அடடே அறிவியல்: விளக்கை இயக்கும் காற்று!

By அ.சுப்பையா பாண்டியன்

மண்ணெண்ணெயில் எரியும் சிமினி விளக்கைப் பார்த்திருக்கிறீர்களா? அது எப்படி வேலை செய்கிறது எனத் தெரிந்துகொள்ள ஆசையா? ஒரு சின்ன சோதனை செய்தால் தெரிந்துவிடப் போகிறது.

தேவையான பொருள்கள்:

அரை லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில், அகன்ற பிளாஸ்டிக் டப்பா, மணல், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி.

சோதனை:

1. வாய் அகன்ற பிளாஸ்டிக் டப்பாவில் மணலைக் கொட்டி நிரப்புங்கள்.

2. சிறிய மெழுகுவர்த்தியை மணலில் செங்குத்தாக நிறுத்துங்கள்.

3. மெழுகுவர்த்தியைத் தீக்குச்சியால் பற்றவையுங்கள்.

4. அரை லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து, அதன் அடிப்பகுதியை மூன்று அல்லது நான்கு இடங்களில் ‘V’ வடிவத்தில் வெட்டிக்கொள்ளுங்கள்.

5. எரியும் மெழுகுவர்த்தியின் மீது அடிப்பகுதி வெட்டப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலைச் செங்குத்தாக நிறுத்தி வையுங்கள். இப்போது என்ன நடக்கிறது எனப் பாருங்கள். மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிகிறதா?

6. இப்போது செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பகுதியில் துளைகள் மறையுமாறு நன்றாக மணலுக்குள் அழுத்திவிடுங்கள். இப்போது கவனியுங்கள்.

மெழுகுவர்த்தி அணைந்துவிட்டதா? சரி, இதற்கு என்ன காரணம்?

நடப்பது என்ன?

வெப்பம் ஒரு வகையான ஆற்றல் ஆகும். வெப்பம் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம், வெப்பக் கதிர்வீச்சு என மூன்று வழிகளில் பரவும். ஒரு பொருள் எரிவதற்கு ஆக்ஸிஜன், வெப்பம், எரிபொருள் ஆகிய மூன்றும் தேவை. இந்த மூன்றும் இருப்பதால் மணலில் நிறுத்தி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி எரிகிறது. வெட்டப்பட்டுத் துளைகள் உள்ள பிளாஸ்டிக் பாட்டிலை நிறுத்தியவுடன் மெழுகுவர்த்தி எப்படி தொடர்ந்து எரிகிறது? மெழுகுவர்த்தி எரியும்போது பாட்டிலுக்குள் சுடருக்கு மேலே உள்ள காற்று சூடாகி விரிவடைகிறது. இதனால் சுடருக்கு மேற்பகுதியில் காற்றின் அடர்த்தியும் அழுத்தமும் குறைகிறது.

சூடான காற்றுக்கு அடர்த்தி குறைவு. குளிர்ச்சியான காற்றுக்கு அடர்த்தி அதிகம். அழுத்தம் அதிகமான இடத்திலிருந்து அழுத்தம் குறைந்த இடத்துக்குக் காற்று செல்வது இயல்பு. பாட்டிலின் மேற்பகுதியில் ஏற்பட்ட குறைந்த அடர்த்தியையும் அழுத்தத்தையும் சமப்படுத்த குளிர்ச்சியான காற்று வெளியிலிருந்து பாட்டிலின் அடிப்பகுதியில் உள்ள துளைகள் வழியாக பாட்டிலுக்குள் மேல் நோக்கி செல்கிறது. இதனால், மெழுகுவர்த்தி எரிவதற்கு தேவையான ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்கிறது. மேலும் வெப்பசலனத்தினால் சூடான காற்று மேல் நோக்கிச் செல்வதாலும் குளிர்ச்சியான காற்று உள்ளே வருவதாலும் மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிகிறது.

ஆனால், டப்பாவில் உள்ள மணலில் பாட்டிலை நன்றாக அமுத்தி அடிப்பகுதியில் உள்ள துளைகள் மறையுமாறு வைத்தபோது மெழுகுவர்த்தி எப்படி அணைந்தது? மெழுகுவர்த்தி எரிவதால் உருவான சூடான காற்று மேலே செல்கிறது. மேலும் பாட்டிலுக்குள் இருந்த காற்றில் உள்ள ஆக்ஸிஜனும் தீர்ந்துவிடுகிறது. அடியிலுள்ள துளைகள் மூடப்பட்டதால் காற்று உள்ளே வருவதற்கு வழியும் இல்லை. மெழுகுவர்த்தி மேலும் எரிவதற்கு ஆக்சிஜன் கிடைக்காததால் அது அணைந்துவிடுகிறது.

சோதனையைத் தொடர்க

7. பிளாஸ்டிக் பாட்டிலுக்குப் பதிலாக உருளை வடிவக் கண்ணாடிக் குழாயில் ஒரு முனையில் துளைகள் இட்டு சோதனையை நீங்களே செய்து பாருங்கள்.

பயன்பாடு:

கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் சிமினி விளக்குகளை அதிகம் பயன்படுத்துவார்கள். சிமினி விளக்கில் உள்ள உலோகக் குடுவையில் எரிபொருளான மண்ணெண்ணெய் இருக்கும். உலோகக் குடுவையின் வாய்ப் பகுதியில் திரி பொருத்தப்பட்ட பூ வடிவ உலோக எரிபகுதி ஒன்று இருக்கும். அதன் அடிப்பாகத்தில் துளைகள் இடப்பட்டிருக்கும். அதிலுள்ள திருகு, திரியை மேலும் கீழும் நகர்த்துவதற்குப் பயன்படுகிறது. திரியின் மறுமுனை மண்ணெண்ணெயில் மூழ்கி இருக்கும். இருபுறமும் திறந்த கண்ணாடி பல்பு ஒன்று எரிபகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.

சோதனையில் பயன்படுத்திய மெழுகுவர்த்தியை சிம்னி விளக்கில் உள்ள எரிபொருள் குடுவையாகவும், பாட்டிலில் உள்ள துளைகளை சிம்னி விளக்கிலுள்ள எரிபகுதியின் அடிப்பாகத்தில் உள்ள துளைகளாகவும், மெழுகுவர்த்தியைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டிலை சிம்னி விளக்கின் மீது வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பல்பாகவும் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பகுதியில் உள்ள துளைகள் மணலுக்குள் மறையாமல் வெளியே தெரியுமாறு வைத்தபோது வெப்ப சலனத்தால் மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிந்தது அல்லவா? அதைப் போலவே மண்ணெண்ணெய் ஊற்றி ஏற்றி வைக்கப்பட்ட சிம்னி விளக்கில் எரிபகுதியின் அடிப்பாகத்தில் துளைகள் இருப்பதால் சிம்னி விளக்கு தொடர்ந்து எரிகிறது.

சிம்னி விளக்கில் வெப்ப சலனத்தால் தொடர்ந்து ஆக்ஸிஜன் கொண்ட குளிர்ச்சியான காற்று உள்ளே வருவதற்காகத்தான் துளைகள் இடப்பட்டுள்ளன. அத்துளைகளைப் பசை டேப்பால் மூடினால் விளக்கு அணைந்துவிடும். சிம்னி விளக்கு எப்படி வேலை செய்கிறது என இப்போது புரிகிறதா?


கட்டுரையாளர்: இயற்பியல் பேராசிரியர், அறிவியல் எழுத்தாளர்.
தொடர்புக்கு: aspandian59@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்