இடம் பொருள் மனிதர் விலங்கு: எல்லோருக்கும் பெய்யும் மழை! 

By மருதன்

‘உனக்கு என்ன வேண்டுமானாலும் தயங்காமல் கேள், எங்கெல்ஸ். நான் இருக்கிறேன்’ என்று இன்றுவரை என்னைப் பாசத்தோடு வருடிக் கொடுக்கும் உங்களிடம் இதை நான் எப்படிச் சொல்லப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனாலும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.

என்னைப் பள்ளியில் சேர்த்தவர் நீங்கள். எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய் எங்கெல்ஸ் என்று ஒருமுறை நீங்கள் கேட்டபோது, கவிஞனாகப் போகிறேன் என்று சொல்லி நான் எழுதியவற்றைக் கொண்டுவந்து காட்டினேன். பயந்துபோய் அன்றே என்னைப் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டீர்கள். ’இதோ பார் மகனே, ஊர் முழுக்க விதம் விதமாக ஆலைகளைத் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறேன். பணம் மழைபோல் கொட்டுகிறது. ஏழு தலைமுறைக்குச் சொத்து சேர்த்தாகிவிட்டது. நீ எதற்கு அநாவசியமாக கவிதை, கிவிதை என்று அலைய வேண்டும்? வா என்னோடு!’

ஒரு தொழிற்சாலையில் என்னை அமர்த்தினீர்கள். அப்பா எனக்கு இதெல்லாம் தெரியாது என்று நான் தயங்கியபோது, நீ எதுவுமே செய்ய வேண்டாம், மற்றவர்கள் வேலை செய்கிறார்களா என்று மட்டும் கவனி என்றீர்கள். நீங்கள் சொன்னபடியே கவனிக்க ஆரம்பித்தபோதுதான் என் தவிப்பும் ஆரம்பமானது.

இருள் விலகுவதற்குள் அனைவரும் பதைபதைப்போடு ஓடிவந்துவிடுகிறார்கள். ஓய்வு என்பது மருந்துக்கும் கிடையாது. ஒரு கையில் ஏதேனும் கருவியைப் பிடித்துக்கொண்டு எங்கே மணி அடித்துவிடப் போகிறதே எனும் அச்சத்தோடு இன்னொரு கையால் அவசரமாக வாயில் எதையோ அள்ளிப்போட்டுக்கொண்டு ஓடுகிறார்கள். இரவு நெருங்கும்போது என் வயதுள்ள இளைஞர்கள்கூட முதியோர்களைப்போல் சுருங்கிப் போய்விடுவதைப் பார்த்தேன். அவர்கள் உடலில் பல நூற்றாண்டு கால களைப்பு தேங்கியிருந்ததைக் கண்டேன்.

கிட்டத்தட்ட உங்கள் வயதுகொண்ட ஒருவரைப் பார்த்தேன், அப்பா. மின்விசிறி தொடங்கி புகைப்போக்கிவரை எல்லாவற்றையும் சுத்தம் செய்பவர் அவர்தான். எண்ணெய்ப் பசையும் அழுக்கு ஆடையுமாக அவர் வளைய வருவார். முதுகு எப்போதும் குனிந்திருக்கும் என்பதால் அவர் முகத்தைக்கூட இதுவரை நான் பார்த்ததில்லை. கணக்குப் புத்தகத்தை நான் ஒருமுறை பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது, கொஞ்சம் நகருங்கள் ஐயா என்று முணுமுணுத்தபடி என் மேஜையின் மூலையில் படிந்திருந்த தூசியைத் துடைத்து சுத்தம் செய்துவிட்டு தள்ளாடியபடி நடந்து சென்றார் அவர். சில அடிகள் கடந்து சென்ற பிறகுதான் கவனித்தேன், பிய்ந்துபோன தன் காலணிகள் நழுவாமல் இருக்க ஒரு கயிறு போட்டு கால்களோடு அவற்றைப் பிணைத்திருந்தார்.

என்னால் இனியும் இங்கே இருக்க முடியாது அப்பா, என்னை விட்டுவிடுங்கள் என்று அன்று இரவே உங்களிடம் முறையிட்டேன். உனக்கு என்னதான் வேண்டும் எங்கெல்ஸ்? உன் பிரச்சினைதான் என்ன என்று நீங்கள் எரிச்சலடைந்தீர்கள். பதில் அளிக்க முடியாமல் திணறிய என்னைப் பெட்டி படுக்கையோடு லண்டனுக்கு அனுப்பிவைத்தீர்கள்.

நட்சத்திரம்போல் மின்னிக்கொண்டிருந்தது மான்சென்ஸ்டர். அகலமான வீதிகள். உயரமான கட்டிடங்கள். பகட்டான ஆடைகள் அணிந்த சீமான்களும் சீமாட்டிகளும் வீதிகளில் ஒய்யாரமாக நடைபோட்டுக்கொண்டிருந்தனர். நானும் அவர்களோடு சேர்ந்து அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தேன். பிரஷ்யாவில் இருந்ததைவிடப் பல மடங்கு அதிகமான பருத்தி ஆலைகள் இருபத்து நான்கு மணி நேரமும் துடிப்போடு இயங்கிக்கொண்டிருந்ததைக் கண்டேன். அப்படி என்றால் பிரஷ்யாவில் கண்டதைப் போன்ற வேதனையூட்டும் காட்சிகளை இங்கே நான் காண வேண்டியிருக்காது அல்லவா?

ஆனால், என் நினைப்பு பொய்த்துப் போனது. நான் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பை ஒட்டியுள்ள பாதை ஓரங்களில் குடும்பம் குடும்பமாக மக்கள் ஒண்டிக்கிடப்பதைப் பார்த்தேன். வானைத் தொடும் கட்டிடங்களுக்கு அருகில் அடுக்கடுக்காகக் குப்பை மேடுகள். அங்கே எந்நேரமும் நிரம்பி வழியும் குப்பை மலையில் குழந்தைகள் ஏறி கிளறிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது, என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவர்களின் பெற்றோர் யார், இவர்கள் ஏன் படிக்கவில்லை, இவர்களுக்கு வீடு இல்லையா என்று விசாரித்தேன். ஓ… அந்தக் குழந்தைகளா, அவர்களுக்கு யாருமில்லை என்று பதில் வந்தது.

அந்தக் குழந்தைகள் நாளை என்ன ஆவார்கள் என்று எனக்குத் தெரியும், அப்பா. இங்குள்ள ஏதேனும் ஓர் ஆலையின் பெரிய கதவு அவர்களுக்காகத் திறக்கும். இருள் அவர்களைக் கவ்விக்கொள்ளும். அதற்குப் பிறகு அவர்களால் இறுதிவரை வெளிச்சத்தைப் பார்க்க முடியாது. வாழ்நாள் முழுக்க வியர்வை சிந்தி உழைத்தாலும் கடைசிவரை ஒரு நல்ல ஆடையோ காலணியோகூட அவர்களால் வாங்க முடியாமல் போகும். மென்மையான அவர்களுடைய முதுகுகள் சில ஆண்டுகளில் வில்போல் வளைய ஆரம்பிக்கும்.

வானம் பொத்துக்கொண்டு மழை கொட்ட வேண்டும் என்றுகூட நான் கேட்கவில்லை. இந்த அளவுக்கு உடலையும் மனதையும் வருத்திக்கொண்டு உழைத்தும் ஏன் இவர்கள் வாழ்வில் ஒரு சிறு தூறல்கூட விழவில்லை? அதற்கான காரணத்தை நான் தேடத் தொடங்கியபோது கார்ல் மார்க்ஸின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. பிரச்சினை பிரஷ்யாவிலோ மான்செஸ்டரிலோ இல்லை, நம்மிடம்தான் என்றார் மார்க்ஸ். ‘அனைவருக்கும் சமமாகச் சென்று சேர வேண்டிய மழையை ஒருசிலர் தங்களுடைய வீட்டுக்குள் அடக்கி வைத்துக்கொண்டால் எப்படி உலகம் செழிக்கும், தோழர்?’

அப்பா, உங்களிடமிருந்தும் நீங்கள் எனக்குக் கொடுத்த பொறுப்புகளிடமிருந்தும் நமக்காக நீங்கள் சேமித்து வைத்த செல்வத்திடமிருந்தும் இன்றோடு விலகிக்கொள்கிறேன். உங்கள் கனவுகளை நான் தொடர முடியாது. எனக்கென்று ஒரு புதிய கனவு உதித்திருக்கிறது. இந்த உலகை அனைவருக்குமானதாக நான் மாற்றி அமைக்க விரும்புகிறேன். நானும் மார்க்ஸும் இணையும்போது, எங்கள் இருவரோடு தொழிலாளர்களும் கரம் சேர்த்துக்கொள்ளும்போது, கனவு எப்படி நிறைவேறாமல் போகும்?

(பிரெட்ரிக் எங்கெல்ஸ் – கார்ல் மார்க்ஸுடன் இணைந்து பொதுவுடைமை கொள்கைக்கு உருவம் கொடுத்தவர். தத்துவஞானி, சமூக விஞ்ஞானி, எழுத்தாளர், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தவர்.)

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்