சதுரங்க விளையாட்டின் வயது ஆயிரத்து ஐநூறுக்கும் மேல். கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பே இந்தியாவில் சதுரங்கம் விளையாடப்பட்டதாக வரலாறு சொல்கிறது. சதுரங்கத்தின் தாயகம் இந்தியாதான். இங்கே இருந்துதான் சதுரங்கம் ஆசியாவின் பிற நாடுகளுக்குப் பரவியது. மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்குச் சென்றது.
பாரசீகத்துக்கும், பாரசீக மன்னர்களின் படையெடுப்புகள் மூலமாக இஸ்லாமிய ராஜ்யங்கள் பலவற்றுக்கும் கொண்டு செல்லப்பட்டது. இப்படியாகப் பத்தாம் நூற்றாண்டில் ஐரோப்பியக் கண்டத்தில் ஸ்பெயினில் சதுரங்கம் அறிமுகமானது.
பின்பு ஐரோப்பியர்கள் தாங்கள் காலனி அமைக்கச் சென்ற பிற நாடுகளில் சதுரங்கத்தைப் பரப்பினார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவற்கான சில முக்கியமான வரைமுறைகள் இத்தாலியில் உருவாக்கப்பட்டன. ராணிக்கு கூடுதல் நகர்வுகள் அனுமதிக்கப்பட்டன. அதன் மூலம் ராணியின் வலிமை அதிகரித்தது.
இந்தியாதான் தாயகம் என்றாலும் இன்றைய சதுரங்கத்தின் பல்வேறு விதிமுறைகளைக் கொண்டு வந்ததும், சதுரங்கக் காய்களைப் பொதுத்தன்மையுடன் வடிவமைத்ததும் ஐரோப்பிய நாடுகளே. சரி, உலகின் பழமையான சதுரங்கக் காய்கள் எவை?
பத்ரோட்டம் என்ற பட்ரிண்ட். பண்டைய கிரேக்க நகரம். இன்று அல்பேனியாவில் அமைந்துள்ளது. அங்கே 2002 ஜூலையில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில், சதுரங்கக் காய் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 2 அங்குல உயரத்தில் தந்தத்தால் செய்யப்பட்ட, தலைப் பகுதியில் சிலுவை அடையாளம் கொண்ட காய்.
அது ராணியாக இருக்கலாம். அதன் காலம் கி.பி. 465 என்று கண்டறியப்பட்டுள்ளது. பண்டைய பைசாந்தியப் பேரரசு அல்லது ரோமானியப் பேரரசில் பயன்படுத்தப்பட்ட சதுரங்கக் காயாக அது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. உலகின் பழமையான இந்தச் சதுரங்கக் காயின் கண்டுபிடிப்பு, சதுரங்கத்தின் வயதை, இந்தியாவிலிருந்து சதுரங்கம் பரவிய சரித்திரத்தை மேலும் பின்னோக்கி நகர்த்துகிறது.
1977-ல் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் அருகே அஃப்ரஸியப் என்ற ஊரில், வரலாற்றாளரான பர்ஜாகோவ் ஏழு பழமையான சதுரங்கக் காய்களைக் கண்டுபிடித்தார். கைகளில் குறுவாள், கேடயத்துடன் இரண்டு சிப்பாய்கள், ஆயுதம் தாங்கிய குதிரை வீரர்கள் இருவர், போர் யானை மீது கவசமணிந்த ஒரு வீரர், இரண்டு குதிரைகள் பூட்டிய ரதத்தில் மந்திரி, மூன்று குதிரைகளுடனான ரதத்தில் ராஜா.
அவை கி.பி. 760 காலத்தைச் சேர்ந்தவை. தந்தத்தால் செய்யப்பட்டவை. நாணயம் ஒன்றும் இந்தச் சதுரங்கக் காய்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இவை சாமர்கண்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதே அஃப்ரஸியப் பகுதியில் மேலும் சில சதுரங்கக் காய்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் மண்ணால் செய்யப்பட்ட குதிரை வீரன் காய் முக்கியமானது. இது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வட இந்தியாவில் அல்லது ஆப்கனிஸ்தானில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
1932-ல் இத்தாலியின் வெனாஃப்ரோ நகருக்கு அருகில் ஒரு கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. பத்தாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தைச் சேர்ந்த ரோமானிய சாம்ராஜ்யக் கல்லறையான அதனுள், சில சதுரங்கக்காய்களும் கண்டெடுக்கப்பட்டன.
எலும்புத்துண்டுகளால் செய்யப்பட்டு யானைத் தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட காய்களான அவை, அரேபியக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வடிவத்தில் இருந்தன. ரோமானிய சாம்ராஜ்யக் கல்லறையில், அரேபிய சதுரங்கக் காய்கள் எப்படி இருக்கும்? இது ரோமானியர்கள் காலத்தைச் சேர்ந்தவைதானா? இப்படி சர்ச்சையும் அப்போது எழுந்தது.
ஐரோப்பியக் கண்டத்தில் கிடைத்ததிலேயே மிகவும் பழமையான, அழகான சதுரங்கக் காய்கள் என்றால் அது ஸ்காட்லாந்தின் லூயிஸ் தீவில் கண்டெடுக்கப்பட்டவையே. அங்கே 1831-ல் கடற்கரைப் பகுதி ஒன்றில், ஒருவர் பெட்டி நிறைய சதுரங்கக் காய்களைக் கண்டெடுத்தார்.
பெட்டிக்குள் வேறு சில விளையாட்டுகளுக்கான காய்களும் வைக்கப்பட்டிருந்தன. வால்ரஸ் தந்தத்தில்தான் இந்தக் காய்களைச் செதுக்கியிருந்தார்கள். சில காய்களை மட்டும் திமிங்கிலத்தின் பற்களில் செதுக்கியிருந்தார்கள்.
Lewis Chessmen என்று பெயரிடப்பட்ட இந்தச் சதுரங்கக் காய்கள் அனைத்துமே பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அப்போது நார்வேயின் பிடியில் லூயிஸ் தீவு இருந்தது. நார்வேயின் ஆளுகைக்குட்பட்ட ஏதோ ஒரு பகுதியில் செய்யப்பட்ட சதுரங்கக் காய்களாக இவை இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சில வரலாற்றாளர்கள், லூயிஸ் சதுரங்கக் காய்கள் எல்லாமே நார்வேயின் டிரான்டெய்ம் (Trondheim) நகரத்தில் செதுக்கப்பட்டவை என்று உறுதியாகக் கூறுகிறார்கள். டிரான்டெய்ம் நகரத்தில்தான், இப்படிப்பட்ட கைதேர்ந்த சிற்பிகள் இருந்தார்கள்.
சதுரங்கக் காய்களின் கைகளில் இருக்கும் கேடயங்களின் வடிவத்திலேயே டிரான்டெய்மிலும் பழைய கேடயங்கள் இருக்கின்றன. இதேபோல ஒரு சில சதுரங்கக் காய்கள், டிரான்டெய்மிலும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன என்று வரலாற்றாளர்கள் ஆதாரங்களை அடுக்குகிறார்கள்.
மொத்தம் 78 லூயிஸ் சதுரங்கக் காய்களில், 8 அரசர்கள், 8 அரசிகள், 16 அமைச்சர்கள், 15 குதிரை வீரர்கள், 12 கோட்டைகள் அல்லது யானைகள், 19 சிப்பாய்கள் அடக்கம். சிப்பாய்க் காய்களின் உயரம் 3.5 செமீ முதல் 5.8 செமீ வரை வேறுபடுகிறது.
இப்படியாக ஐந்து விதமான உயரங்களில் சிப்பாய்க் காய்கள் இருப்பதைக் கொண்டு, இவை ஐந்து வெவ்வேறு சதுரங்கப் பலகைகளைச் சேர்ந்த காய்களாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. சிப்பாய்க் காய்களைத் தவிர, மற்ற அனைத்துமே மனித உருவம் கொண்டவை.
குதிரை வீரர்கள் கைகளில் ஈட்டியையும் கேடயத்தையும் பிடித்திருக்கின்றனர். குதிரைகள் சிறியவையாக இருக்கின்றன. சில காய்களில் சிவப்புத் தடங்கள் காணப்படுகின்றன. இப்போது கறுப்பு – வெள்ளைக் காய்களைப் பயன்படுத்துவதுபோல, அப்போது அவர்கள் சிவப்பு – வெள்ளைக் காய்களைப் பயன்படுத்தியிருக்கலாம்.
லூயிஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சதுரங்கக் காய்கள், வேறு சிலரது கைகளுக்கு மாறின. பின்பு அதில் பெரும்பாலான காய்களை பிரிட்டிஷ் அருங்காட்சியகம் வாங்கியது. 11 காய்கள் மட்டும் சுவிட்சர்லாந்து தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.
பாரிஸின் தேசிய நூலகத்தில் ‘சார்லெமேன் சதுரங்கக் காய்கள்’ என்ற உலகின் மிக அழகான, பழமையான சதுரங்கக் காய்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சார்லெமென் சதுரங்கக் காய்கள், பதினோராம் நூற்றாண்டில் இத்தாலியில் உருவாக்கப் பட்டவையாக இருக்கலாம். இவையும் யானைத் தந்தத்தில் கலைநயத்துடன் செதுக்கப்பட்டவையே. பதிமூன்றாம் நூற்றாண்டில் இந்தச் சதுரங்கக் காய்கள் பாரிஸின் செயின்ட் டெனிஸ் தேவாலயத்தில் இருந்ததாக வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது.
சினம் கொண்ட யானை சில வீரர்களைத் தனது தும்பிக்கையால் பந்தாடுவது போன்றும், அந்த யானை மேல் ஒருவர் கம்பீரமாக அமர்ந்திருப்பது போன்றும், உடன் இரண்டு குதிரை வீரர்கள் வருவது போன்றும் சதுரங்கக் காய் ஒன்று உள்ளது. இது இந்தியாவில் பத்தாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட சதுரங்கக் காயாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள். இது சதுரங்கத்தில் பயன்படுத்தப்படும் காயே அல்ல என்பது வேறு சிலரது கருத்து.
அரேபிய பாணியிலான யானை வீரர்களின் சதுரங்கக் காய்களும் இதில் இடம்பெற்றுள்ளன. ராஜாவும் ராணியும் சேவகர்கள் உடன் மாடத்தில் நிற்பது போன்று காய்கள் செதுக்கப்பட்டுள்ளன. குதிரை வீரர்களும் காலாட்படை வீரர்களும் கைகளில் வாளும் கேடயமும் வைத்திருக்கிறார்கள். நான்கு குதிரை பூட்டிய ரதத்தில் வரும் மந்திரிகளும் உண்டு.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியின்போது சார்லெமென் சதுரங்கக் காய்களில் பாதி எண்ணிக்கை காணாமல் போனது. எஞ்சியிருக்கும் 2 ராஜாக்கள், 2 ராணிகள், 3 யானைகள், 4 குதிரைகள், 3 ரதங்கள், 1 சிப்பாய் மட்டும் இப்போது பாரிஸின் தேசிய நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சரி, யார் இந்த சார்லெமென்? Charlemagne என்பவர் கி.பி. 800-ல் நிறுவப்பட்ட புனித ரோமப் பேரரசின் முதலாம் பேரரசர். பல போர்களைக் கண்டவர். வலிமையானவர். நிர்வாகத்தில் திறமையானவர். சார்லெமென் காலத்தில் அங்கே சதுரங்கம் அறிமுகமாகவில்லை.
பாக்தாத்தைத் தலைநகரமாகக் கொண்ட அப்பாஸிய ராஜ்ஜியத்தின் ஐந்தாவது கலீபாவான ஹாருன் அல்-ரஸீத், சார்லெமெனைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்தச் சதுரங்கக் காய்களைப் பரிசாகக் கொடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. எனவே, சார்லெமென் சதுரங்கக் காய்கள் என இது பெயர் பெற்றது. ஆனால், சார்லெமெனுக்குச் சதுரங்கம் விளையாடத் தெரியுமா என்பதற்கான விடை நமக்குத் தெரியாது.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
36 mins ago
சிறப்புப் பக்கம்
40 mins ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago