இடம் பொருள் மனிதர் விலங்கு: கிப்ளிங்கின் காடு

By மருதன்

‘‘இந்தக் காட்டின் வயது என்ன?’’ என்று கருஞ்சிறுத்தை பகீராவிடம் ஒரு நாள் வியப்போடு கேட்டான் மௌக்ளி. ‘‘எனக்குத் தெரிந்தது எல்லாம் ஒன்றுதான், மனிதக் குட்டி. நீ பிறப்பதற்கு முன்பே காடு இருந்தது. உனக்குப் பிறகும் காடு இருக்கும். அது நம் எல்லோரையும்விட மூத்தது. நம் எல்லோரையும்விடப் பெரியது. அதுக்கு வயதே கிடையாது.’’

ஆனால், ஜங்கிள் புக்கின் வயது நமக்குத் தெரியும், 125 ஆண்டுகள்! புத்தகமாக வெளிவந்தபோதே பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்ட ஜங்கிள் புக், பின்னர் வால்ட் டிஸ்னியால் திரைப்படமாக எடுக்கப்பட்டபோது இன்னமும் பிரபலமானது.

அத்தோடு விட்டார்களா? ஒரு படம், இரண்டு படம், இன்னொரு படம், மேலும் ஒன்று என்று பலமுறை பல விதங்களில் எடுத்துத் தள்ளிவிட்டார்கள். சமீபத்தில்கூட ஒரு புதிய ‘ஜங்கிள் புக்’ படம் வெளிவந்தது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து இன்னொன்று வரும். அப்போதும் கூட்டம் அலைமோதும். காரணம், ஜங்கிள் புக் நமக்கு மிகவும் நெருக்கமான ஒரு கதை.

உண்மை. ஆனால், அது நேர்மையான கதையா? இந்தச் சந்தேகம் வருவதற்குக் காரணம் ருட்யார்டு கிப்ளிங். பம்பாயில் பிறந்து, பிரிட்டனில் கல்வி கற்று, மீண்டும் இந்தியா வந்து பத்திரிகைத் துறையில் இணைந்து எழுத ஆரம்பித்தவர் கிப்ளிங்.

கதை, கட்டுரை, கவிதை, நாவல் என்று அவர் எழுதியவற்றில் இந்தியாவுக்கென்று ஓரிடம் எப்போதும் இருந்தது. குறிப்பாக ‘ஜங்கிள் புக்’ முழுக்கவே இந்தியாவில் நடைபெறும் ஒரு கதை. அந்தக் கதையை நான் மிகுந்த உற்சாகத்தோடு எழுதினேன் என்று மகிழ்கிறார் கிப்ளிங்.

ஆனால், ‘கிப்ளிங் ஜங்கிள் புக்’ எழுதியபோது, இந்தியா மகிழ்ச்சியான நாடாக இல்லை. கிப்ளிங்கின் தாய்நாடான பிரிட்டன் இந்தியாவை ஆக்கிரமித்து, ஆண்டுகொண்டிருந்தது. இந்தியாவை மட்டுமல்ல உலகம் முழுக்கப் பல நாடுகளை பிரிட்டன் இப்படி அடிமைப்படுத்தி வைத்திருந்தது.

இவை எல்லாம் ஏழை நாடுகளாக இருந்தாலும் அவற்றை ஆண்டுகொண்டிருந்த பிரிட்டன் மட்டும் பளபளவென்று வைரம்போல் மின்னிக்கொண்டிருந்தது. இது அநீதி. இது எங்கள் நாடு. எங்கள் நாட்டை நாங்கள்தான் ஆள வேண்டும். உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று இந்தியர்கள் எதிர்த்தபோது, பிரிட்டனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் கிப்ளிங்.

நியாயப்படி எங்களுக்கு நீங்கள் நன்றிதான் சொல்ல வேண்டும். ஏன் எதிர்க்கிறீர்கள் என்றே புரியவில்லை என்றார் கிப்ளிங். உங்களுக்காக நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் தெரியுமா? குடும்பம் குட்டிகளோடு ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து இந்தியா வந்து, இந்த வேகாத வெயிலில் உயிரைக் கொடுத்து எவ்வளவு நல்ல காரியங்கள் செய்திருக்கிறோம் தெரியுமா? கல்வி என்றால் என்ன என்று தெரியுமா உங்களுக்கு? அரசியல், ஆட்சி, அரசாங்கம் இதை எல்லாம் முன்பின் கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா? ரயில் என்றால் என்ன என்று தெரியுமா? இதை எல்லாம் யார் கொடுத்தார்கள்? நாங்கள்தானே? ஐயோ, பாவம். ஒன்றும் தெரியாத மக்களை ஒழுங்குபடுத்தி, நாலு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைத்தது ஒரு தப்பா?

இந்தியா என்பது நாடல்ல. அது ஒரு காடு. நாகரிகத்தின் சின்ன ஒளிகூட உள்ளே போக முடியாத அளவுக்குக் காடு முழுக்க இருள் நிறைந்திருக்கிறது. அந்த இருளில் ஓநாய்கள் கூட்டம் கூட்டமாக வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. ‘ஹிஸ்ஸ்ஸ்’ என்று தன் நீண்ட நாக்கை வெளியில் நீட்டி அனைவரையும் விழுங்கக் காத்துக்கொண்டிருக்கிறது ‘கா’ என்னும் மலைப்பாம்பு. நெருப்புத் துண்டுகளைப்போல் மின்னும் கண்களைக் கொண்டிருக்கும் புலி ஷேர் கானைப் பாருங்கள். கரடிகளும் யானைகளும் சிறுத்தைகளும் கவலையின்றி காட்டில் சுற்றிக்கொண்டிருப்பதைப் பாருங்கள்.

காட்டுக்கு விதிகள் இல்லை. சட்டம் இல்லை. கல்வி இல்லை. அதெல்லாம் தேவையில்லை, சுதந்திரம்தான் வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள். சரி, கொடுத்துவிடுகிறோம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். என்னாகும் தெரியுமா? விலங்குகள் தங்களுக்குள் மோதிக்கொண்டு அழிந்துபோகும்.

விலங்குகள் இல்லாத காடும் ஒருநாள் மறைந்து போகும். இந்தப் பேராபத்திலிருந்து காட்டையும் அதிலுள்ள உயிர்களையும் காப்பதற்கு ஒரு மௌக்ளி தேவை. அதைத்தான் பிரிட்டன் உங்களுக்கு அளித்திருக்கிறது. மௌக்ளி சாபமல்ல, வரம்.

இது காடு. ஒரு மனிதனான மௌக்ளிக்கு காட்டில் என்ன வேலை? அவன் மனிதர்களோடு இருந்துகொள்ளட்டுமே என்கிறீர்கள். ஆம், மௌக்ளி அந்நியன்தான்.

ஆனால் இருளும் ஆபத்தும் நிறைந்த காட்டைச் சீர்செய்ய வேண்டுமானால் வெளியில் இருந்து ஒருவன் வந்துதானே ஆக வேண்டும்? அதுதானே அவன் வேலை? அவன் யாருக்காகத் துயரப்படுகிறான்? காட்டுக்காகத்தானே? உங்களுக்காகத்தானே? எங்களுக்கு ஒளி கொடுத்ததற்கு நன்றி, மௌக்ளி.

எங்களை ஆபத்திலிருந்து மீட்டதற்கு நன்றி மௌக்ளி, என்றல்லவா நீங்கள் சொல்ல வேண்டும்? ஏன் வீணாக எதிர்க்கிறீர்கள்? கிப்ளிங்கின் காடு மறைத்து வைத்திருக்கும் இன்னொரு முகம் இதுதான்.

இறுதியில் பகீரா சொன்னது சரியாகிவிட்டது. பிரிட்டன் வருவதற்கு முன்பு இந்தியா இருந்தது. அவர்கள் எல்லா அட்டகாசங்களையும் செய்துவிட்டு, சென்ற பிறகும் இந்தியா இருக்கிறது. எல்லோரையும்விடப் பெரியதாக, எல்லோரையும்விட மூத்ததாக, எல்லாவற்றையும் பார்த்துப் புன்னகை செய்தபடி அது வாழ்ந்துகொண்டிருக்கிறது. எதைக் கண்டும் அஞ்சாத காடுபோல.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்