அந்த ஆற்றின் நீர் தெளிவாக இருந்தது. நீரோட்டம் அவ்வளவு வேகமாக இல்லை. அதனுள் நின்றுகொண்டிருந்தார் முராமஸா. அவர் கையில் ஒரு வாள். பல நாட்கள் தூங்காமல் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய கூர்மையான முனை கொண்ட வாள். வாளின் முனை தரையை நோக்கிப் பாயுமாறு நீரினுள் போட்டார் முராமஸா.
அது ‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸூக்...’ எனக் காற்றைக் கிழிக்கும் சத்தத்துடன், நீரைத் துளைத்துக்கொண்டு, இடைப்பட்ட இலைகளை எல்லாம் சரசரவெனக் கிழித்துக்கொண்டு, எதிர் வந்த மீன்களை எல்லாம் மளமளவெனத் துண்டாக்கியபடி ஆற்றின் அடித்தரையில் குத்தி நின்றது. ரத்தம் நீரினுள் பரவ முராமஸாவின் முகத்தில் பெருமிதம்.
அவருக்கு அருகில் மஸாமுனே நின்று கொண்டிருந்தார். அவர் கையிலும் ஒரு வாள் இருந்தது. பல நாட்கள் உழைப்பில் அவரே செதுக்கிய அந்த அழகான வாளை, நீரினுள் இட்டார். அது காற்றை மென்மையாகத் தழுவியபடியும், நீரின் ஓட்டத்தைப் பாதிக்காதபடியும் தன்மையாக இறங்கியது. இலைகள் வாளின் கூர்மையால் கிழிந்தன. ஆனாலும் அடுத்த விநாடியே ஒட்டிக் கொண்டன. வாள், மீன்களை எந்த விதத்திலும் பாதிக்காமல் ஆற்றின் தரையைச் சென்றடைந்தது. மஸாமுனேவின் முகத்தில் சாந்தமான புன்னகை.
யாருடைய வாள் சிறந்தது என்ற போட்டிதான் அங்கே நடந்து முடிந்தது. முடிவை அறிவிக்கும் பொறுப்பு ஒரு துறவியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தத் துறவி முடிவைச் சொன்னார். ‘முராமஸாவின் வாள் ரத்த வெறி பிடித்தது. எதை வெட்டுகிறோம், யாரை வெட்டுகிறோம் என்று பிரித்து உணரத் தெரியாத தீய வாள்.
அது ஒரு பட்டாம்பூச்சியைக்கூட எதிரியின் தலையைப்போல வெட்டிவிடும். மஸாமுனேவின் வாளுக்கு எதை வெட்ட வேண்டும், யாரை வெட்ட வேண்டும் என்ற புரிதல் இருக்கிறது. அப்பாவி உயிர்களை எந்த விதத்திலும் பாதிக்காத அற்புதமான வாள், மஸாமுனேவினுடையதே!’ என்றார் துறவி.
மஸாமுனே பதிமூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர். ஜப்பானின் சரித்திரத்திலேயே சாமுராய்களுக்கான வாளை உருவாக்குவதில் மிகச் சிறந்தவர் என்ற பெயர் இவருக்கு உண்டு. முராமஸா, அவரது சீடர்தான். குருவுக்கும் சிஷ்யனுக்கும் நடந்த போட்டியில் குருவே வென்றார்.
ஏனென்றால் மஸாமுனே தயாரித்த வாள்கள் எதிரிகளிடத்தில் வீரத்துடனும், மற்ற உயிர்களிடத்தில் அன்புடனும் நடந்துகொண்டன. ஹோஞ்ஜோ, ஃப்யூடோ, முஸாஷி, ஹோச்சோ, கோடேகிரி எல்லாம் மஸாமுனே தயாரித்த சரித்திரப் புகழ்பெற்ற சாமுராய் வாள்கள். இவை ஒவ்வொன்றும் பல போர்க்களங்களைக் கண்டவை. அவற்றில் மஸாமுனே, தன் பெயரையும் பொறித்திருந்தார்.
இவற்றில் மிக முக்கியமான வாள், ஹோஞ்ஜோ. ஜப்பானில் இதுவரை தயாரிக்கப்பட்ட வாள்களிலேயே மிகவும் நேர்த்தியுடன் அழகாகவும் வலிமையானதாகவும் உருவாக்கப்பட்ட வாள் என்ற பெருமை இதற்கு உண்டு. இரும்பை உருக்கி, இஷ்டம்போல வளைக்கும் தொழில்நுட்பம் எல்லாம் அதிகம் வளராத அந்தக் காலத்தில், மஸாமுனே இப்படி ஓர் அருமையான வாளைத் தயாரித்தது பேரதிசயமாகக் கருதப்படுகிறது.
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய ராஜ்ஜியம் ஒன்றின் தளபதியாக இருந்த ஹோஞ்ஜோ என்பவர், போரில் எதிரி வீரரான உமானோசுகேவின் வாளால் தாக்கப்பட்டார். அந்த வாள் ஹோஞ்ஜோவின் வலிமையான தலைக்கவசத்தை இரண்டாகப் பிளந்தது. அந்த வாளின் வலிமையைக் கண்டு அதிசயித்த ஹோஞ்ஜோ, பிறகு சுதாரித்துக்கொண்டு எதிரியை அழித்தார்.
அந்த வாளைத் தனக்கான போர்ப் பரிசாக எடுத்துக்கொண்டார். அந்த வாள், மஸாமுனேவால் தயாரிக்கப்பட்டது. பல போர்க்களங்களைக் கண்ட பிறகும் கூர்மை குறையாமல் மின்னியது. அந்த வாளுக்கு ‘ஹோஞ்ஜோ மஸாமுனே’ என்ற பெயரே நிலைத்துவிட்டது.
அந்த வாள் ஹோஞ்ஜோவால் 13 பெரிய தங்கக் காசுகளுக்கு இன்னொருவரிடம் விற்கப்பட்டது. அடுத்தடுத்து மற்றவர்களிடமும் கைமாறியது. இருபதாம் நூற்றாண்டில், டோகுகவா குடும்பத்தினரிடம் அந்த வாள் இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த லிமாஸா என்பவர், வாளின் உரிமையாளராக இருந்தார்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஜப்பான் சரணடைந்த பின், அமெரிக்க வீரர்கள் அங்கிருந்து ஏகப்பட்ட செல்வங்களைத் தங்களுக்கான போர்ப் பரிசாக எடுத்துக்கொண்டனர். அதில் சாமுராய் வாள்களும் நிறைய உண்டு. லிமாஸா தன்னிடமிருந்த ஹோஞ்ஜோ மஸாமுனே உள்ளிட்ட பல வாள்களை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த வாள்கள் செர்ஜண்ட் கோல்டி பைமோர் என்ற அமெரிக்கரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஜப்பானியத் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கத் தரப்பில் அப்படி ஒரு வீரர் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டதற்கான பதிவே இல்லை.
இப்போது ஹோஞ்ஜோ மஸாமுனே வாள் அமெரிக்காவில் எங்கு இருக்கிறது, எப்படி இருக்கிறது என்பதற்கான எந்தத் தகவலும் இல்லை. அமெரிக்க வீரர்கள் பலர் தாங்கள் கைப்பற்றிய வாள்களை உருக்கி, கோப்பைகளாகவும் பதக்கங்களாகவும் செய்து கொண்டார்கள். சுமார் 700 வருட வரலாறு கொண்ட ஜப்பானின் அரிய பொக்கிஷமான ஹோஞ்ஜோ மஸாமுனே வாளும் அப்படி உருக்கப்பட்டு மாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், அது யாரிடம் எந்த வடிவத்தில் இருக்கிறது என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை.
இப்போதைக்கு ஜப்பானிய கார்ட்டூன் கேரக்டர்கள் மட்டும் மஸாமுனேவின் வாள்களை வீரத்துடன் சுழற்றிக் கொண்டிருக்கின்றன.
(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago