மூன்று சோம்பேறிகளும் ஒரு வழிப்போக்கனும்

By ஜிங்லி

ஒரு பழைய கிராமம். அதில் ஒரு கல்மண்டபம். அங்கே எப்போதும் மூன்று சோம்பேறிகள் உட்கார்ந்துகொண்டு வழிப்போக்கர்களை வம்புக்கிழுத்து நேரத்தைப் போக்கடித்துக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் அந்த வழியே ஒரு வெளியூர்க்காரர் வந்தார். சோம்பேறிகள் வழக்கம்போல் பேச்சு கொடுக்கத் தொடங்கினார்கள்.

ஒரு சோம்பேறி சொன்னான், “நேரம் போகவேண்டுமல்லவா. நமக்குள் ஒரு பந்தயம் வைத்துகொள்வோம். ஆளுக்கொரு கதை சொல்ல வேண்டும். அதை மற்றவர்கள் நம்ப வேண்டும். நம்பாவிட்டால் கதை கேட்டவர் கதை சொன்னவருக்கு அடிமை. சரிதானே ?”

வழிப்போக்கர் ஒப்புக் கொண்டார். கல் மண்டபத்தில் இருந்த ஒரு ஊர்க்காரர் ஒருவர் முன்னிலையில் கதை சொல்லத் தொடங்கினார்கள்.

முதல் சோம்பேறி சொன்ன கதை இது.

“ஒருநாள் பக்கத்துக் காட்டுக்குள்ளே ஒரு வகையான மருத்துவக் குணம் கொண்ட மரத்தின் காய்களைத் தேடிப்போனேன். அந்த மரத்தைத் தேடிக் கண்டுபிடிக்கவே ரொம்ப நேரம் ஆகிவிட்டது. அது உயரமான மரம். மரத்தில் ஏறிக் காய்களைப் பறித்துக்கொண்டிருக்கும்போதே இரவு நேரம் வந்துவிட்டது. ஒரே இருட்டு. கீழே இறங்க வழி தெரியவில்லை”.

வழிப்போக்கர் கேட்டார், “ அட..டே என்ன செய்தீர்கள்?”

முதல் சோம்பேறி சொன்னான், “ வேறென்ன செய்ய? மரத்தின் மேலேயே தூங்கிவிட முடிவு செய்தேன்”.

“நல்ல முடிவு… நல்ல முடிவு…”

“ஆனால் அதில் ஒரு பிரச்சினை . எனக்குக் கட்டிலில் படுத்தால்தான் தூக்கம் வரும்”.

“அப்படியா? அப்புறம் என்ன செய்தீர்கள்?”

“ வேறென்ன செய்ய? கீழே இறங்கி, வீட்டுக்கு வந்து கட்டிலை எடுத்துக் கொண்டு போய், மரத்தில் படுத்துத் தூங்கினேன்.”

வழிப்போக்கர் சொன்னார், “பலே, பலே. . நல்லவேலை செய்தீர்கள்”.

ஊர்க்காரர் கேட்டார், “ இதை நீங்கள் நம்புகிறீர்களா?”

வழிப்போக்கர் சொன்னார்,

“ நிச்சயமாக…”

இரண்டாம் சோம்பேறி கதை சொல்லத் தொடங்கினான்.

“அப்போது நான் என் அம்மாவின் வயிற்றில் இருந்தேன். என் அம்மா அப்பாவிடம் வீட்டில் இருந்த கொய்யா மரத்தில் இருந்து கொய்யாப்பழம் பறித்து தரச் சொன்னார். அப்பா முடியாது, எனக்கு வேறு வேலை இருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். எனக்கு வருத்தமாகப் போய்விட்டது. அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இரவு எல்லாரும் தூங்கியபின் அம்மாவின் வயிற்றில் இருந்து இறங்கி வந்து, வீட்டுக்கு வெளியே இருந்த கொய்யா மரத்தைப் பார்த்தேன். கொய்யாப்பழம் உயரத்தில் இருந்தது. உடனே மரத்தை வெட்டிச் சாய்த்து, கொய்யாப்பழத்தை அம்மா முன்னால் வைத்தேன். மரத்தையும் துண்டுதுண்டாக வெட்டி திண்ணையில் அடுக்கினேன். பிறகு அம்மா வயிற்றில் தூங்க போய்விட்டேன்.”வழிப்போக்கர் சொன்னார், “ ஆகா… ஆகா… என்ன ஒரு தாய்ப்பாசம்”.

ஊர்க்காரர் கேட்டார்,

“ இந்த கட்டுக்கதையை நீங்கள் நம்புகிறீர்களா?”

வழிப்போக்கர், “ நம்பாமலா? என்ன ஒரு தாய்ப்பாசம்” என்றான்.

மூன்றாவது சோம்பேறி கதை சொல்லத் தொடங்கினான்.

“ ஒரு நாள் நான் காட்டுக்கு முயல் வேட்டையாடப் போனேன். காடெல்லாம் அலைந்தும் ஒரு முயல்கூடக் கிடைக்கவில்லை. ஒரு புதரின் பின்னால் மறைந்து முயலுக்காகக் காத்திருந்தேன்.

அப்போது என் பின்புறமிருந்து ஒரு கர்ஜனை கேட்டது. திரும்பிப் பார்த்தேன். ஒரு சிங்கம். “அட ச்சீ… போ… நான் முயலுக்காகக் காத்திருக்கிறேன்” என்றேன். சிங்கத்திற்குக் கோபம் வந்துவிட்டது. அது கடித்து என் தலையை விழுங்கிவிட்டது.

“எனக்கோ அதைவிட ரொம்ப கோபம். கத்தியை எடுத்தேன். சிங்கத்தின் வயிற்றைக் கிழித்தேன். என் தலையை வெளியே எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டேன்…”

“அப்புறம் . .?”

“அப்புறமென்ன ? ஒரு முயலை வேட்டையாடி வீட்டுக்குக் கொண்டுவந்தேன்”.

வழிப்போக்கர் சொன்னார், “என்ன வீரம்… என்ன வீரம்…”

ஊர்க்காரர் கேட்டார், “ இதை நீங்கள் நம்புகிறீர்களா?”

வழிப்போக்கர் சொன்னார்,

“ஆமா… ஆமா…”.

கடைசியாக வழிப்போக்கர் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்,

“ ஒரு நாள் நான் பக்கத்து ஊர் சந்தைக்குப் போனேன். போகிற வழியில் ஒரு மனிதர் அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்து அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவர் உயிரைக் காப்பாற்றினேன். அவர் ஒரு மந்திரவாதி. அவர் போகும்போது எனக்கு மூன்று அவரை விதைகளைத் தந்து விட்டுப் போனார்.

நான் அந்த விதைகளை வீட்டுத் தோட்டத்தில் ஊன்றி வைத்தேன். மறுநாள் காலையில் பார்த்தால் அவை முழுச் செடிகளாக வளர்ந்திருந்தன. மதியம் பார்த்தால் மூன்று பூக்கள் பூத்திருந்தன.

மாலையில் அவை தரையில் உதிர்ந்து மூன்று மனிதர்களாக மாறிவிட்டன. அவர்கள் என்னிடம் வந்து ‘நாங்கள் உங்களுடைய அடிமைகள்’என்றனர்.

“அன்று முதல் அவர்கள் மூவரும் என்னிடம் அடிமைகளாக வேலை செய்து வந்தனர். ஆனால் அவர்கள் மூவரும் படு சோம்பேறிகள். ஒரு நாள் அவர்கள் மூவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். அவர்களைத் தேடித்தான் நான் இந்த ஊருக்கு வந்தேன். நீங்கள்தான் அந்தச் சோம்பேறிகள்” என்று கதையை முடித்தார்.

ஊர்க்காரர் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினார்…

சோம்பேறிகள் கதையை நம்பாவிட்டால் முதலில் போட்ட ஒப்பந்தப்படி மூவரும் வழிப்போக்கருக்கு அடிமைகள். நம்பினாலோ கதைப்படி மூவரும் வழிப்போக்கனுக்கு அடிமைகள். என்ன செய்வார்கள் அந்தச் சோம்பேறிகள்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்