கதை: குளத்தைத் தூர்வாரலாமா?

By கன்னிக்கோவில் ராஜா

“எல்லோரும் வாங்க, குளத்தைத் தூர்வாரலாம்” என்று அழைத்தபடி குளத்தை நோக்கிச் சென்றது டீனா குரங்கு.

ஆனால், யாருமே அது பேச்சைக் கேட்கவில்லை.

அந்தக் காட்டில் சில ஆண்டுகளாக மழை இல்லை. அதனால் குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காமல் விலங்குகள் தாகத்தோடு தவித்துவந்தன. காட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்த ஆறும் வற்றிவிட்டது. ஒரே ஒரு குளத்தில் மட்டும் கொஞ்சம் நீர் இருந்தது. அதுதான் தாகத்தைத் தீர்த்துக்கொண்டிருந்தது. அதுவும் இப்போது வற்றத் தொடங்கிவிட்டது.

குளத்தைத் தூர்வாரி பராமரித்தால், மழை வரும்போது பயன்படும் என்ற யோசனையைச் சொன்னது டீனா. ஆனால், யாருமே ஒத்துழைக்கவில்லை. பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் குடித்துவரும் யானைக் கூட்டத்திடம் உதவி கேட்கச் சென்றது டீனா.

“யானைகளே, உங்கள் உதவி இருந்தால் அந்தக் குளத்தைத் தூர்வாரி விடலாம். நம் குடிநீர்த் தேவையைத் தீர்க்கப் போவது அந்தக் குளம்தானே?” என்றது டீனா.

“யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கு எதுக்கு? நாங்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் சென்று திரும்பியிருக்கிறோம். மிகவும் களைப்பாக இருக்கிறது. அதனால் உதவி செய்ய இயலாது” என்றது தலைவன் யானை.

“எனக்காக இல்லை... நமக்காக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உதவினால் கூடப் போதும்” என்றது டீனா.

“எங்களால் எதுவுமே செய்ய முடியாது” என்று சொல்லிவிட்டு, யானைகள் கிளம்பின.

டீனா வருத்தத்தோடு அமர்ந்திருந்தது. அங்கே வந்த கரடி, “குளத்தைத் நம் நண்பர்களை உதவிக்கு அழைத்து தொந்தரவு செய்வதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா? எதுக்கு உனக்கு இந்த வேலை?” என்று கேட்டது.

“இது தொந்தரவு இல்லை. நாளை இந்தக் குளமும் வற்றிவிட்டால் தண்ணீருக்கு என்ன செய்வது?” என்று கேட்டது டீனா.

“எங்களால் எந்த உதவியும் செய்ய முடியாது எல்லோருக்கும் என்ன நடக்கிறதோ அது எங்களுக்கும் நடக்கட்டும்” என்று ஒதுங்கிக்கொண்டது கரடி.

இப்படிக் காடு முழுவதும் புலி, சிங்கம், மான், நரி என்று பலரிடமும் உதவி கேட்டது டீனா. ஆனால், யாரிடமும் உதவி கிடைக்கவில்லை.

‘நான் என்ன எனக்கா உதவி கேட்கிறேன்? எல்லோரின் நலன் கருதிதானே உதவி கேட்கிறேன். ஏன் யாருக்கும் புரியவில்லை?’ என்று யோசித்துக்கொண்டே குளத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தது டீனா.

கொஞ்ச தூரம் சென்றதும், யாரோ அழைப்பதுபோல் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தது டீனா. யாரும் இல்லை. மறுபடியும் நடக்க ஆரம்பித்தது. இப்போது மிகத் தெளிவாக டீனா என்று குரல் கேட்டது. மறுபடியும் திரும்பிப் பார்த்தது, யாருமே இல்லை.

“கீழே பார்.”

பெரிய எலி ஒன்று நின்றுகொண்டிருந்தது. “எதுக்கு என்னைக் கூப்பிட்டே?” என்று கேட்டது டீனா.

“நீ அந்தக் குளத்தை தூர்வார ஆட்களைத் தேடிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். உனக்கு உதவி செய்ய விரும்புகிறேன்” என்றது எலி.

எலி சொன்னதைக் கேட்டதும், சிரித்தது டீனா. “பெரிய விலங்குகளே உதவிக்கு வரவில்லை. உன்னால் என்ன செய்ய முடியும்? போய் உன் வேலையைப் பார்” என்றது.

எலியும் சிரித்தது.

“என்ன சிரிப்பு?”

“சிரிக்காமல் என்ன செய்வது? உதவிக்கு ஆட்கள் வேண்டும் என்று அலைகிறாய். உதவி செய்கிறேன் என்று சொன்னால் உனக்குச் சிரிப்பு வருகிறது. அதான் சிரித்தேன்” என்றது எலி.

“என்னை மன்னித்துவிடு. நான் உன்னைக் கிண்டல் செய்தது தவறுதான். சரி வா, நாம் இருவரும் இணைந்தே குளத்தைத் தூர்வாரலாம்” என்றது டீனா.

“இரு… இரு... என் நண்பர்களையும் அழைக்கிறேன். அவர்களும் உதவி செய்யக் காத்திருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு, தன் பற்களால் சத்தத்தை எழுப்பியது எலி. சில நிமிடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிகள் ஓடிவந்தன.

டீனாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. வந்தவுடன் எலிகள் வேலையில் இறங்கின. குளத்தைக் குடைந்து குடைந்து பெரும் பள்ளத்தை ஏற்படுத்தின. அந்த மண்ணை எடுத்து, கரையில் கொட்டியது டீனா.

ஆறு மணி நேர வேலைக்குப் பிறகு, அந்தக் குளத்தின் மையத்தில் இருந்து நீர் சுரக்க ஆரம்பித்தது.

“எலிகளே, கரைக்கு ஓடி வாங்க. தண்ணீர் சுரக்க ஆரம்பித்துவிட்டது” என்று உற்சாகக் குரல் கொடுத்தது டீனா.

எலிகளும் மகிழ்ச்சியோடு கரையை நோக்கி வேகமாக ஓடிவந்தன.

“உங்களின் உதவியை என்றும் மறக்க மாட்டேன். பிறருக்காக உதவி செய்யும் பெரிய மனம் படைத்த உங்களுக்கு இந்தக் காடே நன்றிக்கடன் பட்டிருக்கிறது. மிகவும் களைப்பாக இருப்பீர்கள். என் வீட்டுக்கு வாருங்கள். பழங்களும் பருப்புகளும் தருகிறேன். நாளை காலை வந்து பார்த்தால் தண்ணீர் இன்னும் அதிகமாக ஊறியிருக்கும்” என்றது டீனா.

எலிகளும் மகிழ்ச்சியோடு டீனா வீட்டுக்குச் சென்றன. வயிறு நிறையச் சாப்பிட்டு, நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பின.

மறுநாள் காலை டீனாவும் எலிகளும் குளத்துக்கு வந்தன.

“என்ன அற்புதம்! மழை வராமலே குளத்தின் கால் பகுதிக்குத் தண்ணீர் வந்துவிட்டதே!” என்று டீனா மகிழ்ச்சியோடு கத்தியது.

விஷயத்தைக் கேள்விப்பட்டு காட்டு விலங்குகள் குளத்தை நோக்கி ஓடிவந்தன.

சிங்கராஜா மெல்லிய குரலில், “டீனா, எங்களை மன்னித்துவிடு. நீ சொன்னதை நாங்கள் யாருமே கேட்கவில்லை. ஆனால், நீயும் எலிகளும் இணைந்து சாதித்துக் காட்டிவிட்டீர்கள். இனி எங்களுக்கு இந்தக் குளத்தில் நீர் அருந்த உரிமை கிடையாது” என்றது.

“மன்னா, இது காட்டின் குளம், இதில் நீர் அருந்த அனைவருக்கும் உரிமை உண்டு. இதில் பெரும் அளவில் உழைத்த அந்த எலிகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவை மட்டும் இல்லை என்றால், நான் ஒருத்தியாக என்ன செய்திருக்க முடியும்?” என்றது டீனா.

“காட்டு விலங்குகளின் தாகத்தைத் தீர்க்க உதவிய உங்கள் அனைவருக்கும் எங்களின் பாராட்டுகள்” என்றது சிங்கராஜா.

அனைத்து விலங்குகளும் டீனாவுக்கும் எலிகளுக்கும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தன. சிலரின் முயற்சியால் பலருக்குப் பலன் கிடைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்