காரணம் ஆயிரம்: பாலைவனத்தில் ஓர் எலி

By ஆதலையூர் சூரியகுமார்

யாராவது பாலைவனத்துக்குப் பக்கத்தில் வீடு கட்டி குடியிருக்க விரும்புவார்களா? தண்ணீர் பிரச்சினை வந்தாலே வீட்டை காலி செய்துவிடுவோம். பாலைவனத்துக்குப் பக்கத்தில் இலவசமாக மனை தருகிறோம் என்றால்கூட நாம் தெறித்து ஓடிவிடுவோம் இல்லையா?

பாலைவனத்துக்குப் பக்கத்தில் குடியிருக்கவே நாம் பயப்படுகிறோம். ஆனால், ஓர் எலி பாலைவனத்திலேயே குடியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அந்த எலி பாலைவனத்திலேயே குடியிருக்கிறது, மிகவும் வசதியாகவே வாழ்கிறது. தண்ணீர் பிரச்சினையை எப்படி சமாளிக்கிறது? அது தண்ணீரே குடிப்பதில்லை. தண்ணீரைத் தானே உற்பத்தி செய்துகொள்கிறது. ஆம்! அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் காணப்படும் ‘கங்காரு எலி’களைப் (Kangaroo Rats) பற்றிய அறிமுகம்தான் இது.

பழுப்பு வண்ணத்தில் 15 செ.மீ. நீளம் வரை காணப்படும் பெரிய எலிகள் இவை. உருண்டு திரண்ட பெரிய தலைகளுடன் காணப்படும் இந்த எலிகள், ஆபத்தான இனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

வீட்டு எலிகளைப் போல இந்த ‘கங்காரு எலி’களும் வளைகளில்தான் வசிக்கின்றன. ஆனால், வீட்டு எலிகளிலிருந்து நிறைய மாறுபட்டவை. வளை அமைப்பே வித்தியாசமாக இருக்கும். ‘எலி வளையானாலும், தனி வளை வேண்டும்’ என்பார்கள். இந்த எலிகள் பெரும்பாலும் கூட்டமாகவே வசிக்கின்றன.

பாலைவண மணல்தான் இவை விரும்பி வசிக்கும் இடம். அதாவது உதிரி மணலில்தான் இவை உருண்டு விளையாடும். இப்படி மணலில் விளையாடுவதன் மூலமே தன் உடலை எலி சுத்தப்படுத்திக்கொள்கிறது. இதனை ‘கங்காரு எலிகளின் மணல் குளியல்’என்று சூழலியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி உதிரி மணலில் உருண்டு விளையாடும் கங்காரு எலிகள் சற்று கீழே போய் ஆழமான வளைகளை அமைத்துக்கொள்கின்றன. இந்த வளைகள்தாம் இவை வசிக்கும் வீடுகள்.

இந்த வளைகள் மிகவும் சிக்கலானவை. இந்த வளைகளில் எலிகள் படுப்பதற்கு, வசிப்பதற்கு, உணவு சேகரிப்பதற்கு என்று தனித்தனியாக அறைகள் இருக்கும். உணவு சேகரித்து வைத்திருக்கும் அறைகளில் இவை தூங்காது. அதே போல் படுக்கை அறையில் வசிப்பதில்லை.

இந்த கங்காரு எலிக் கூட்டத்துக்கும் மனித இனக் கூட்டத்துக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயக் கூட்டமைப்பை உடையவை இந்த கங்காரு எலிகள். பெண் எலிகளை எப்போதும் தன்னுடைய அதிகாரக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே ஆண் எலிகள் வைத்திருக்கும். பெண் எலிகள் (மனிதர்கள் மாதிரியே) நிறைய பொறுமையானவை. சகிப்புத் தன்மை வாய்ந்தவை. ஆண்களின் அராஜகங்களைப் பொறுத்துக்கொள்பவை.

ஏனெனில், வசிப்பதற்கான வளைகளைப் பெரும்பாலும் ஆண் எலிகளே அமைக்கின்றன. ஆண் எலிகள் அமைக்கும் வீடுகளை நம்பி வாழ வேண்டியிருப்பதால், பெண் எலிகள் பெரும்பாலும் ஆண் இனத்தைச் சார்ந்தே வாழ்ந்துவிடுகின்றன.

அணில் மாதிரி கொரிக்கும் விலங்கு வகையைச் சேர்ந்தவை இந்த கங்காரு எலிகள். பழ விதைகள் தான் முக்கியமான உணவு என்றாலும் எங்காவது எப்போதாவது கிடைக்கும் இலைகளையும், பூச்சிகளையும்கூட உண்ணுகின்றன. வருங்காலத்துக்கு உணவு சேகரிப்பதில் இந்தக் கங்காரு எலிகள் மிகவும் கெட்டி. போதுமான அளவுக்கு விதைகளைக் கொண்டுவந்து முன்னெச்சரிக்கையாகச் சேமித்து வைத்துக்கொள்ளும். பல எலிகள் சேர்ந்து வாழும் வளைகள் என்றால் பெரிய தானியக் களஞ்சியமே வளைக்குள் இருக்கும்.

தங்கள் பெரும்பகுதி நேரத்தை வளைக்கு உள்ளேயே செலவிடும். உணவு தேடுவதற்காகப் பலமுறை வளையை விட்டு வெளியே வரும். ஆனால், அதிகப்பட்சம் 15 நிமிடம்தான், வளைக்குத் திரும்பிவிடும். வீட்டுப் பாசமெல்லாம் இல்லை. எதிரிகளிடமிருந்து தப்பிக்கவே உடனுக்குடன் இவை திரும்பிவிடுகின்றன.

எதிரிகளிடமிருந்து தப்பிக்க வித்தியாசமான உத்தியைக் கையாளுகின்றன. எதிரிகள் வருவதை இவை சமிக்ஞைகள் மூலம் மற்ற எலிகளுக்குத் தெரிவித்துவிடும். தனது முன்னங்கால்களால் வினாடிக்கு 15 முதல் 20 தடவை இவை தரையைத் தட்டி ஒலி எழுப்பும். இந்த எச்சரிக்கை ஒலியைக் கேட்டவுடன் மற்ற எலிகள் எதிரிகளிடமிருந்து ஓடி மறைந்து விடும்.

இவை கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரம் வரையுள்ள நிலங்களில் வாழும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. கங்காரு எலிகளுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. இதன் கன்னத்தில் இரண்டு பைகள் உள்ளன. கிடைக்கிற உணவை முதலில் இந்த பைகளில் கங்காரு எலிகள் சேர்த்து வைத்துக் கொள்கின்றன. இந்தப் பைகள்தான் உண்ணும் விதைகளிலிருந்து நீர் ஆவியாவதைத் தடுக்கின்றன.

எப்படி இந்த எலிகள் நீர் இல்லாமல் உயிர் வாழ்கின்றன? இதற்கு ஏன் கங்காரு எலிகள் என்று பெயர் வந்தது?

தான் சாப்பிடும் விதைகளிலிருந்தே இது தனக்குத் தேவையான நீரை எடுத்துக்கொள்கிறது. சாப்பிடும் விதைகளுக்குள் இருக்கும் நீர்ச்சத்துதான், கங்காரு எலிகளின் நீர் ஆதாரம். விதைகளுக்குள் இருக்கும் நீரை ஆவியாகாமல் தடுத்துத் தனக்கு தேவையான நீரை எடுத்துக்கொள்கிறது. ஒரு கிராம் விதையிலிருந்து அரை லிட்டர் தண்ணீரை உருவாக்கிக்கொள்ளும் வகையில் இதன் உடல் இயற்கையாகத் தகவமைக்கப்பட்டுள்ளது (மனிதனுக்கும் எலி மாதிரி உடலியக்கம் படைக்கப்பட்டிருந்தால், தண்ணீர் பிரச்சினை வராதே).

கங்காரு மாதிரி தாவுவது இதன் ஸ்பெஷல். அதனால்தான் இந்த எலிகளுக்கு கங்காரு எலிகள் என்று பெயர். தாவுதல் என்றால் கொஞ்ச நஞ்ச தூரமல்ல. ஒரு வினாடியில் 10 அடி தூரத்தை சர்வ சாதாரணமாகத் தாண்டும். அப்படியென்றால் கங்காரு எலிகள் என்ற பெயர் பொருத்தமாகத்தானே இருக்கிறது!

(காரணங்களை அலசுவோம்)
கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்