நம்மூரில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தீபாவளி, வட இந்தியாவில் விளக்குகளின் திருவிழாவாக உள்ளது. மகாவீரர் ஜெயந்தியே இப்படி விளக்கு ஏற்றிக் கொண்டாடப்படுகிறது. விளக்குகளை ஏற்றி ஒளிமயமாகக் கொண்டாடும் வேறு பண்டிகை-விழாக்கள் நம் நாட்டில் மட்டுமல்லாமல், ஆசியாவின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படுகின்றன. அவர்கள் எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள்?
விளக்குகளின் திருவிழா
சீனாவில் நிலவின் நகர்வை அடிப்படையாகக் கொண்ட காலண்டரே பின்பற்றப்படுகிறது. சீனக் காலண்டரின் முதல் மாதத்தில் (நமக்கு பிப்ரவரி மாதம்) கொண்டாடப்படும் ‘விளக்குகளின் விழா' சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிவதைக் குறிக்கின்றன.
ஷாங்யுவான் திருவிழா அல்லது யுவான்ஸியாவோ திருவிழா என்று இதற்குப் பெயர். பார்க்கும் இடமெல்லாம் சிவப்பு நிற விளக்குகளைத் தொங்கவிடுவதே இந்த விழாவின் முக்கிய அம்சம்.
வீடுகள், கட்டிடங்கள், அலுவலகங்களின் முன் பகுதிகள், நடைபாதைகள், பூங்காக்கள் என எங்கெங்கும் நுணுக்கமாக அலங்காரம் செய்யப்பட்ட விளக்குகள் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருக்கும்.
ஹான் அரச வம்சத்தின் காலத்தில் இருந்து (கி.மு. 206) இந்த விழா கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது. குடும்பங்கள் இடையே உறவைப் பலப்படுத்துவது, இயற்கையும் மக்களும் பழசைத் துறந்து புதிதாகத் தொடங்குவதன் அடையாளமாகவும், புதிய எதிர்காலத்தின் தொடக்கமாகவும் இந்த விழா கருதப்படுகிறது.
ஒளிரும் பல்லக்குகள்
அவோமோரி நெபூட்டா மட்சூரி என்ற விழாவில், ஜப்பானில் உள்ள அவோமோரி நகரம் முழுவதும் நெபூட்டா எனப்படும் வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு, உள்ளே விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் எடுத்து வரப்படும்.
இந்த ஓவியங்களில் பலவும் பழங்கால வீரர்களைப் பற்றியவை. இப்படி 20 பல்லக்குகள் வரும். ஹியாஷி என்ற பாரம்பரிய இசைக்கு பாரம்பரிய உடையை அணிந்துகொண்டு, அந்தப் பல்லக்குகளைச் சுமந்து வருபவர்கள் நடனம் ஆடுவார்கள். ஆகஸ்ட் 2-7-ம்
தேதிகளில் இந்த விழா நடத்தப்படுகிறது. பட்டாசு, வாணவேடிக்கையும் உண்டு. விழாவின் கடைசி நாளில் மூங்கிலில் வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி, விளக்குகள் கடலில் மிதக்கவிடப்படுகின்றன.
விவசாய வேலையில் நிலவும் சோர்வை விரட்ட விளக்குகளை மிதக்கவிடுவது வழக்கமாக இருந்ததாக, இந்த விழா பற்றிய புராணக் கதை ஒன்று கூறுகிறது. இந்த விழாவைக் காண நிறைய வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
ஆற்றில் அலங்காரக் கூடை
சீனாவைப் போலவே தாய்லாந்தில் பின்பற்றப்படும் நிலவு காலண்டரின்படி 12-வது பவுர்ணமி நாளில் லோய்க்ரதாங் விழா கொண்டாடப்படுகிறது (நமக்கு நவம்பர் மாதம்). லோய்க்ரதாங் என்பதற்கு மிதக்கும் கிரீடம் அல்லது மிதக்கும் அலங்காரக் கூடை என்று அர்த்தம்.
நுணுக்கமாக அலங்காரம் செய்யப்பட்ட கூடை ஒன்றில் மெழுகுவர்த்தி, ஊதுவத்திகள் வைத்து நதியில் மிதக்கவிடுவதே இந்த விழாவின் முக்கிய அம்சம். வாழை மட்டை அல்லது ஸ்பைடர் லில்லி எனப்படும் தாவரத்தின் மட்டையில் வைத்து மிதக்கவிடப்படுகிறது. இந்த மிதக்கும் கூடைகளுக்குக் க்ரதாங்க்ஸ் என்று பெயர்.
‘மாயி நாம்’ எனப்படும் நதிக் கடவுளை வணங்கும் வகையிலும், துன்பங்கள், துரதிருஷ்டங்கள் விலகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
பர்மிய கார்த்திகை
டஸாவுங்டைன் அல்லது விளக்குப் பண்டிகை என்றழைக்கப்படும் இந்த விழா மியான்மரில் (பழைய பர்மா) கொண்டாடப்படுகிறது. பர்மிய காலண்டரின் எட்டாவது மாதமான டஸாவுங்மான் மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மழைக்காலத்தின் நிறைவை, பர்மாவில் கதினா பருவக் காலத்தின் நிறைவை இந்தப் பண்டிகை குறிக்கிறது. மியான்மரில் புத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகே இந்தப் பண்டிகை கொண்டாடப்பட ஆரம்பித்தது.
நம்ம ஊரில் கார்த்திகை மாதம் கொண்டாடப்படும் திருக்கார்த்திகையைப் போன்றதே இந்தப் பண்டிகையும். இதையொட்டிப் புத்த பிட்சுகளுக்குப் புதிய செவ்வாடையும், அதை முடிந்துகொள்வதற்கான கயிற்றையும் மக்கள் வழங்குவது வழக்கம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago