இடம் பொருள் மனிதர் விலங்கு: கணக்கு போடும் குதிரை

By மருதன்

நீங்கள் இதை நிச்சயம் நம்பப் போவதில்லை.  ’ஹாஹா, நீங்கள் சொல்வதை எல்லாம் நம்புவதற்கு என்னை என்ன குட்டி பாப்பா என்று நினைத்துவிட்டீர்களா?’ என்று நீங்கள் சிரிக்கவும் கூடும். நீங்கள் மட்டுமல்ல, ஹான்ஸ் பற்றிக் கேள்விப்பட்ட ஜெர்மானியர்கள்கூட இப்படித்தான் சிரித்தார்கள். எல்லாம் ஹான்ஸைப் பார்க்கும்வரைதான். அதற்குப் பிறகு அவர்களால் வாயைத் திறக்கவே முடியவில்லை.

ஆனால் சிலருக்கு அப்போதும் நம்பிக்கை இல்லை. ’என்னது, குதிரை கணக்கு போடுகிறதா?  ஐயா, காதில் பூ சுற்றுவதற்கும் ஒரு அளவு கிடையாதா? இவ்வளவு வளர்ந்த எனக்கே கணக்கு என்றால் கை, கால்  உதற ஆரம்பித்துவிடும். போயும் போயும் குதிரைக்கு எப்படிப்பா கணக்கு தெரியும்? அது பள்ளிக்கூடத்திலா படித்தது? நான் எப்படிக் குதிரையிடம் கணக்குக் கேள்வி கேட்க முடியும்? எனக்குக் குதிரை மொழி தெரியாது.

அல்லது  நான் பேசும் ஜெர்மன் மொழி அதற்குப் புரியுமா? ஹாஹா. நல்ல வேடிக்கைதான். சரி, அப்படியே மொழி புரிந்தாலும் கணக்கைப் புரிந்துகொள்ளும் அளவுக்குக் குதிரைக்குத் திறன் இருக்கிறதா? அப்படியே புரிந்துகொண்டாலும் எப்படி அது சரியான விடையை அளிக்கிறது? எழுதிக் காட்டுகிறதா அல்லது பேசுகிறதா? அடப் போங்கப்பா!’

அது சரி, நாம் ஏன் நேரில் சென்று பார்த்து, இது பொய் என்பதை உலகுக்கு நிரூபிக்கக்கூடாது? ஒரு நாள் அவர்கள் கிளம்பிச் சென்றார்கள். கதவைத் தட்டினார்கள். ஹான்ஸின் உரிமையாளர் வந்து கதவைத் திறந்தார். ”என்ன, என் குதிரையின் புத்திசாலித்தனத்தைச் சோதிக்க வந்திருக்கிறீர்களா? வாருங்கள்” என்று கையோடு அழைத்துச் சென்று தோட்டத்தில் இருந்த குதிரையை அறிமுகம் செய்துவைத்தார். ”ஹான்ஸ், வழக்கம்போல் இன்றும் உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள். நீ பார்த்துக்கொள், உள்ளே எனக்குச் சில வேலைகள் இருக்கின்றன.”

’ஹாஹா’ என்று மீண்டும் சிரித்தார்கள் வந்தவர்கள். அப்படியே அவர் சொல்வாராம், இது கேட்குமாம். இதன் வண்டவாளத்தை இப்போது வெளியில் கொண்டு வருகிறோம் இருங்கள். ”ஹான்ஸ்,  இரண்டையும் இரண்டையும் பெருக்கினால் என்ன கிடைக்கும், சொல்லு பார்ப்போம்?” கேள்வி கேட்டவரை ஒரு நொடி உற்றுப் பார்த்தது ஹான்ஸ். பிறகு தன் குதிகாலால் தரையை நான்கு முறை தட்டியது.

”பத்தையும் பதினைந்தையும் கூட்டினால்  என்ன வரும் ஹான்ஸ்?” தட், தட், தட் என்று 25 முறை தட்டிய பிறகு, இப்போது என்ன சொல்கிறாய் என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தது ஹான்ஸ். நிஜமாகவே அவர்கள் ஆடிப்போய்விட்டார்கள். ஓர் எண்ணுக்குப் பதிலாக இரு எண்கள் கொடுத்தால்? கொடுத்துப் பார்த்தார்கள். அப்படியானால் கழித்தல் கணக்குகூடப் போடுமா? பரிசோதித்துப் பார்த்தார்கள். வகுத்தல்? அதையும் விடவில்லை.

கிட்டத்தட்ட எல்லாக் கேள்விகளுக்கும் ஹான்ஸிடம் இருந்து பட்பட்டென்று (அல்லது தட் தட் என்று) பதில் பறந்து வந்தது. வாயை அகலமாகத் திறந்து ஆச்சரியப்படுவதைத் தவிர, வேறு வழியில்லை வந்தவர்களுக்கு. இதென்ன நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் இப்படிப் பண்ணிவிட்டது இந்த ஹான்ஸ்? இப்படியே போனால் நாளை வடிவியல், இயற்பியல், வேதியியல் என்று எல்லாவற்றையும் ஒரு கலக்கு கலக்கிவிடும் போலிருக்கிறதே?

ஆனால், இப்போதும் சந்தேகம் அடங்கியபாடில்லை. ஒருவேளை ஹான்ஸின் உரிமையாளர் ரகசியமாக விடையைச் சொல்லிக் கொடுக்கிறாரா? அந்த வீட்டிலிருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துப் பார்த்தார்கள். குழந்தைகள் கேட்டால் பதில் சொல்லுமா? பெண்கள் கேட்டால் புரியுமா? வயதானவர்கள்? ஒருவர் ஆர்வத்துடன் காகிதத்தில் கணக்கை எழுதி கொண்டுபோய் ஹான்ஸிடம்  காட்டினார். தட், தட், தட். துல்லியமான விடை.

1904-ம் ஆண்டு ஜெர்மானியக் கல்வித் துறை 13 பேரைக் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. அதில் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் என்று பலர் இருந்தனர். இருந்து என்ன பயன்? ஒருவராலும் ஹான்ஸின் ரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.  ஒருவழியாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் உளவியல் நிபுணர் ஹான்ஸின் கணக்குப் புதிருக்கு விடை கண்டுபிடித்தார். அந்த விடை என்ன தெரியுமா, ஹான்ஸுக்கு ஜெர்மன் மொழியும் தெரியாது, கணக்கும் தெரியாது என்பதுதான். அப்படியானால் எப்படி அது சரியான விடைகளைச் சொல்கிறது?

காரணம் நமக்கெல்லாம் தெரியாத ஒரு மொழி ஹான்ஸுக்குத் தெரியும். அது உடல்மொழி. நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள். அது உங்களைப் பார்க்கிறது. பிறகு நிதானமாகத் தன் குதிகாலால் தட்ட ஆரம்பிக்கிறது. நான்கு, ஐந்து, ஆறு என்று தட்டிக்கொண்டே போகிறது. சரியான விடையை நெருங்கும்போது உங்கள் கண்கள் ஆச்சரியத்தில் விரிகின்றன. ஆ, இன்னும் இரண்டு தட்டு தட்டினால் சரியான விடை வந்துவிடுமே என்று உங்கள் மூளை பரவசம் அடைகிறது. அந்தப் பரவசம் உங்கள் கைகளுக்கும் கால்களுக்கும் பரவுகிறது.

உங்கள் இதயம் வேகமாகத் துடிக்கிறது. உங்களுடைய படபடப்பு கூடுகிறது. ஹான்ஸ் உங்களுடைய ஒவ்வோர் அசைவையும் துல்லியமாகக் கவனிக்கிறது. அது கணக்கு பற்றி யோசிப்பதில்லை. கூட்டலா கழித்தலா வகுத்தலா என்றெல்லாம் சிந்திப்பதில்லை. பதற்றமில்லாமல், உங்களைப் பார்த்தபடி தட்டுகிறது. ’ஆஹா, கண்டுபிடித்துவிட்டதே!’ என்று நீங்கள் கூச்சலிடும்போது அல்லது இரு கைகளையும் உயர்த்தி மகிழ்ச்சியடையும்போது அது தட்டுவதை நிறுத்திக்கொள்கிறது.

அடப்பாவி ஏமாற்றிவிட்டாயே என்று அவர்கள் ஹான்ஸைக் கோபித்துக்கொண்டார்கள் என்றா நினைக்கிறீர்கள்? ஹான்ஸ் மீதான அவர்களுடைய மதிப்பும் மரியாதையும் முன்பைவிட அதிகரித்துவிட்டது. யாருக்கு வேண்டும் கழித்தலும் கூட்டலும்? இந்த ஹான்ஸ் எவ்வளவு புத்திசாலி பாருங்கள். நம்மால் ஹான்ஸ்போல் மற்றவர்களுடைய அசைவுகளைப் புரிந்துகொள்ள முடியுமா? சரியான விடையை ஹான்ஸ்போல் சொல்ல முடியுமா? பேசாமல் நாம் ஒன்று செய்யலாம், ஹான்ஸை நம் பள்ளிக்கூடத்தின் ஆசிரியராக நியமித்துவிடலாம். கணக்கு என்றாலே கதறும் குழந்தைகளுக்கு ஹான்ஸைவிடச் சிறந்த ஆசிரியர் கிடைத்துவிடுவாரா, என்ன?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்