இ
ரு கைகளையும் வீசியபடி அந்த மனிதர் நடந்துகொண்டிருந்தார். ஆனால் இதில் என்ன விநோதம் இருக்கமுடியும்? சாலையில் நடந்து போகும் எல்லோருமே பெரும்பாலும் கைகளை அப்படியும் இப்படியும் வீசியபடி நடப்பது வழக்கம்தானே? இவரை மட்டும் ஏன் நான் திகைப்போடு பார்த்துக்கொண்டு நிற்கிறேன்?
எஸ். வையாபுரிப் பிள்ளைக்குப் புரியவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு அவருக்குத் தன்மீதே கோபம் வந்தது. பாவம், தன் பாட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும் ஒருவரை இப்படியா உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது? ஏய், ஏன் அப்படிப் பார்க்கிறாய், எனக்கென்ன இரண்டு தலையா இருக்கிறது என்று அவர் கோபித்துக்கொண்டால் என்ன செய்வது?
வையாபுரிப் பிள்ளை திருவனந்தபுரத்தில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். வக்கீல் ஐயா, வக்கீல் ஐயா என்று ஊரில் எல்லோரும் மதிப்பும் மரியாதையும் கொடுத்தார்கள். ஆனால் வையாபுரியின் கனவு வேறாக இருந்தது. நீதிமன்றத்துக்குச் சென்று கட்டுக் கட்டாக ஆவணங்களைப் படித்து, குறிப்புகள் எடுத்து, கனம் கோர்ட்டார் அவர்களே என்று தினம் தினம் தொண்டைக் கிழிய வாதாடுவதில் என்ன பெரிய இன்பம் இருந்துவிடமுடியும்?
அப்படியானால் வேறு என்ன செய்யப் போகிறாய் என்று நண்பர்கள் கேட்டார்கள். நான் தமிழுக்குக் கைகட்டி சேவகம் செய்ய விரும்புகிறேன் என்றார் அவர். திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் ஆழ்ந்து கற்க விரும்புகிறேன். காலை முதல் இரவுவரை, இல்லை இல்லை இரவுகூட கண்விழித்து தமிழ் நூல்களை வாசிக்க விரும்புகிறேன். உ.வே. சாமிநாதய்யரைப்போல் பழைய ஓலைச்சுவடிகளை எல்லாம் தேடப் போகிறேன். வ.உ. சிதம்பரம் பிள்ளைபோல் தேச விடுதலைக்காகப் போராடப் போகிறேன். பாரதியாரின் கவிதைகளை நாள் முழுக்க ரசித்து ரசித்துப் பாடப் போகிறேன்.
கனவு காண்பதை நிறுத்திவிட்டு மீண்டும் அந்த மனிதரைப் பார்த்தார். நன்றாக முறுக்கிவிடப்பட்ட மீசை. பளபளக்கும் கண்கள். துள்ளலான நடை. ஒரு வேட்டி. மேலே ஒரு கோட்டு. முண்டாசு மட்டும் இருந்தால் அப்படியே பாரதி போலவே இருப்பார் அல்லவா?
திடுக்கிட்டார் வையாபுரிப் பிள்ளை. ஒருவேளை இவர் நிஜமாகவே பாரதியாக இருந்துவிட்டால்? ஆனால் பாரதி இருப்பது சென்னையில் அல்லவா? எதற்கும் ஒருமுறை கேட்டுப் பார்த்துவிடலாமா?
துணிச்சலை வரவழைத்துக்கொண்டு நெருங்கினார் வையாபுரிப் பிள்ளை. ‘‘ஐயா, நீங்கள்...?” சட்டென்று நின்ற அந்த மனிதர் வையாபுரிப் பிள்ளையின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தபடி சொன்னார்: ‘‘என் பெயர் சுப்பிரமணிய பாரதி.”
அவ்வளவுதான், தலை கால் புரியவில்லை வையாபுரிப் பிள்ளைக்கு. தயவு செய்து உள்ளே வாருங்கள் என்று மகிழ்ச்சியுடன் பாரதியை உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்தார்.
அது ஒரு சிறிய அறை. அங்கே அமர்ந்துதான் கவிதை, இலக்கியம் என்றெல்லாம் தன் நண்பர்களுடன் பேசி பொழுதைக் கழிப்பது அவர் வழக்கம்.
‘‘உங்களுக்குத் தாகமாக இருக்கும். ஏதாவது பழச்சாறு கொண்டுவரச் சொல்லட்டுமா?”
‘‘அதெல்லாம் வேண்டாம். தண்ணீர் இருந்தால் கொடுங்கள் போதும்.”
உடனே வாசலுக்கு விரைந்துவந்து தன் உதவியாளரிடம் தண்ணீர் கொண்டுவரச் சொல்லிவிட்டு, ஓடோடி உள்ளே சென்றார் வையாபுரிப் பிள்ளை. திடீரென்று அவருக்கு ஒரு சந்தேகம். பாரதியிடம் மெல்லிய குரலில் கேட்டார்.
‘‘ஐயா, இந்தப் பகுதியில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இங்கு நீங்கள் தண்ணீர் அருந்துவீர்களா?”
அப்படியே எரித்துவிடுவதைப் போல் அவரை முறைத்தார் பாரதி. ‘‘ஓய், என் கவிதைகளை நீ படித்ததில்லையா? இப்படி என்னைக் கேட்பதற்கு உனக்கு என்ன தண்டனை தரவேண்டும் தெரியுமா?”
வையாபுரிப் பிள்ளையின் உடல் ஒருநிமிடம் நடுங்கிவிட்டது. ‘‘உங்கள் கவிதைகளைத் தெரியும். ஆனால் உங்களைப் பற்றித் தெரியாது என்பதால் கேட்டுவிட்டேன். நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கிறேன்.”
‘‘நான் வேறு என் கவிதை வேறல்ல, உட்கார்” என்று சைகை காட்டியபடி, மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டு சத்தம்போட்டுப் பாட ஆரம்பித்தார் பாரதி.
‘‘ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ?”
ஒரு மணி நேரம் பல்வேறு பாடல்களைப் பாடி, தண்ணீரை வாங்கி அருந்திய பிறகே பாரதியின் கோபம் மறைந்தது. உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த வையாபுரிப் பிள்ளையின் தோள்மீது கைபோட்டபடி வெளியில் வந்தார் பாரதி. இப்போது அவர் முகத்தில் அமைதி மலர்ந்திருந்தது.
‘‘சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு
தன்னில் செழித்திடும் வையம்.”
‘‘கிளம்பவா?” விறுவிறுவென்று நடந்து மறைந்தார் பாரதி. கவிதை வேறு, கவிஞன் வேறு அல்ல என்கிறார் பாரதி. அப்படியானால் என் கனவு வேறு, நான் வேறு என்று இருக்க முடியாதல்லவா? போதும் இந்த வழக்கறிஞர் தொழில். இனி தமிழுக்காக மட்டுமே நான் வாழ்வேன். யார் என்ன நினைத்தாலும் கவலை இல்லை.
‘‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!”
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago