முன்பொரு காலத்தில் ஆப்பிரிக்காவில் கானா என்னும் இடத்தில் சிலந்தி ஒன்று வாழ்ந்துவந்தது. அதற்கு அனான்சி என்று பெயர். ஆயிரக்கணக்கான விலங்குகள் இருக்கும் ஒரு காட்டில் அனான்சியை எப்படிக் கண்டுபிடிப்பது என்று திகைக்கவே வேண்டாம். இருப்பதிலேயே பருத்த, கொழுத்த சிலந்தி அது ஒன்றுதான்.
ஊர் உலகில் யார் என்ன சமைத்தாலும் முதல் ஆளாகப் போய் அனான்சி நின்றுவிடும். எல்லோருக்கும் அனான்சியைத் தெரியும் என்பதால் தரமாட்டேன் என்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள். மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு அம்மா, அப்பா என்று முனகியபடி நகர்ந்து நகர்ந்து வீடு வந்து சேரும்.
வந்து சேர்ந்தால், பாவம் குழந்தை என்று தட்டைக் கொண்டுவந்து வைத்து வீட்டிலும் விருந்து போடுவார்கள். வீடும் காடும் போட்டிப் போட்டுக்கொண்டு செல்லம் கொடுத்தால் அந்த வயிறுதான் என்னாகும்?
ஒரு நாள் முயல் வீட்டிலிருந்து கமகமவென்று வந்த வாசனையை மோப்பம் பிடித்து உள்ளே சென்றுவிட்டது அனான்சி. “ஓ, அனான்சியா வா, வா. இப்பாதுதான் கீரை கொதித்துக்கொண்டிருக்கிறது. கொஞ்ச நேரம் காத்திரு” என்றது முயல்.
இதைவிட வேறு வேலை என்ன என்று வெளியில் வந்து காற்றாட உட்கார்ந்த நேரம் பார்த்து, இன்னொரு வாசனை. அட இது பீன்ஸ் அல்லவா? குரங்கு வீட்டிலிருந்துதானே இது வருகிறது? போய்ப் பார்க்கலாமா? ஆனால், அதற்குள் கீரை காலியாகிவிட்டால்?
அனான்சிக்கு ஒரு யோசனை தோன்றியது. சட்டென்று ஓர் இழையை உருவாக்கி, ஒரு முனையை முயலின் வீட்டுத் திண்ணையில் கட்டிவிட்டு, இன்னொரு முனையைத் தன் காலில் மாட்டிக்கொண்டது.
“முயலண்ணா, நான் வெளியில் போய்விட்டு வருகிறேன். கீரை கொதித்ததும் இந்த இழையைப் பிடித்து ஆட்டு. நான் ஓடிவந்துவிடுகிறேன்” என்றது அனான்சி. முயல் ஒப்புக்கொண்டது.
ஆனால், குரங்கு வீட்டிலும் பீன்ஸ் வேகவில்லை. அந்த நேரம் பார்த்து பன்றி வீட்டிலிருந்து கேரட் வாசனை வர வேண்டுமா? இன்னோர் இழையைப் பின்னி குரங்கு வீட்டைச் சுற்றிக் கட்டிவிட்டு, பீன்ஸ் வெந்ததும் இந்த இழையைப் பிடித்து உலுக்கு என்று சொல்லி, அந்த இழையைத் தன் இன்னொரு காலில் கட்டிக்கொண்டு பன்றி வீட்டுக்குப் பறந்தது அனான்சி. கேரட் முக்கால்வாசி வெந்துவிட்டது, ஐந்தே நிமிடம் என்றது பன்றி. இன்னொரு கால், இன்னோர் இழை.
அவ்வளவுதான், திசைக்கொரு வாசம் கிளம்பி வந்து அனான்சியின் மூக்கைப் பதம் பார்க்க ஆரம்பித்துவிட்டது. ஒரு பக்கம் முட்டைகோஸ், இன்னொரு பக்கம் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அந்தப் பக்கம் அரிசி, இந்தப் பக்கம் பால்.
அங்கும் இங்கும் தாவிச் சென்று தனது எட்டுக் கால்களிலும் எட்டு இழைகளைக் கட்டிக்கொண்டு (நல்லவேளை இந்த மனிதர்களைப்போல் இரண்டு கால்கள் இருந்தால் என்ன ஆகியிருக்கும்?) குளத்துக்கு அருகில் வந்து அமர்ந்துகொண்டது அனான்சி.
சட்டென்று இடது பக்கத்திலிருந்த நான்கு கால்களில் ஒன்றை யாரோ இழுத்தார்கள். ஆ, கீரை கொதித்துவிட்டது என்று அனான்சி துள்ளுவதற்குள் வலது பக்கத்திலிருந்து ஓர் இழு. ஓ, இது பீன்ஸ் கால் அல்லவா? யோசித்து முடிப்பதற்குள் முட்டைகோஸ் கால் அதிர ஆரம்பித்துவிட்டது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கும் கேரட்டும் ஒரே நேரத்திலா வெந்து முடிக்க வேண்டும்? எட்டுப் பேர் எட்டுத் திசைகளிலிருந்து போட்டிப்போட்டு இழுத்தால் என்னாகும்? அனான்சியின் குண்டு குண்டு கால்கள் மெலிந்து மெலிந்து குச்சியாகிவிட்டன.
போதாக்குறைக்கு அனான்சி குளத்திலும் விழுந்துவிட்டது. சரி, அனான்சி வேறு எங்கோ சாப்பிட்டுவிட்டது போலிருக்கிறது என்று எட்டுப் பேரும் ஒரே நேரத்தில் இழையைக் கைவிட்டுவிட, பாவம் அன்று முழுக்க அனான்சி பட்டினிதான்!
இப்படி அனான்சியைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்கக் கதைகள் உள்ளன. இந்தக் கதைகள் எல்லாம் எங்கிருந்து வந்தன என்று நினைத்தீர்கள்? அனான்சியிடமிருந்துதான். ஒரே நேரத்தில் தனது எட்டு கால்களால் எட்டுக் கதை இழைகளை அனான்சியால் உருவாக்க முடியும்.
பிறகு அந்த எட்டுக் கதைகளையும் இணைத்து மேலும் எட்டுக் கதைகள். முதல் கதையையும் பதினைந்தாவது கதையையும் இழைத்துக் கொஞ்சம் அங்கே தட்டி இங்கே தட்டினால் இன்னொரு புதிய கதை. சாப்பிட்ட நேரம் போக இப்படி அனான்சி தன்னந்தனியாக ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு இழை இழையாக உருவாக்கிய கதைகள் எத்தனை இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஆயிரமாயிரம்.
மெல்லிய இழையல்லவா? காற்றில் அசைந்து அசைந்து நகர்ந்து நகர்ந்து ஆப்பிரிக்காவைவிட்டு வெளியேறி உலகம் முழுக்க அனான்சியின் கதைகள் பரவிவிட்டன.
சில கதைகளில் அனான்சி மனிதனாக வலம் வருகிறார். தனது புத்திசாலித்தனத்தையும் தந்திரத்தையும் பயன்படுத்தி ஆபத்துகளிலிருந்து தப்பிக்கிறார். கெட்டவர்களோடு சண்டையிடுகிறார்.
ஆனால் நீயே சில நேரம் கெட்டவனாக மாறிவிடுகிறாயே அனான்சி என்றால், சிரிக்கிறார். ‘இந்த உலகமே நான் எழுதிய கதைதான். நான்தான் ஆப்பிரிக்கா. நான்தான் காடு. நான் ஒரு சிலந்தி. அதை விழுங்கும் பூச்சியும் நானே.
நானே பாம்பு, நானே யானை. நீங்கள் பார்க்கும் எல்லாவற்றிலும் என் இழைகள் உள்ளன. அவ்வளவு ஏன், நீங்களே நான் உருவாக்கிய கதையில் ஒரு பாத்திரம்தான். நீங்கள் இதுவரை வாசித்தவை, இனிமேல் வாசிக்கப் போகிறவை அனைத்துமே இந்த அனான்சி பின்னிய கதைகள்தாம்.’
எல்லோருக்கும் கதைகள் பிடிக்கும் என்பதால்தான் எல்லோரும் அனான்சிக்குச் செல்லம் கொடுக்கிறார்களா? இங்கே வா, என்னிடம் வா என்று போட்டிப் போட்டுக்கொண்டு அனான்சியைப் பிடித்துப் பிடித்து இழுக்கிறார்களா? அப்படித்தான் இருக்க வேண்டும். அனான்சியை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால்தானே,அது நம்மை வைத்து மகிழ்ச்சியூட்டும் கதைகளைப் பின்னும்?
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago