியது.
மருத்துவர் அமைதியாகச் சொன்னார்;
“நீங்க ரெண்டு பேரும் கேக்கிற மாதிரி இது உடனே செய்யிற வேலையில்லை. எல்லாப் பரிசோதனைகளையும் முதல்ல செஞ்சு முடிக்கணும். ரெண்டு பேரும் ஏன் இப்படி இருக்கீங்கிறதுக்கான காரணத்தைக் கண்டுபுடிக்கணும். அதுக்குப் பிறகுதான், மாத்திரை, டானிக் எல்லாம்!” என்றார் காங்கேயன்.
“அய்யய்யோ, எங்களால அவ்வளவு நாளெல்லாம் இங்கே இருக்க முடியாது. எங்க அம்மா, அப்பா எங்களைத் தேடுவாங்க. நாங்க, இப்பவே காட்டுக்குப் போகணும். ஏதாவது மருந்து இருந்தா உடனே கொடுங்க டாக்டர்!” என்று இரண்டும் குழந்தைகள் போல் அடம் பிடித்து குதிக்கத் தொடங்கின. இரண்டும் குதித்ததில் தரையில் பெரிய பள்ளமே விழுந்துவிட்டது.
யோசித்தார் மருத்துவர் காங்கேயன். எது சொன்னாலும் புரிந்துகொள்ள மறுத்தால், என்னதான் செய்வது..?
உள்ளே சென்றவர், பெரிய ஊசி ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.
“என்னாயிது..?” என்று இரண்டும் மிரண்டபடி கேட்டன.
“ம்ம்… இதுதான் ஊசி..!” என்றார் மருத்துவர்.
ஊசி என்றதுமே மல்லிக்கும், கில்லிக்கும் தலை சுற்றியது.
காட்டில் மல்லியும், கில்லியும் அடம் பிடித்தால், இவர்களது அம்மா, “ஒழுங்கா சொல்றதைக் கேளுங்க. இல்லே ஊருக்குள்ள இருக்குற டாக்டர்கிட்டே கூட்டிப்போயி ஊசிப் போடச் சொல்லிடுவேன்!” என்று சொல்லித்தான் இருவரையும் மிரட்டி வைத்திருந்தார்கள்.
“இந்த ஊசியிலே மருந்தை ஏத்தி, உங்க இரண்டு பேருக்கும் இப்பப் போடப்போறேன்!” என்றபடி மருத்துவர் நெருங்கி வந்தார்.
“அய்யோ...எங்களுக்கு ஊசியே வேண்டாம். ஆளை விடுங்க..!” என்றபடி காட்டை நோக்கி மல்லியும் கில்லியும் ஓட்டம் பிடித்தன.
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago