பசுமைப் பள்ளி – 7: நாட்டுமிராண்டிகள்

By நக்கீரன்

பின்பனிக் காலம் அது மாந்தோப்பின் குளுமையான நிழல். மரத்தில் பழுத்திருந்த மாங்கனிகளைப் பறித்துச் சுவைத்தார்கள் பசுமைப் பள்ளியின் குழந்தைகள். மகிழினி தின்று கொண்டிருந்த மாம்பழத்திலிருந்து ஒரு வண்டு வெளியே வந்தது. “அய்யோ…” என்று அந்தப் பழத்தைத் தூக்கி வீசினாள்.

பிறகுதான் அவளுக்கு ஒரு யோசனை. வண்டும் ஓர் உயிரினம்தானே? அதை வெறுக்கலாமா? கூடவே இன்னொரு கேள்வி. வெளி உலகம் தெரியாமல் பழத்துக்குள் வசிக்கும் இந்த வண்டுக்கு, மற்ற வண்டுகளுக்குரிய அறிவு இருக்குமா?

அவளுடைய சந்தேகத்தை அறிந்துக்கொண்ட மாம்பழத்து வண்டு மகிழினியிடம் பேசியது. “ஏன் பாப்பா, நகரத்தில் வாழாமல் காட்டுக்குள் வாழும் பழங்குடிகளுக்கு அறிவு உண்டா இல்லையா?”

“எங்களைப்போல அவர்களுக்கு அறிவு இல்லை. அதனால்தானே அவர்களைக் காட்டுமிராண்டி என்கிறோம்?”

“ஓ… அப்படியா? சரி, யார் காட்டுமிராண்டி எனத் தெரிந்துக்கொள்ள ஒரு கதை சொல்லட்டுமா?”.

கதை என்றதும் சுற்றி அமர்ந்தார்கள் குழந்தைகள்.

“2004-ல் ஆழிப்பேரலையில் இரண்டு லட்சம் பேருக்கு மேல் செத்துபோனது தெரியுமல்லவா?”

“தெரியுமே. சுனாமி என்பார்களே அதுதானே?”

“அதேதான். அது தமிழ்நாட்டைத் தாக்கியது போலவே அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் தாக்கியது. அங்கிருந்த உங்களைப் போன்ற நாகரிக மனிதர்கள் நிறைய பேர் அந்தப் பேரலையில் செத்துபோனார்கள். ஆனால், ஜரவா எனும் பழங்குடி மக்களில் ஒருவர்கூட ஆழிப்பேரலையால் சாகவில்லை. ஆடைகள்கூட அணியாத அவர்களைத்தான் நீங்கள் காட்டுமிராண்டிகள் என்று சொல்கிறீர்கள்”.

குழந்தைகள் திகைப்பு அடங்காமல் கேட்டனர். “எப்படி?”

“அது ஒரு சுவையான நிகழ்வு. மற்றத் தீவுகளில் இறந்த உடல்களை அப்புறப்படுத்திய சில நாட்களுக்குப் பின்னரே மீட்புப் படையினர் ஜரவா பழங்குடிகள் வசிக்கும் தீவுக்குப் போனார்கள். அறிவியல் வசதிக்கொண்ட நாகரிக மனிதர்களே செத்துவிட்டார்கள். பாவம் இப்பழங்குடிகள்! அவர்களுடைய இறந்த சடலங்களை அப்புறப்படுத்துவோம் என்றுதான் மீட்பு படையினர் அங்குப் போனார்கள். ஆனால், அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது”.

“அதிர்ச்சியா…? என்ன அதிர்ச்சி?”

“அந்த ஜரவா மக்களில் ஒருவர்கூடச் சாகவில்லை. எல்லோருமே உயிரோடு இருந்தார்கள்”.

“உண்மையாகவா?” வியந்தனர் குழந்தைகள்.

“ஆமாம், ஏனென்றால் இப்பழங்குடிகள் உங்களைப்போல முழுக்கவும் அறிவியல் கருவிகளை நம்பி வாழ்பவர்கள் இல்லை. இவர்கள் இயற்கை அறிவியலை நம்பியதால் தப்பிப் பிழைத்தார்கள்”.

“எப்படிப் பிழைத்தார்கள்?” என்றாள் மகிழினி.

“அது அவர்கள் தம் முன்னோர்களிடமிருந்து பெற்ற அறிவு. முற்காலத்தில் மக்கள் இயற்கையைக் கூர்ந்து கவனித்தார்கள். இதனால் நிலநடுக்கம் போன்ற சில இயற்கை நிகழ்வுகளை, அவர்களால் முன்கூட்டியே கணிக்க முடிந்தது. அப்படிதான் இப்பழங்குடிகளும் மற்ற உயிரினங்கள் கொடுத்த சமிக்ஞைகள் மூலம் கடலிலிருந்து ஆபத்து வரப்போவதை உணர்ந்தார்களாம். உடனே உயரமான குன்றுக்கு ஓடித் தப்பித்தார்களாம்”.

இதைச் சொல்லியதும் வண்டு கேட்டது.

“ஆழிப்பேரலை வருவதைப் பற்றி உங்கள் அறிவியல் ஓர் எச்சரிக்கைக் கொடுத்திருந்தால் பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால், பழங்குடிகளோ இயற்கையின் மூலம் இதை முன்கூட்டியே அறிந்தார்கள். இவர்களா காட்டுமிராண்டிகள்?”

“இல்லை, பழங்குடிகளின் அறிவை இழிவாக நினைக்கும் நாம்தானே நாட்டுமிராண்டிகள்”.

(அடுத்த புதன்கிழமை: இயற்கையே அறிவு)

கட்டுரையாளர், குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்