‘‘ம
லர், பூங்காவுக்குப் போகலாம் வருகிறாயா?” என்று தாத்தா கேட்டு முடிப்பதற்குள், புத்தகத்தை மூடிவைத்துவிட்டு ஓடிவந்து தாத்தாவின் கையைப் பற்றிக்கொண்டாள் மலர். ‘‘என்ன மலர், கணக்கு போட்டுக்கொண்டிருந்தாயா?” என்று மெல்ல நடந்தபடியே கேட்டார் தாத்தா. ‘‘எப்படிச் சரியா கண்டுபிடிச்சீங்க தாத்தா!” என்று ஆச்சரியப்பட்டாள் மலர். கூப்பிட்ட உடனே ஓடிவரும்போதே தெரிந்தது என்றார் தாத்தா.
மலர் சிடுசிடுத்தாள். ‘‘போங்க தாத்தா, நிம்மதியா வெளியில் வரலாம்னு நினைச்சா நீங்க மறுபடியும் கணக்கு பூதத்தை நினைவுபடுத்தறீங்க. ஏன்தான் பள்ளிக்கூடத்தில் அதை நடத்தறாங்களோ? ஏன்தான் அது இந்த உலகத்தில் வந்ததோ?’’
சத்தம் போட்டுச் சிரித்தார் தாத்தா. ‘‘இத்தனை அலுப்பா உனக்கு? மலருக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்தது கணக்குதான், தெரியுமா?’
‘‘அதான் தெரியுமே, நீங்கதான் கணக்குப் பேராசிரியர்ர்ர்ர் ஆச்சே’’ என்று கிண்டலாக இழுத்தாள் மலர். ‘‘அது சரி, இன்னமும்கூட எப்படித் தாத்தா உங்களால குண்டு குண்டு கணக்கு புத்தகங்கள் எல்லாம் படிக்கமுடியுது? எனக்குதான் வேற வழியில்லை. உங்களை யாரு கேட்கப் போறாங்க? இதுல படிக்கிறது போதாதுன்னு அடிக்கடி பென்சிலில் பெரிசு பெரிசா கணக்கு போட்டுப் போட்டு பார்க்கறீங்க. எப்படிதான் முடியுதோ! என் கையில் மட்டும் அது கிடைச்சா...’’
அதற்குள் பூங்கா வந்துவிட்டதால் மலரிடம் இருந்து கணக்கு தப்பிவிட்டது. புங்க மரத்தடியில் இருந்த பலகையில் இருவரும் அமர்ந்துகொண்டனர்.
‘‘மலர், நீ பிறந்த மாதம் என்ன?’’
‘‘ஆகஸ்ட்.’’
‘‘சரி, இந்தப் பூங்காவில் ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?’
மலர் முறைத்தாள். ‘‘தாத்தா, எனக்கு இங்கே ஒருத்தரையும் தெரியாது. பிறந்த மாதம் எல்லாம் எப்படிக் கண்டுபிடிப்பது?’’
‘‘நான் உன் உயரம் இருக்கும்போது ஒரு நாள் என்னுடைய ஆசிரியர் வகுப்பில் ஒரு கேள்வி கேட்டார். ஒரு பெரிய அறை. அந்த அறைக்குள் நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் அனுமதிக்கலாம். ஆனால் அவர்களில் குறைந்தது இரண்டு பேருடைய பிறந்த மாதம் ஒன்றாக இருக்கவேண்டும். அப்படியென்றால் எத்தனை பேரை நீங்கள் உள்ளே அனுமதிப்பீர்கள்?’’
‘‘அதெப்படி தாத்தா சொல்லமுடியும்? நீங்கள் என்னிடம் கேட்டதால் நான் ஆகஸ்ட் என்று சொன்னேன். இங்கே இருக்கும் ஒவ்வொருவரையும் போய் கேட்டால்தான் வேறு யார் ஆகஸ்ட் மாதம் பிறந்தார்கள் என்று கண்டுபிடிக்கமுடியும். அவர்கள் சொல்லாமல் நம்மால் மேஜிக் எல்லாம் செய்து கண்டுபிடிக்கவேமுடியாதே?’’
‘‘மேஜிக் இல்லாமலே கண்டுபிடிக்கலாம். சரி, ஒரு பேச்சுக்கு, ஆயிரம் பேரை அந்த அறைக்குள் அனுப்புகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் இருவருடைய பிறந்த மாதம் ஒன்றாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா?’’
‘‘இருக்கிறது.’
‘‘நூறு பேரை?’’
‘‘இருக்கிறது.’’
‘‘ஐம்பது பேர்?’’
மலர் யோசித்தாள். ‘‘என்னால் யோசிக்க முடியவில்லை. அந்த ஐம்பது பேரும் வேறு வேறு மாதங்களில் பிறந்திருக்கலாம் அல்லவா?’’
‘‘அதெப்படி? மொத்தம் எத்தனை மாதங்கள் இருக்கின்றன?’’
‘‘பன்னிரண்டு.’’
‘‘அப்படியானால் அவர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பன்னிரண்டு மாதங்களில் ஒன்றில்தான் பிறந்திருப்பார்கள் இல்லையா?’’
‘‘அட, ஆமாம். அப்போது பன்னிரண்டு பேரை அறைக்குள் அனுப்பினால் போதுமா?’’
‘‘இல்லை பன்னிரண்டு பேரும் 12 மாதங்களில் பிறந்திருக்கலாம்.’’
”ஆமாம், புரிந்த மாதிரி இருந்தது. இப்போது குழப்புதே!’’
Kanakku_Bhootham_A.tifதாத்தா புன்னகை செய்தார். ‘‘நன்றாக யோசி. இரண்டு பேரை உள்ளே அனுப்பலாம். அந்த இரண்டு பேருமே ஒரே மாதத்தில் பிறந்தவர்களாக இருக்கலாம். ஆனால் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது அல்லவா? மூன்று அல்லது நான்கு பேரை அனுப்பலாம். ஆனால் அப்போதும் உறுதியாகச் சொல்ல முடியாது. நீ சொல்வதைப் போல் இந்த ஊரில் உள்ள எல்லோரையும் அனுப்பினால் நிச்சயம் பலருடைய பிறந்த மாதம் ஒன்றாக இருக்கும். ஆனால் அப்படிச் செய்வதில் எந்த சுவாரஸ்யமும் இல்லையே. குறைந்தபட்சம் எத்தனை பேர் என்பதுதானே கேள்வி? இப்போது யோசித்துப் பார்.’’
மலர் பட்டென்று சொன்னாள். ‘‘சரியான விடை 13.’’
‘‘எப்படிச் சொல்கிறாய்?’’
‘‘ஜனவரி முதல் டிசம்பர்வரை 12 மாதங்களில் பிறந்தவர்கள் 12 பேர். அவர்களை முதலில் அறைக்குள் அனுப்பிவிடவேண்டும். பிறகு இன்னொருவரை அனுப்பினால் அவர் அந்த 12 மாதங்களில் ஒன்றில் பிறந்தவராகத்தான் இருக்கவேண்டும் இல்லையா?’’
சபாஷ் என்று மலரின் தோளில் தட்டினார் தாத்தா. ‘‘ சரி, அப்போது ஒரே கிழமையில் பிறந்த இருவரை அனுமதிக்க குறைந்தபட்சம் எத்தனை பேர் தேவை?’’
‘‘திங்கள் முதல் ஞாயிறுவரை பிறந்தவர்கள் ஏழு பேர். கூடுதலாக ஒருவரை அனுப்பினால் போதும்.’’
‘‘பிரமாதம். பிறந்த தேதியும் மாதமும் ஒன்றாக இருக்கவேண்டுமானால்? அதாவது 15 ஆகஸ்டில் பிறந்த இருவரைக் கண்டுபிடிக்க என்ன செய்வது?’’
இந்த முறை மலர் நிதானமாக யோசித்துவிட்டே சொன்னாள்: ‘‘365 நாள். அதனால் 365 பேர். பிறகு இன்னொருவர் சரியா?’’
‘‘என்னைவிட நீ பெரிய கணக்குப் புலியாக இருப்பாய் போலிருக்கிறதே மலர்!’’ என்று மகிழ்ச்சியோடு மலரின் கையைப் பிடித்துக் குலுக்கினார் தாத்தா.
‘‘தாத்தா, 3 அல்லது 4 பேரின் பிறந்த மாதம் ஒன்றாக இருக்கவேண்டுமானால் என்ன செய்வது?’’
‘‘வீட்டுக்கு வந்து நீதான் கணக்கு போட்டுப் பார்த்துச் சொல்லவேண்டும்.’’
‘‘ஐயய்யோ என்னையும் கணக்கு போட வச்சிட்டீங்களே தாத்தா! பெரிய தப்பாச்சே!’’
தாத்தா சிரித்தார். ‘‘கணக்கு பூதத்துக்கு உன்னை ரொம்பப் பிடித்துவிட்டது. இனி அது உன்னை விடப்போவதில்லை.’’
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago