ஓ
ர் அதிகாரி கரகரப்பான குரலில் அறிவித்தார். ‘‘என் அருமை மக்களே, அமைதி, அமைதி. நீங்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருந்த ரயில் வண்டி இதோ வந்துவிட்டது. இன்னும் சில நிமிடங்களில் ரயில் லிவர்பூலில் இருந்து கிளம்பி மான்சென்ஸ்டருக்குப் போகப் போகிறது. உங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத ஓர் அனுபவம் உங்களுக்குக் கிடைக்கப்போகிறது. மக்களே, அவசரப்படாமல் பொறுமையாக வாருங்கள். வண்டியில் ஏறுங்கள்!’’
இது நடந்தது 15 செப்டம்பர் 1830 அன்று. இடம், இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் ரயில் நிலையம். வரலாற்றின் முதல் ரயில் பயணம் அல்லவா? மக்கள் அடித்துப் பிடித்து ஓடிவந்து ஏறுவார்கள் என்று அந்த அதிகாரி எதிர்பார்த்தார். ம்ஹூம், ஒருவரும் இருந்த இடத்தைவிட்டு நகரவேயில்லை. ஏன், என்ன ஆனது?
கூட்டத்தில் இருந்து ஒரு முதியவர் முன்னால் வந்தார். ‘‘என்ன சார் இது? இந்தப் பொம்மைதான் நீங்கள் சொன்ன ரயில் வண்டியா? எங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கிறது? இதற்காகத்தான் நாங்கள் காலை முதல் நின்றுகொண்டிருந்தோமா?”
‘‘சரி, இதுதான் ரயில் வண்டி என்கிறீர்கள். ஏற்றுக்கொள்கிறேன். குதிரைகள் எங்கே?” என்றார் இன்னொருவர். ரயில்வே அதிகாரி விளக்கினார். ‘‘ஐயா, இது இன்ஜினால் இயக்கப்படும் வண்டி. இதற்கு குதிரைகள் தேவைப்படாது. ஏறி அமர்ந்துகொள்ளுங்கள், உங்களுக்கே புரியும்.’’
ஹாஹா என்று சிரித்தார் கேள்வி கேட்டவர். ‘‘என்னது, குதிரைகள் இல்லாமல் ஒரு வண்டி வேகமாகப் போகுமா? நீங்கள் என்ன அதிகாரியா இல்லை மந்திரவாதியா?”
அதற்குள் சிலர் சத்தம் போட்டு அலற ஆரம்பித்துவிட்டனர். ‘‘ஐயய்யோ, ஏதேதோ இயந்திரங்கள் எல்லாம் இதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. கிட்டே போனால் என்னென்னவோ சத்தம் வருகிறது. நான் ஏறிய பிறகு என்னை விழுங்கிவிட்டால் என்ன செய்வது? நான் மாட்டேன். எனக்கு ரயிலும் வேண்டாம், குயிலும் வேண்டாம். எந்த ஊருக்குப் போவதாக இருந்தாலும் நான் குதிரை வண்டியிலேயே போய்க்கொள்கிறேன்.”
அந்த ஊரிலேயே நன்றாகப் படித்த ஒருவர் தெளிவான குரலில் பேச ஆரம்பித்தார். ‘‘என் அருமை மக்களே, இந்த வண்டியை ஒரு இயந்திரம் ஓட்டப் போகிறது என்று சொல்கிறார்கள். இயந்திரத்துக்கு நம் மொழி புரியாது. நான் மான்செஸ்டர் போகவேண்டும் என்று அந்த இயந்திரத்திடம் எப்படிச் சொல்வது? அது எப்படி என்னைச் சரியாக அங்கே போய் இறக்கிவிடும்? நடுக்காட்டில் எங்காவது நிறுத்தி தகராறு செய்தால் யாரிடம் போய் உதவி கேட்பது?”
கோட், சூட் போட்ட ஒருவர் விறுவிறுவென்று துணிச்சலுடன் ரயில் வண்டிக்குள் பாய்ந்து ஏறினார். போன வேகத்திலேயே புலி ஒன்று துரத்தி வந்ததைப்போல் மூச்சு வாங்கியபடி இறங்கி ஓட ஆரம்பித்துவிட்டார். ‘‘இந்த ரயில் பாட்டுக்கு பேய் வேகத்தில் போனால் என் கையும் காலும் தனியே கழண்டு வந்துவிடாதா? என் தலை வெடித்துவிடாதா? என் இதயத்துக்கு என்னாகும்? நவீனமும் வேண்டாம், ரயிலும் வேண்டாம். நான் பொறுமையாக நடந்தே போய்க்கொள்கிறேன்.”
அதிகாரி மீண்டும் விளக்கினார். ‘‘என் அருமை மக்களே, இன்ஜின் இருந்தாலும், இந்த ரயிலை மனிதர்தான் ஓட்டிக்கொண்டு போவார். யாரும் பயப்படவேண்டாம். ரயில் யாரையும் பிடித்துத் தள்ளாது. இது பூதம் கிடையாது. கொஞ்சம் சத்தம் போடும், ஆனாலும் அமைதியான நல்ல வாகனம். குதிரைகூட கொஞ்சம் சத்தம் போடும், அது என்ன உங்களைப் பிடித்துக் கீழே தள்ளவா செய்கிறது? தைரியமாக ஏறுங்கள். ரயிலில் ஏறினால் உங்கள் இதயம், மூளை, கை, கால் எல்லாம் நலமாக இருக்கும். அதற்கு நான் உத்தரவாதம்.”
‘‘சரி, நான் சொல்லும் இடத்தில் இது இறக்கிவிடுமா?” என்றார் ஒருவர். இறக்காது. வழியில் பல ரயில் நிலையங்கள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒன்றில் இறங்கிக்கொள்ளலாம் என்றார் அதிகாரி. ‘‘அப்படியென்றால் எனக்கு இது சரிவராது. என் குதிரை நான் சொல்லும் இடத்தில் சரியாக நிற்கும். நான் ஏன் இதில் ஏறி ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் இறங்கிக்கொள்ளவேண்டும்?”
இந்த ரயில் என் வீட்டுக்கு வந்து என்னை ஏற்றிக்கொள்ளுமா என்றார் ஒரு பணக்காரர். முடியாது, நீங்கள் இங்கே வந்துதான் ஏறவேண்டும் என்றதும் அவர் முகம் சிவந்துவிட்டது. ‘‘யாரைப் பார்த்து என்ன சொல்கிறாய்? போயும் போயும் ஒரு இயந்திரத்துக்காக நான் வீட்டிலிருந்து இங்கே வரவேண்டுமா? என்னைவிட இந்த ரயில் பெரிய ஆளா?”
அவரைச் சமாதானப்படுத்துவதற்குள் மேலும் நூறு கேள்விகள் அதிகாரியைச் சூழ்ந்துகொண்டன. இந்த ரயிலில் பெண்கள் ஏறலாமா? வயதானவர்கள் ஏறலாமா? எனக்கு இருமல் இருக்கிறது, ரயில் வண்டியில் ஏறினால் இருமல் அதிகமாகுமா? நான் ஏறும்போதே வண்டி வேகமாக ஓட ஆரம்பித்துவிட்டால் நான் உள்ளே விழுவேனா அல்லது வெளியில் விழுவேனா? குழந்தைகளை அழைத்து வரலாமா? வண்டி வேகமாக ஓடினால் காற்று அடிக்குமா, குளிருமா? ரயிலில் ஏறினால் அழுக்காகுமா? குளித்துவிட்டு இதில் பயணம் செய்யலாமா? ரயிலில் சாப்பிடலாமா? தண்ணீர் எடுத்துவந்தால் ஆடி ஆடி கொட்டிவிடுமா? எதிரில் இன்னொரு ரயில் வந்தால் மோதிக்கொள்ளுமா?
எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்த பிறகு தயங்கித் தயங்கி நான்கு பேர் போனால் போகட்டும் என்று ஏறிக்கொண்டார்கள். வரலாற்றின் முதல் ரயில் பயணம் ஆரம்பமானது. கடகடவென்று சத்தமிட்டபடி ரயில் வேகம் எடுத்தபோது எல்லோரும் கண்களை மூடிக்கொண்டார்கள். உள்ளே அமர்ந்திருந்த ஒரு சிறுமி கவலையோடு அம்மாவிடம் கேட்டாள்: ‘‘அம்மா, இந்த ரயிலும் குதிரை மாதிரி கொள்ளு சாப்பிடுமா?”
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago