நீலா முகத்தில் காற்று வந்து வந்து வீசியது. ரோட்டின் இரு பக்கங்களும் கடைகள் இல்லை. அதற்குப் பதில் மரங்கள் இருந்தன. அவள் அப்பாவின் மோட்டார் பைக்கில் முன்னால் உட்கார்ந்து இருந்தாள். அவள் காற்றை கிழித்துச் சென்றுகொண்டிருந்தாள். முத்தம்மா பாட்டி வீட்டுக்குப் போவது நீலாவுக்கு எப்பவுமே பிடிக்கும். அவளுக்கு முன்னே மின்னி பறந்துகொண்டிருந்தாள்.
கிராமத்தில் நுழைந்ததும் அவளுக்கு எல்லா வீட்டு வாசலிலும் சின்னப் பசங்க விளையாடவும் தாத்தா பாட்டிகள் கால் நீட்டி உட்கார்ந்துக்கொள்ளவும் இருந்த திண்ணை பிடித்துப் போனது. அப்பா, முத்தம்மா பாட்டி வீட்டின் திண்ணையில் உட்கார்ந்துகொண்டார். நீலா வீட்டின் உள்ளே ஓடிச் சுற்றி வந்து பாட்டி பாட்டி எனக் கத்திக்கொண்டே பின் பக்கம் ஓடினாள்.
“ஏய் நீலா, பின் பக்கம் இருக்க இடத்துக்கு புழக்கடைன்னு பேரு, தெரி யுமா?” என்றபடியே மின்னி வந்தாள்.
“நீ வேற தமிழ் மிஸ் மாதிரி பேசாதே… பாட்டி…”
பின்னால் முத்தம்மா பாட்டியின் இரண்டு மாடுகளும் ஒரு புதிய ரோஸ் நிறக் கன்றுக்குட்டியும் இருந்தன. ரோஸ் நிறக் கன்றுகுட்டியின் தோல் மிருதுவாய் பளபளப்பாய் மினுக்கியது. மாட்டுத் தொழுவத்தின் சுவரில் முத்தம்மா பாட்டி விளையாடிக்கொண்டிருந்தாள். பந்து மாதிரி ஒன்றை எடுத்து எடுத்து சுவரில் அடித்துக்கொண்டிருந்தாள்.
“நீலா, உங்க பாட்டி செம கோவத்துல இருக்கா மாதிரி தெரியுது, பேசாம உள்ள போயிடலாம் வந்துடு” என நக்கலடித்தாள் மின்னி.
பாட்டி இவளைப் பார்த்துச் சிரித்தார். “அய்யோ கையில சாணமா இருக்கே, என் தங்கத்தைக் கொஞ்ச முடியாம. இதோ வந்துடறேண்டா கண்ணு” எனச் சொன்னதும் நீலா மின்னியைப் பார்த்து ஒரு முறை முறைத்தாள்.
“எதுக்குப் பாட்டி இப்படி இந்தப் பந்தை எடுத்து சுவத்துல தூக்கி எறியுற?” எனக் கேட்டாள் நீலா. “வறட்டியை அப்படித்தாண்டா தட்டணும். அப்பதான் வட்டமா வரும்” என்றார் பாட்டி.
நிறைய சாணத்தைக் குவித்து, அதில் வைக்கோல் போட்டு மிதித்து கலவையாய் வைத்திருந்தார் பாட்டி. அதை ஒரே அளவில் உருண்டைகளாகப் பிடித்துப் போட்டிருந்தார். ஒரு உருண்டையை எடுத்து வீசிக் காட்டினார். அது சப் பென்று சுவரில் ஒட்டியது.
“நீலா, நம்ம முத்தம்மா பாட்டிய ஒலிம்பிக்ஸுக்கு அனுப்பினா நிறைய மெடல் வாங்கிடுவா இல்ல?” எனக் காதோரம் வந்து மின்னி முணுமுணுத்தாள்.
நீலா சுவருக்குப் பக்கத்தில் போய் வறட்டிகளை உற்றுப் பார்த்தாள். ஒவ்வொன்றும் ஒரே அளவில் வட்டமாய் பச்சை நிறத்தில் பெரிய பெரிய சப்பாத்திகளை சுவற்றில் ஒட்டி வைத்தாற்போல் இருந்தன.
“சாணத்த எதுக்குப் பாட்டி இப்படி சப்பாத்தி மாதிரி செய்யறே” எனக் கேட்டாள் நீலா.
“இத வெச்சித்தான் நான் அடுப்பெரிச்சு சோறு செஞ்சி சாப்பிடுறேன்” என்றார் பாட்டி.
“உனக்கு காஸ் இல்லையா?”
“காஸ் எப்படி ஒரு எரிபொருளோ, அதுமாதிரிதான் வறட்டியும் ஒரு எரிபொருள். நானே செஞ்ச எரிபொருள்” என்றபடி இன்னொரு உருண்டையை எடுத்து வீசினார்.
இந்தப் பாட்டி எப்படி இவ்வளவு கரெக்டா வட்டம் போடுது. நம்மால காம்பஸ் வெச்சிதான் போட முடியுது, அதுவும் கோணலா என யோசித்துக்கொண்டிருந்தாள் நீலா.
“அதானே பாத்தேன். லூசு நீலா… பாட்டி ஒரு கில்லாடி, முதல்ல அவங்க எவ்வளவு ரவுண்டா சாணத்த உருட்டி இருக்காங்க பாத்தியா?”
“ஏய் மின்னி, பாட்டி சாணத்த மட்டுமில்ல, ராகி களி, தயிர் சாதம், ரவா லட்டு, எள்ளுருண்டை எல்லாத்தையுமே ரவுண்டா பண்ணுவாங்க”
“திங்கறதுன்னா மட்டும் நல்லா ஞாபகம் வெச்சுப்பியே” என்று சொல்லி கெக்கெக்கெ என சிரித்தாள் மின்னி.
“எனக்கென்னமோ முத்தம்மா பாட்டிதான் வட்டத்தை கண்டுபிடிச்சிருப்பாங்கன்னு தோணுது”
மின்னி, மாடுகளையும் கன்றுக்குட்டியையும் சுற்றிச் சுற்றிப் பறந்துகொண்டிருந்தாள்.
“ஒரு வேளை முத்தம்மா பாட்டிதான் நிலாவகூட உருட்டி வானத்துல தூக்கி எறிஞ்சிருப்பாங்களோ?” எனக் கேட்டாள் நீலா.
இருவருக்கும் ஒரே சிரிப்பு. இருவரும் பின் தெரு வழியாய் போய் தெருக்களில் சுற்றி, கொல்லை மரங்களில் ஏறி கொய்யாக்கா, கொரிக்கலிக்கா, புளியங்காய் எல்லாம் அடித்தும் பொறுக்கியும் தின்றார்கள். மின்னிக்குப் புளிப்பும் இனிப்புமாய் இருக்கும் புளியமரத்தின் செங்காய் ரொம்பப் பிடிக்கும்.
வீட்டுக்குத் திரும்பியபோது நீலாவுக்கு தூக்கம் தூக்கமாய்
வந்தது. ஆனாலும் ஓடிப்போய் தன் பொக்கிஷப் பெட்டியில் முத்தம்மா பாட்டி கொடுத்த சுருக்குப் பை, புளிய விதைகள் இரண்டையும் வைத்தாள்.
அம்மா உள்ளே வந்து, ஹோம் வொர்க் செய்துவிட்டு தூங்கு எனச் சொல்லிவிட்டாள்.
மின்னி ஆடி அசைந்து உள்ளே வந்து பார்க்கும்போது, பல நோட்டுகள் புக்குகள் தரையில் விரிந்து கிடக்க, நடுவில் நீலா உட்கார்ந்து ஒரு புத்தகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். மூடியிருந்த ஜன்னலை திறந்தாள் மின்னி… காற்றில் நோட்டு புக்கு பேப்பர்கள் படபடத்தன.
“புக்கு நோட்டெல்லாம் பறவையா மாறி பறந்து போயிட்டா அப்புறம்
எப்படி பரீட்சை வெப்பாங்க?” என்றாள் மின்னி.
“எங்க மிஸ் பறந்து போயி எல்லாத்தையும் பிடிச்சிட்டு வந்திடுவாங்க” என்றாள் நீலா.
“அப்படி ஒரு பறவை மிஸ் இருந்தா நான்கூட படிக்க வருவேன்பா...”
மின்னி கீச்சுக்குரலில் கத்தினாள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago